May 13, 2012

வாழ்க்கை அழகானது - CHILLAX

நான் விமலா, வயசு 23 சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றேன்.. என் தோழி திவ்யா பார்க்க சொன்னா. உங்கள அவசரமா பார்க்கணும், முக்கியமான விஷயம் பேசணும் வக்கில் சார்.. நான் உங்கள பார்க்கதான் வந்துட்டு இருக்கேன் என்று மொபைல் போனில் பேசிக்கொண்டு பேருந்தின் வலது ஓர ஜன்னலில் மழை சிந்திய கண்ணாடியை கோலம்மிட்டபடி அமர்ந்து இருந்தாள்.

கண்களில் கண்ணீர் கோர்த்தபடி மனதில் பல குழப்பமான கேள்விகளுக்கு பதில் தெரியாமல் மிகுந்த கவலையுடன் காணப்பட்டாள். வாழ்கை எப்படிலாம் மாறுது, நாம ஒன்னு நினைக்கிறோம் தெய்வம் ஒன்னு நினைக்குது... என்று மனதில் முனங்கியபடி இருந்தாள். பேருந்து நிறுத்தத்தில் ஒரு வயதான தம்பதி ஏற விமலாவின் இருக்கை அருகே இருவரும் அமர்ந்தார்கள். அந்த வயதான தம்பதிக்கு வயது எழுபதிற்கு மேல் இருக்கும். 

‘ஏம்மா சிவகாமி வாடை காத்து வீசுது உனக்கு ஒத்துக்காது இந்த மப்ளர தலைல கட்டிக்கோ தாயி’ என்று அந்த முதியவர் கையில் இருந்த சின்ன கூடையில் இருந்து அந்த பாட்டிக்கு மப்ளர கட்டி விட்டார்.. பாட்டி சிரித்தபடி விமலாவிடம் ‘உங்க தாத்தாவுக்கு என்  மேல பாசம் அதிகம் பாரு’னு சொல்ல விமலாவிற்கு உதட்டில் சிறு புன்னகை. மழையுடன் மாலை நேர பயணத்தில் குளிர்ந்த காற்று வீச விமலா பேருந்து ஜன்னலை மூடினாள்.
குளிர்ந்த காற்றில் தாத்தாவின் கை நடுங்க தன் மேலில் இருந்த சால்வையை பாட்டி தாத்தாவிற்கு போர்த்தி விட்டு சேலையை இழுத்திபோர்த்தியபடி தாத்தாவின் கையை பிடித்து கொண்டார். ‘அவர்கிட்ட அப்பவே சொன்னேன் மழை பெய்யுது நாளைக்கு காலைல டாக்டர்கிட்ட எனக்கு போய் காட்டலாம்னு கேட்காம இப்போ பாருமா ரொம்ப குளிருது அவருக்கு’ என பாட்டி விமலாவிடம் சொல்ல.. ‘உன்னோட மருந்து தீந்து போச்சுல சிவகாமி அதுனால தான் நான் புறப்பட சொன்னேன் பரவாயில்லை இன்னும் இருவது நிமிஷம் தான் கிளினிக்கு ஸ்டாப், இறங்க போறோம்’ என்றார் தாத்தா..

இந்த தள்ளாத வயதிலும் இவர்கள் இருவருக்கும் உள்ள அன்னோனியமான அன்பை கண்டு விமலாவிற்கு கண்ணில் தாரை வார்த்தது. விமலாவின் கண்ணீரை கண்ட பாட்டி \"ஏம்மா அழுகுற என்ன ஆச்சு\" என்றாள்.. \"உனக்கு ஏதும் முடியலையா என்ன ஆச்சு மா\" என விமலாவிடம் கேட்க அழுத படி விமலா ஒன்னும் இல்ல பாட்டி என்றாள். \"சொல்லுமா நான் உனக்கு பாட்டி மாறி, சொல்லுமா ஏன் அழுகுற அழுகாத தாயி\" என்றாள் பாட்டி. ‘எனக்கும் என் புருஷனுக்கும் ஒரே சண்டை பாட்டி, இனிமே எனக்கு அவரோட ஒத்துவாழ முடியாது. நானும் அவரும் வீட்ட எதிர்த்து காதலிச்சு தான் கல்யாணம் பண்ணினோம். எங்களுக்குள்ள நல்ல ஒத்துமை இருந்துச்சு, இப்போ எப்போதும் சண்டை சச்சரவு தான்.. என்னால இனிமே அவரோட வாழ முடியாது பாட்டி’.. என்று அழுதபடி பாட்டியுடன் கூறினாள்.

விமலாவின் கண்களை பாட்டி துடைத்தபடி \' இங்க பாருமா ஏதும் அவசர படாதே, இப்படிலாம் பேசாதே கண்ணு நீ நல்லா வாழனும் தாயி, குடும்பம்னா சந்தோசம் கஷ்டம் எல்லாம் இருக்கும் கண்ணு, பொம்பளைங்க நாம தான் அனுசரிச்சு போகணும், பிரியறது பத்தி யோசிக்கிற நீ சேர்ந்து வாழ்றத பத்தி யோசிச்சு பாரு நல்லா இருக்கும். இப்போ உள்ள புள்ளைங்க புரிஞ்சுக்காம காதல் பண்ணி கஷ்டபடுறிங்க.. நானும் உங்க தாத்தாவும் இத்தனை வருசமா சேர்ந்து இருக்கோம், எங்களுக்குள்ளயும் சண்டை சச்சரவு எல்லாம் இருக்கு ஆனா அதுக்கு மேல எங்ககிட்ட அன்பு, விட்டுகொடுத்து போறது, அனுசரணை இருந்ததுனால நாங்க இவ்வளவு வருஷம் சேர்ந்து இருக்கோம்..  வாழ்க்கை ரொம்ப அழகானது நாம தான் நம்மள கஷ்டபடுதிகிறோம்..  நான் வாழ்ந்த பொம்பளை, உன்னோட பாட்டி மாறி நான் சொல்லறத கேளுமா.. நீ காதலிச்ச பையன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் என்ன, நல்லா வாழு தாயி... சந்தோசமா வாழு..  போ போயி அந்த தம்பிகிட்ட நல்லா மனசுவிட்டு பேசு, கோவபடாம அன்பா பேசு தாயி எல்லாம் சரி ஆயிடும்… பாட்டியின் இந்த வார்த்தைகள் விமலாவின் மனகுளப்பதிற்கு ஆறுதலாகவும் விடையாகவும் அமைந்ததாக எண்ணினாள்.எங்கள மாறி நீங்களும் சந்தோசமா இருக்கணும் தாயி என்றார் தாத்தா..

அந்த வயதான தம்பதி இருவரும் விமலாவை மகிழ்ச்சியுடன் அனுப்பினார்கள். இந்த வயதான தம்பதிகளின் அன்பும் வழக்கை முறையும் அவளுக்கு தன் இல்லறவாழ்கையில் நம்பிக்கை ஏற்படுத்தியது. தாத்தாவிற்கும் பாட்டிக்கும் நன்றி கூறி விமலா அடுத்த நிறுத்தத்தில் இறங்க தயாரானாள். தன் கணவனை விவாகரத்து செய்ய வக்கில்லை காணப்போய்க்கொண்டுருந்த விமலா அடுத்த நிறுத்தத்தில் இறங்கிதன் கணவனைக்காண சென்றாள். தான் அவசரமான முடிவை எடுத்ததிற்கு வருந்தியபடியே தன் கணவனை கைபேசியில் அழைத்தாள்..

No comments:

Post a Comment