August 21, 2013

இன்றைய இந்திய ஜனநாயகம்

 
 
 
 
 
 
 
பல கோடி ஊழலும்
இன்று சாதாரண செய்தி
பசியும் வறுமையும் ஒரு பக்கம்
சொகுசும் செழிப்பும் ஒரு பக்கம்
பணமிருந்தால் அயல்நாட்டில் சிகிச்சை
பாமரனுக்கு சிகிச்சை பலனின்றி மரணம்
ஏழை மிக ஏழையாக மாற
பணக்காரன் கோடீஸ்வரனாக மாற
பொருளாதாரம் வழியும் அமைத்தது
கள்ள ஓட்டு,
பண பட்டுவாடா,
இலவச பிச்சை
என மக்கள் விலையாகும் தேர்தல் களம்
பல சமூக விரோதிகள்
இன்று மக்களின் பிரதிநிதிகள்
பரம்பரைக்கே சொத்து சேர்க்கும்
அரசியல் திருடர்கள்
துறவியாய் போன காவிகள்
கோடிக்கு அதிபதிகள்
எங்கே குண்டு வெடிக்குமென
புதிருடன் மக்கள்
சாதிக்காக மதத்திற்க்காக
ஆங்காங்கே வெட்டுக்குத்து
அமைதி வேண்டி
புறாவையும் பறக்க விட
இன்றைய இந்திய ஜனநாயகம்
இந்தியமக்களை ஏமாற்றும்
ஒரு பொம்மலாட்டம்…..
--- ஆயிஷாபாரூக்  ---

August 19, 2013

திருநங்கையின் தாலாட்டு

உலகத்துல ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனையோ தாலாட்டு பாட்டு எழுதி இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு யாரும் திருநங்கை தாலாட்டு பாட்டு எழுதினது கிடையாது. தாய்மை எங்களுக்கும் உண்டு. வீட்டில் இருந்து துரத்தப்பட்ட திருநங்கைகள் பலரும் திருநங்கைகளால் தத்து எடுக்கப்பட்டு தாய்மை அடைகிறோம். என் வரிகளில் திருநங்கைக்கு ஒரு தாலாட்டு பாட்டு,திருநங்கை சமூகத்திற்கு இதை மகிழ்ச்சியுடன் அர்பணிக்கிறேன்.

 

 

 பெத்த மனம் அங்கே இருக்க

பிள்ளை மனம் இங்கே ஏங்கி நிக்க
உன் பொறப்ப குறை சொல்லி
வீட்டை விட்டு போக சொல்லி 
அழுத மனம் ஆறுதல் தேட
என் மடி தலை சாயி செல்ல மகளே….

முடமோ பிறந்தாலும் மனநிலை திரிந்தாலும்
தான் பெற்ற பிள்ளை தனது ஆகாதோ
பாலியல் மாறி பிறந்த நம்ம மட்டும்
ஊருசனம் பேச்சை கேட்டு ஒதுக்குவதேனோ
நம்ம பொறப்பு ஒசந்த பிறப்படி
நீ உறங்கு பெண்ணான ஆண்மகளே….

கருத்தரிக்க வழியுமில்லை
கர்ப்பம் சுமக்க பையும் இல்ல
ஆனாலும் நான் மலடி இல்ல
தாய்மையை உணர்ந்து ஏன் மகளா
தத்து எடுத்தேன்  வாழ்க்கை முழுக்க 
கவலையின்றி நீ தூங்கு தெய்வ மகளே….


அன்புடன்

ஆயிஷாபாரூக்