October 31, 2012

நீலம் புயலும் காதலும்... ஆண்கள் ஸ்பெஷல்

அழகான சூழல் இதமான பருவம், சாரலுடன் காற்று சொல்லவே வேண்டாம் கூட ஒரு கப்பில் சூடான தேநீர், ரசனைக்கும் கவிதைக்கும் பஞ்சமே இருக்காது. என்னோட காதலுனுக்காக எழுதினது... ஆனாலும்

இந்த கவிதைகள் அனைத்தும் ஆண்களுக்கு சமர்பிக்கிறேன்.நீ பேசுவது பொய்யென
தெரிந்தும் ரசித்தேன்
உதட்டில் பொய்யும்
உள்ளத்தில் மெய்யும்
கொண்டு பொய் பேசும்
ஆண்கள் அழகு தான்! என் காதோர ரிங்காரம்
பாடும் கொசுவிடும் சொல்வேன்
என்னை மறந்து தூங்கும்
காதலனை என்
தூதுவனாய் போய் கடி...
இதயம் ஈர்க்கும்
வசியம் அவனிடம்
மட்டுமே உள்ளது
கண்கள் குளிரவும்
கண்கள் நனையவும்
செய்பவன் அவனே
என் வசியக்காரன்
நீ பிடிக்கும் சிகரெட்டிற்கு
தெரியாது உருக்குவது
உன்னுயிர் மட்டும் அல்ல
என்னுயிரும் சேர்த்தேயென
புகைப்பதை நிறுத்திவிடு காதலனே
கரையும் சிகரெட்டை உணரும் நீ
கரையும் என் மனதை உணர்வாயோ!
 
 
 நீ முத்தமிடும் போது
என் கன்னத்தில் குத்தும்
உன் மீசை உணர்த்துகிறது
ரோஜாவை காக்கும் முட்களை...


நம்ம நீலம் புயலுக்குக்காக ஒரு குட்டி கவிதை... புயல ரசிச்சுட்டு மழைல நனைஞ்சுட்டு இந்த கவிதைய படிங்க.. அப்போ தான் SUPER EFFECT இருக்கும் !!!


  

நீலம் புயலே நீலம் புயலே
உள்ளம் கொல்லும் சூறாவெளியே
பெய்த்திடும் மழை மூலம்
குளிர் பரவி சிலிர்த்தாயே
மனம் அதிலே நனைந்தபடி
கவி எழுத அழைத்தாயே
காற்றாய் மாறி புயலானாய்
வெப்பம் தனித்து குளிரானாய்
புயலை தணிக்க மழையானாய்
சாயம் போகா நீலம் புயலே...
 
கவிதைகள் ரசிச்சு இருப்பிங்கன்னு நினைக்கிறன்...  நீலம் புயல் அமைதியாக கரையை கடக்கட்டும்... 

அன்புடன்
ஆயிஷாபாரூக்

October 25, 2012

மாண்புமிகு இந்தியர்கள்


 வல்லரசு கனவோடு பயணிக்கும் இந்தியாவில்
எங்களின் பொருளாதார பங்கும் அடங்கும்
நாங்கள் பொறுப்பாக செலுத்திய வரிகளில்
எங்களின் அடிப்படை வசதிகள் குறைந்தது
ஆதிக்கவர்க்கத்தின் அறிவார்ந்த தாக்குதல்
எங்களின் மீதே எங்கும் நடத்தப்படுகிறது
ஏகாதிபத்தியத்தின் அதிகார பண சுரண்டல்கள்
எங்களின் உழைப்பிலிருந்து உறிஞ்சுப்படுகிறது
பணம் உள்ளவர்களின் பலம் அதிகரிக்கப்படுகிறது
ஏழைகளின் வரைமுறைகள் சுருக்கப்படுகிறது
வாழ்கையின் இன்பமும் சொகுசும் இருப்பவர்கே
கலைந்த கனவுகளும் தோய்ந்த முகங்களுடன்
இழக்க எதுவுமின்றி நிர்கதியாக நிர்வாணமாக
அனைத்தும் ஊருவபட்ட நிலையில் நாங்கள்
கையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள் 
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

October 23, 2012

பெண்களின் கவனத்திற்கு...

இந்திய குடும்ப பெண்கள் தங்களின் குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி தங்களை பற்றி அதிகமாக கவனிப்பது இல்லை. இந்தியாவில் இருபத்தி இரண்டு பெண்களுக்கு ஒருவர் என மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானம் நிறுவன நோய் கட்டிகள் பற்றிய ஆய்வு பேராசிரியர் ஜுல்க தெரிவித்தார். இதே எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் எட்டுக்கு ஒரு பெண்மணி விதம் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை விட தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிகமான அளவில் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,15,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு  250,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் உயர வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிறகு சாத்தியமான கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10.9 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் பாதிக்கப்படுகின்றனர். 6.7 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் இறக்கின்றனர்.

ஆபத்து காரணிகள் :-
 • பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
 • முப்பது வயதை கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர சாத்தியக்கூறு உள்ளது.
 • கருப்பு நிற பெண்களை விட சிகப்பான பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் அதிகம் வர சாத்தியம் உள்ளது.
 • தாய்,சகோதரி, மகள் என்று அறியப்படும் நெருங்கிய உறவுகள் மற்றும் பாட்டி, சித்தி இரண்டாம் நிலை உறவினர்கள் எவருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்தால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
 • 12 வயதிலேயே வயதுக்கு வந்த பெண்கள் அல்லது 55 வயது கடந்து மெனோபாஸ் ஆகும் பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
 • கொழுப்பு நிறைந்த அதிக உணவு உட்கொள்ளும் பெண்களிடமும், மற்றும் அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
 • மது உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த மார்பக புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.
 
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:-
 • மார்பகம் உணர்ச்சியற்று இருத்தல் அல்லது மார்பகத்தில் கட்டி உருவாகுவது.
 • அக்குள்களில் அல்லது அதற்க்கு அருகில் கட்டி உருவானால் புற்றுநோய்க்கான ஒரு அடையாளம் இருக்காலாம்.
 • பெரும்பாலான மார்பக கட்டிகள் புற்றுநோய் இல்லை எனினும் ஒரு மருத்துவர் மதிப்பீடு வேண்டும்.
 • மார்பகத்தில் இருந்து இரத்தம் வருவது.
 • முலைக்காம்பில் மாறுபாடுகள்.
 • மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள் சிவத்தல், அமைப்பு மாற்றங்கள் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் பொதுவாக தோல் நோய்கள் அறிகுறிகளாக இருக்கலாம், ஆனாலும் சில நேரங்களில் மார்பக புற்றுநோய் தொடர்பில்  முடியும்.
இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு அறிந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.


மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:-

மார்பக புற்றுநோய் கண்டறிதல் வழக்கமாக மார்பக பயாப்ஸி, மேம்மோகிராஃபி, அல்ட்ராசோனோகிராபி அல்லது MRI பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மூலம் கண்டறியப்படும். மார்பக கட்டியின் அடிப்படையில் மார்பக புற்றுநோய் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தப்படும். மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படுக்கிறது, அதற்க்கு பிறகு நோயின் தீவிரத்தின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி அல்லது ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
மாதவிடாய் நின்ற பின்னர் அணைத்து பெண்களும் ஒரு தடவை மார்பக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. நம் இந்திய பெண்கள் பெரும்பாலும் பாலியல் நோயாக இருந்தாலும் மார்பக நோய் இருந்தாலும் வெளியே சொல்ல தயங்குகின்றனர். சிகிச்சை பெற முன்வருவது கிடையாது. இத்தகைய சூழல் மாற வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்October 19, 2012

கவனம் தேவை
அவசரம் அவசரம்
எதற்கும் அவசரம்
எங்கும் அவசரம் 
வண்டி ஒட்டி
வேகமாய் செல்ல
விரைந்து பறந்து
மைல்கள் கடக்க
சாலையில் சாகச
ஜாலங்கள் புரிய
சீறினேன் வண்டியோடு
கவனக் குறைவு
விதிமுறை மீறல்
அலட்சிய மனம்
விரைந்த வேகம்
ஆனது விபத்து
தலையும் சுற்ற
கண்ணும் மயங்கின 
விழித்து பார்த்தேன்
மயக்கம் தெளிந்து
காலில் தலையில்
காயக் கட்டு
வருந்தி திருந்தி
மனம் கொண்டேன்
விதி மீறல்
பயணம் முடிக்கும்   
வாகன வேகம்
வாழ்வை முடிக்கும்
அவசரம் வேண்டாம்
இனி சாலையிலே

வாகன விபத்து குறைக்க வேண்டுமெனில் வாகன ஓட்டிகளான நாம் தான் முதலில் முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். வாகனம் ஓட்டும் போது   அலைபேசி பயன்படுத்தக்கூடாது, வேகமான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது. வாகன விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். வாகன விபத்துகளை குறைக்க முற்படுவோம். மரணம் நம்மை தேடி வர வேண்டும், மரணத்தை நாம் தேடிப் போகக்கூடாது.

அன்புடன்
ஆயிஷாபாரூக் 

October 16, 2012

அவள் ஒரு பெண் தெய்வம் 
பெண்மையின் பரிசாக
கருவுற்று மாதம் பத்தும்
கருவினை சுமந்து
கடும் வலியுடன் பிரசவித்து
வேதனையிலும் குழந்தையின்
முகத்தைகண்டு புன்னகைத்த
தாயே உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!

ரத்தத்தை பாலாக மாற்றி
தன்னுயிர் பசித்தீர பாலூட்டி
அதைக்கண்டு மனம்
இன்புற்று தன்னலமில்லா
அன்பை பொழிந்து
ஈடுஇணையற்ற உறவாய்  
ஆட்கொண்ட அன்புத்தாயயே   
உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!

மனதினில் வேதனைகள்
பலயிருந்தும் மறைத்துவைத்து
அன்பையும் அறிவையும்
நல்ல பண்பையும் புகட்டி
வாழ்வின் ஒளிவிளக்காய்
வழிக்காட்டி களங்கமில்லா
மனம்கொண்ட தேவதையே
உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!
 
மீண்டும் ஒரு ஜென்மம்
பிறந்து வந்தால் உன்னை
நான் கருசுமந்து மகளாக்கி
பாராட்டி சீராட்டி அன்புதனை
பொழிந்து என் கடனை
உன் பாதமலரில் சமர்பிப்பேன்
என்னை ஈன்ற அன்புத்தாயயே 
நீயின்றி என் தெய்வம் எவரோ!

என்னுடைய நூறாவது படைப்பை என் அன்பு தாய்க்கும், உலகில் உள்ள அணைத்து தாய்மார்களுக்கும், தாயுள்ளம் கொண்ட அணைத்து மாந்தர்களுக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன். வணங்குகிறேன்.  தாய் என்பவள்  இறைவனை விட மேலான உறவு. நபிகள் பெருமானார் கூறுவது போல அவள் கால் அடியில் சுவர்க்கம் உள்ளது. நாம் என்றும் அவளுக்கு நம் அன்பையும் பணிவையும் செலுத்தவேண்டும்.

October 15, 2012

இரவின்றி பகலில்லை


தோல்வியின்றி மனமில்லை
மனமின்றி எண்ணமில்லை
எண்ணமின்றி நம்பிக்கையில்லை
நம்பிக்கையின்றி முயற்சியில்லை
முயற்சியின்றி தடையில்லை
தடையின்றி செயலில்லை
செயலின்றி வெற்றியில்லை
வெற்றியின்றி மனிதனில்லை 

உலகில் வெற்றி பெற்ற மனிதர்களை பார்த்து வியக்கிறோம்! எப்படி இவர்களால் மட்டும் வெற்றி பெற முடிந்தது, ஏன் நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்று சிந்தித்து பார்க்கிறோம். பலருக்கு வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்கையை புரட்டி பார்த்தால் சில வியப்பான உண்மைகள் நமக்கு புலப்படும். ஆம், அவர்கள் அத்தனை  சீக்கிரத்தில் வெற்றியை சுவைத்தவர்கள் கிடையாது. நம்மை விட பல தோல்விகளையும் சறுக்கல்களையும் சந்தித்தவர்கள். தடைகளை கடந்து சாதித்தவர்கள்.இந்த உண்மையை அனைவரும் உணர்ந்தால் போதும், வாழ்க்கை மிகவும் வெற்றி உள்ளதாக அமையும். தோல்வியை சந்திக்காத நபர்கள் யாரும் இந்த உலகில் கிடையாது, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, நல்ல எண்ணம் இருந்தால்  நல்ல வழியுண்டு, அதற்க்கு முதலில் மனதில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்பது மனிதனின் பலம், அதுவும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிக்கான வழி சுலபமாக கிடைக்கும். நாம் செய்யும் செயலில் நம்முடைய முழு முயற்சி கொண்டு தடைகள் பல வந்தாலும் நம்முடைய செயலில் இருந்து பின்வாங்க கூடாது. வெற்றியின்றி மனிதனும் இல்லை தோல்வியின்றி வெற்றியும் இல்லை என்பதே உண்மை. 

அன்புடன் 
ஆயிஷாபாரூக் 

October 14, 2012

ஒலித்திடு - 3

என் எண்ணங்களும் சிந்தனைகளும்....


 • வாழ்க்கை
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் வாழ்க்கை, ஆனந்தம் பூத்து குலுங்க அன்பு என்கிற ஆயுதத்தை பயன்படுத்தி வாழ்கையை அழகாக அமைப்பதும் (அல்லது) பிறர் மனம் நோக வெறுப்பை அனைவரிடமும் காட்டி வாழ்கையை ரணகளப்படுத்தி அழிப்பதும் நம் கையில் தான் உள்ளது.. எது வேண்டும் என்பதை அவரவர் முடிவு செய்யுங்கள்
 •   ஏளனம்
சித்தம் கலங்கி பேசும் சிலரின் பேச்சு எப்போதும் பலருக்கு ஞானியின் பேச்சு போல தான் தெரியும் ஆனால் உண்மையில் அவர் ஒரு பித்தரே... அடுத்தவரை ஏளனம் செய்து வாழும் வாழ்க்கை நிலைக்காது
 • அன்பும் அமைதியும்
தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் அன்பும் அமைதியும் உருவாக்க/ நிலைக்க ஒவ்வொரு மனிதனும் சிறிதளவாவது முயற்சிக்க வேண்டும். அன்பான மனிதர்கள் கொண்ட அமைதியான உலகம் அமைந்திட முயற்சிப்போம். 
 • முயற்சி
நம்முடைய கனவுகளும் ஆசைகளும் பெரிது, அதற்கு இணையாக நம்முடைய முயற்சியும் பெரிதாக இருக்க வேண்டும், அப்படி இல்லாத காரணத்தினால் தான் கனவு நினைவு ஆகாமல் கனவாகவே நீள்கிறது

 • முதியோர் தினம்
நாளை நாமும் கொண்டாடுவோம் அது நம் குழந்தைகளுடனா இல்லை தனித்து முதியோர் இல்லத்திலா என்று நம் பிள்ளைகள் முடிவு செய்வார்கள். நாம் நம் வயதான பெற்றோரை அன்புடன் மதித்து நடந்தால் தான் அதை பார்த்து நம் குழந்தைகளும் நாம் முதியவர் ஆன பிறகும் நம்மை போல அன்புடன் நடந்துகொள்வர்.
 • சுற்றுச்சுழல்
நாளைய சந்ததிகள் நம்மை பழி கூறும் வகையில் நம் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உள்ளது. பாதுகாப்பான சுற்றுச்சுழல் கொண்ட உலகம் உருவாக நம் பங்கு ஒரு சிறு அளவேனும் வேண்டும், அது எப்படி இருந்தாலும் கவலை இல்லை. ஒரு மரம் நடுவதோ அல்லது கழிவுகளை நம் வீட்டில் மறு சுழற்சி செய்வதோ, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயனில் தவிர்ப்பது, அதிக புகை கக்காமல் வாகனத்தை ஓட்டுவதோ, ஒலி பெருக்கிகளை முடிந்தவரை உபயோகப்படுத்தாமல் இருப்பது என்று நம்மால் முடிந்தவைகளை செய்து செய்து மாசுயில்லா உலகம் உருவாக முற்படவேண்டும்.
 • மௌனம்
பேசிய வார்த்தைகளை விட மௌனமான பார்வை பல பதில்கள் சொல்லும், ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு மௌனம் சிறந்தது.பிரச்சனையில்லாதாது, அமைதியானது, நிம்மதியானது
 • வானம் வசப்படும்
வானம் நமக்கு வசப்பட வேண்டும் என்றால் முதலில் நம் மனதை நாம் வசப்படுத்த வேண்டும்.. ஏனேன்றால் மனதின் தேவைகளை விட வானத்தின் உயரம் குறைவே.. மனம் எதையும் சாதிக்கும், எதையும் தோற்கடிக்கும்.
 • சமூக கட்டமைப்பு
மனிதன் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொண்டது தான் அவன் உருவாக்கிய சமூக கட்டமைப்பு. மனிதரில் பல வேற்றுமைகளை உருவாக்கி தன்னை தானே எதிரியாக்கி கொண்டான். இந்த சமூக கட்டமைப்பில் பெரும்பான்மையான வசதிகள் பணம் உள்ளவர்களுக்கே சாதகமாக உள்ளது.  
 • தீண்டாமை
தனது பீச்சாங்கையால் தன்னுடைய மலத்தை கழுவும் மனிதன் தனது வலது கையால் கழிவு அள்ளும் மனிதனின் கையைத்தொட மறுக்கிறான். கழிவு அள்ளும் மனிதனின் மனதில் அசிங்கம் இல்லை.. தொட மறுக்கும் மனிதனின் மனதில் தான் அசிங்கம் உள்ளது.
 •  நான்
ஒரு சிலர் மட்டுமே தேடும் உண்மையான நிலை, கண்ணிற்கு அப்பாற்பட்டு மனதில் ஒளிந்துள்ள ஒரு தன்னிரைவற்ற ஆழ்ந்த அமைதியான பிரபஞ்சம். அங்கே எந்த சலனமும் குழப்பமும் இல்லை. அறிந்தவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
 • பணம்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கம் அனைவருக்கும் உள்ளது. பெரும்பாலும் மிக விரைவிலே அதிக பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆவலில் உண்மையான வழியை கைவிட்டு தவறான வழியை உபயோகித்து பணம் சேர்கின்றனர். அல்லது அவர்களுக்கு அமையும் வாய்ப்பை பயன்படுத்தி தவறான வழிகளில் பணம் சேர்கின்றனர். கடைநிலை ஊழியர் முதல் அலுவலகத்தின் பொது மேலாளர் வரை இந்த நகழ்ச்சி நடக்கிறது. இது எல்லா துறைக்கும் பொருந்தும்! நியாயமாக பேசும் சிலர் கூட இப்படி பட்ட வாய்ப்பு வந்தால் மனம் குறுகுறுத்தாலும் கவலைபடாமல் பணம் சேர்கின்றனர். எல்லாம் பணம் செய்யும் மாயம் தான் இது!
 •  சூழ்நிலை
மனம் விரும்பும் பாதையில் செல்ல நாம் நாடினாலும், நம் சுழல் அதன் பாதையில் தான் நம்மை அழைத்து செல்கிறது.நம் வாழ்வின் பயணத்தை நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலைகளே பெரும்பாலும் தீர்மானிக்கிறது, அந்த பயணத்தின் முடிவே ஒன்று வெற்றியாகவோ தோல்வியாகவோ முடிகிறது. செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பது அவரவர் அனுபவம் அறிவைக்கொண்டு
அறியப்படுகிறது. பெரும்பாலும் நமக்கு குழப்பம் என்னவென்றால் எந்த பாதையில் போவது என்பதை பற்றி தான்?
 • உறவுகள்
கண்ணாடி பாத்திரம் போன்றது உறவுகள்; நிதானமாக கையாள வேண்டும். உடைத்துவிட்டால் மறுபடியும் சேர்ப்பது கடினம் கண்ணாடி துகள்கள் போல. சேர்ந்தாலும் அந்த பழைய பசை (பாசம்) இருக்காது.
 • தேடல் 
நம் மனது எதை தேடி பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே பாதி வாழ்க்கை தேவைபடுகிறது, மனதின் தேடலை நிறைவேற்ற மீது காலங்கள் பயணப்படுகிறது.

அன்புடன் 
ஆயிஷாபாரூக்

October 11, 2012

முத்த தழும்பு
 குத்தும் உன் முகத்தாடியில்
முத்தமிட்ட என் இதழ்கள்
தடயம் பதித்த காதலின்
சின்னமாய் உன் மனதினில்
துடிக்கும் அன்பின் வலியாய்
இதயத்தில் நினைவை தூண்டும்
நான் உனக்காக வாழ்பவள்
உன் நினைவினில் வாழ்பவள்
என்றும் உன்னவளாய்
நீ வரும் திசைப்பார்த்து
காத்திருப்பதை நித்தம் சொல்லும்
நான் பதித்த முத்த தழும்புகள்...

அன்புடன்
ஆயிஷாபாரூக்

October 6, 2012

நான் அடிமை இல்லை


பூட்டுக்கள் போட்டாலும்
நிற்காத காற்று நான்
கைகளால் மறைத்தாலும்
ஒளிவீசும் சூரியன் நான்
நீல வான குடையினிலே
ஊர் சுற்றும் பறவை நான்
சட்டங்கள் எனக்கு எதற்கு
வானில் பறக்க தடை எதற்கு
அடிமை காற்றை சுவாசிக்க நான்
உன்னை போன்று மனிதனில்லை
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

October 4, 2012

புணர்ச்சி மகிழ்தல்


 
உன் தோளில் முகம் சாய்த்து
விரல்கொண்டு விண்மீன்களை எண்ணி
ஆறத்தழுவும் உன் கைகளில்
சாறுகள் கொய்ந்த அமிழ்தகனியாய்
நழுவிய நறுமண மாலையாய்
உனது பொன்மேனியில் புரண்டோட
அன்பின் பிறப்பிடமாய் நீ அணைத்து
சுகத்தின் ஊற்றாய் இன்பம்தனை  
ஊடலுடன் கூடல் விளையாட்டை
நீ என்னுள் ஆடி களைத்திட
சூடான உன் மூச்சு துடிப்பில்
தாகம் தீர்த்திட உயிர்த்துளியாய்
தேனில் விழுந்த மலர் இதழாய்
மனமறியாது மனமயங்கி
பெற்ற  சுகம்தனை வையகம்
மறக்க மயங்கினேன் உனது
தோளில் துயில் சாய்ந்தபடியே!....

காமம் என்பது அனைவருக்கும் பொதுவான உணர்வு, புணர்ச்சி பற்றிய கவிதைகள் பெரும்பாலும் பெண்கள் எழுதுவது இல்லை, காரணம் ஆணாதிக்கம் படைத்த உலகில் எழுதினால் விமர்சிக்கப்படுவது கவிதை மட்டும் அல்ல அந்த பெண் எழுத்தாளரின் குணத்தையும் பற்றி தான். அதை தகர்த்தெறியும் முயற்சியாக என் கவிதை பெண்கள். திருநங்கைகள் சார்பாக... கவிதை எழுதுபவர் அணைத்து வித ரசனைகளையும் எழுத வேண்டும்.. உலகில் அனைத்தும் ரசிக்கபடுப்பவையே..
 
 அன்புடன்
ஆயிஷாபாரூக்

October 2, 2012

உலகம் நமக்கு மட்டும் சொந்தம் அல்ல


பெறுகிய தொழில்துறை வளர்ச்சி, வீடு மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், புகை, கதிரியக்கம், போக்குவரத்து அதிகரிப்பு, நகரங்ககளின் விரைவான வளர்ச்சி, இயற்கை வளங்களை தவறான முறையில் கையாண்டது போன்ற காரணங்களால் இன்று மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு நாம் ஆளாகியுள்ளோம். இன்றைய நவநாகரீக வாழ்வியல் முறை காரணமாக பலவகையான சுற்றுச்சுழல் பிரச்சனைகள் பல்வேறு வகைகளில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, நில மாசுபாடு, இரைச்சல் மாசுபாடு என்று அவதியுறுகிறோம். சுற்றுச்சுழலை காக்க, மாசுபாடு இல்லா சூழ்நிலை உருவாக ஒரு சில தரப்பினரே முன்வருகின்றனர். படித்த சிலரே தெரிந்தும் சிலவகையான சுற்றுசுழல் மாசுபடுகளை செய்கின்றனர். வீட்டையும் நாட்டையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகமாக உள்ளது.

இந்தியர்கள் இயற்கை வளத்தை காக்க பழமைத்தொட்டே பல சட்டங்களை வகுத்துள்ளனர். உங்களின் கவனத்திற்கு சில,  கி.பி. ஐந்தாம் ஆம் நூற்றாண்டில் யஜ்னவல்கியா ஸ்மிருதியின் நிலவரைவு சட்டப்படி மரங்களை வெட்டுவது தண்டனைக்குரிய சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. மௌரிய காலத்தில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் என்கிற நூலில் வன நிர்வாகம் பற்றி வலியுறுத்தியுள்ளனர். மாவீரர் அசோகரின் சின்னத்தில் சுழல் மற்றும் பல்லுயிர் நலன்களை பற்றிய சின்னம் உள்ளது. இயற்கை வளங்களை காப்பதில் பண்டைய இந்தியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. நம்முடைய மூதாதையர் நமக்கு நல்ல சுத்தமான உலகை தந்துவிட்டு சென்றுள்ளனர், ஆனால் நம் வருங்கால சந்ததி மக்களுக்கு நாம் சுகாதாரமான உலகை கொடுக்க தவறி வருகிறோம். நம்மால் உண்டாக்கபடும் மாசுபாடுகள் காரணமாக நம்மை நம்பி இருக்கும் பிற உயிரனமும், மரம் செடி வகைகளும் அழிவிக்கு ஆளாக நேரிடுகிறது. நம்முடைய எதிர்கால சந்ததிகள் நலமுடன் வாழ நாம் அவர்களுக்கு ஒரு சிறப்பான சுகாதாரமான உலகத்தை கொடுக்க வேண்டும்.

130க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் காற்று மாசுப்பாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி கடுமையான சுவாச தொற்று நோய்கள் ஏற்பட்டு பெரும்பாலான குழந்தைகள் இந்தியாவில் மடிவதாக கூறியுள்ளது. இந்தியாவில் சராசரியாக  13% மக்கள் கடுமையான சுவாச தொற்று நோய்கள் காரணமாக இறக்கின்றனர். 132 நாடுகளில் மாசு படிந்த காற்று துகள் கொண்ட நாடாக 125 ஆவது இடத்தில இந்தியா திகழ்வது மிகவும் வருத்தமான ஒன்று. அதிகமாக மாசுப்படிந்த காற்றுத்துகள் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா உலகின் ஏழாவது மிக சுற்றுச்சூழல் அபாயகரமான நாடு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்மயமாக்கல் மனித சமுகத்தின் வளர்ச்சிக்கு சந்தேகமின்றி பெரிதும் உதவிய அதே நேரம் நகரமயமாக்கலுக்கும் வழிவகுத்தது. வேலை தேடி நகரங்களுக்கு பல லட்ச கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வு ஏற்பட்டதன் காரணமாக ஏடாகூடமான வளர்ச்சியும் தொழில் நகரங்கள் சந்தித்து அதே வேளையில் அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்பு கட்டமைப்பு, சுற்றுசுழல் சுகாதார சீர்கேடு, சாலை வசதிகள், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றில் தொழில் நகரங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. அதிக மக்கள் தொகை நெருக்கம், பொருளாதார ஏற்ற தாழ்வுகள் போன்ற காரணங்கள் போதிய காற்றோட்டம் இல்லாத சுகாதார சீர்கேடு கொண்ட குடிசைகள் கொண்ட பல சேரிகளை நகரங்கள் உருவாக்கியது, பல குற்ற செயல்கள் கொண்ட கூடாரமாக சேரிகளை மது, போதை அடிமைகள் மற்றும் சமூக விரோதிகள் பயன்படுத்தினர்.

என் சிந்தனையில் தோன்றிய வரிகள்... 

சுத்தமான காற்று வேண்டும்
பசுமையான மரங்கள் வேண்டும்
தூய்மையான தண்ணீர் வேண்டும்
தெளிந்த நீர்நிலைகள் வேண்டும்
அமைதியான சாலை வேண்டும்
சத்தம்மில்லா பயணம் வேண்டும்
மாசுயில்லா ஆகாயம் வேண்டும்
துகள்களில்லா சுவாசம் வேண்டும்
நோய்யில்லா வாழ்வு வேண்டும்
நலமுடன் வாழவழி வேண்டும்
இயற்கை பொழிந்த பூமி வேண்டும்
மாசுயில்லா லோகம் வேண்டும்

பல உயிரினமும் நலமாய் வாழவேண்டும் 

பெரிய நகரங்களில் வாழும் மக்கள் மரங்களில் மூலம் கிடைக்கும் சுத்தமான பசுமையான காற்றை சுவாசிக்க மறந்தார்கள், வாகனங்களின் புகையில் உண்டான மாசுபடிந்த காற்றை சுவாசிக்க பழகினர். மேலும் நகரங்களில் வாகன ஓட்டிகளின் வண்டிகளில் இருந்து எழும் சப்தம் அதிக ஒலி மாசு ஏற்பட காரணாமாக அமைந்தது, அதன் விளைவு சிலருக்கு காதுகேளாமை அதிகமானது. வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை,  ஆஸ்துமா முதல் பல கொடிய சுவாச புற்றுநோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கும் வழிவகுத்தது. அகற்றபடாத பல பொருட்கள், தேங்கி நிற்கும் சாக்கடை நீர், தொழிற்சாலைகளின் கழிவுகள், உரங்கள், மருந்து கழிவுகள் என்று நீரையும் மாசுபடுத்தின. ஒருவகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் மாசு படிந்த உலகமாக மாற்ற பெரிதும் உதவுகிறோம். நாளைய சந்ததிகள் நம்மை பழி கூறும் வகையில் நம் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உள்ளது.

நம்மால் அனைவரையும் மாற்றமுடியாது ஆனால் நாம் மாறலாம், பாதுகாப்பான சுற்றுச்சுழல் கொண்ட உலகம் உருவாக நம் பங்கு ஒரு சிறு அளவேனும் வேண்டும், அது எப்படி இருந்தாலும் கவலை இல்லை. ஒரு மரம் நடுவதோ அல்லது கழிவுகளை நம் வீட்டில் உள்ள மறு சுழற்சி செய்வதோ, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயனில் தவிர்ப்பது, அதிக புகை கக்காமல் வாகனத்தை ஓட்டுவதோ, ஒலி பெருக்கிகளை முடிந்தவரை உபயோக படுத்தாமல் இருப்பது என்று நம்மால் முடிந்தவைகளை செய்து செய்து மாசுயில்லா உலகம் உருவாக முற்படவேண்டும்.  மாசு ஏற்படும் வகையில் நம் செயல்கள் இருக்காதவாறு நாம் வாழ கற்க வேண்டும்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்