May 13, 2012

எங்கே செல்கிறது தமிழகம்?






"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது". 

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே என்று கூறிய திருவள்ளுவர் வாழ்ந்த பூமி நம் தமிழ் நாடு.

இல்லறம் நல்லறமாக அமைய நம்முடைய தலைமுறையினர் நமக்கு கூறிய அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் ஏராளம். கூட்டு குடும்பதிற்கும், தாம்பத்திய வாழ்விற்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் தமிழர்கள் விளங்கினார்கள். அனால் இன்று உள்ள நிலைமை உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வியப்பாக இருந்தாலும் இது தான் இன்றைய நிலவர உண்மை.

கணவன் மனைவியிடம் பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, அன்பான அனுசரணை, தாம்பத்திய உறவில் குறைவு ஆகியவை குறைந்ததால் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிகம் சம்பாத்தியம் கொண்ட தம்பதியர்கள் மிகுதியாக உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்காமல், வேலை மற்றும் பணம் சம்பாதிப்பதில் கூறியாக உள்ளனர்.இன்றைய இளைய சமுதாயம் காதல் என்ற பெயரில் பருவகால மோகத்தில் மயங்கி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்கிறார்கள்.

பாரதி கண்ட புதுமை பெண்ணாக இன்று பல பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி உள்ளனர். ஆனால் ஒரு சில பெண்கள் ஆண்களை அடக்கி ஆள்வது தான் புதுமை பெண்ணியத்தின் பொருள் என்று தவறாக நினைகிறார்கள். அவர்கள் ஆணவம், திமிருடுன் கணவனை கூட மதிப்பது இல்லை. பெண்கள் வீரமாக இருக்க வேண்டும் தங்களை காப்பதில்; கணவனை அடக்கி ஆள்வது தான் வீரம் என்று தவறாக நினைகிறார்கள். அது பெண்மை இல்லை. பெண்மை என்றால் அன்பு, அடக்கம், நாணம்,பொறுமை, அரவணைப்பு கலந்தது. குடும்பத்தை அன்புடன் நிதானமாக சாதுரியமாக அனைவரும் மகிழும்படி வழிநடத்தி செல்வதில் தான் புதுமை பெண் வெற்றி அடைகிறாள்.

ஆண்களும் பெண்களுக்கு உரிய அன்புடன் சமவாய்ப்பும், மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டும். அப்போது தான் ஆண்கள் பெண்களிடம் உண்மையான பெண்மையை அவர்கள் உணர முடியும். குடும்பம் ஒரு கோவிலாகும், அதை இனிமையாக சிறப்பாக வழிநடத்தி கணவனும் மனைவியும் செல்லவேண்டும். அன்பான ஒற்றுமையான கட்டுக்கோப்பான குடும்பத்தை மேற்கொள்ள இருவரும் முயற்சிக்க வேண்டும். வாழ்கை ஒருமுறைதான் அதை அழகாக மாற்றுவது நம் கையில் உள்ளது. வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment