December 30, 2013

புத்தாண்டு கவிதை

கிழித்து வீசப்பட்ட தேதிகளில்
நல்லதும் கெட்டதும் கலந்து 
இன்பமும் துன்பமும் நிறைந்து
ஏற்றமும் இறக்கமும் பயணித்து
சேர்க்கையும் பிரிவும் தொடர்ந்து
வெற்றியும் தோல்வியும் வந்து
வரவும் இழப்பும் பெற்று
இறப்பும் பிறப்பும் கண்டு
உலகில் எதுவும் நிலையாது  
என நாட்காட்டி உணர்த்தியது
வருடம் வந்து போனாலும்
எந்த நிலையும் எதிர்கொண்டு
வருந்தாமல் வாழ்ந்து வந்தால்
வாழ்க்கை என்றும் இனிக்கும்
நாட்கள் யாவும் சிறக்கும்
மகிழ்ச்சி எங்கும் பரவும்
  
***********

கிழிகப்பட்ட தேதிகளை
சுமந்த நாட்காட்டிக்கு
புது வருடம் தொடக்கம்
தவறவிட்ட நேரத்தை
இழந்த மனிதனுக்கு
ஒவ்வொரு நாளும் தொடக்கம்....

                                                                                    

என் தோழமைகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 by ஆயிஷாபாரூக் 

December 29, 2013

கவிதை மிக்ஸ்....

தாய்மை

 அர்த்தமில்லாத வாழ்கையும்
ஜீவனாகி போனது
கருவரையில் உன்னை
சுமந்த போதுஉனக்குள் நான்...  
எழுதிய கவிதைகளிலும் நீ
எழுதுகின்ற வார்த்தைகளிலும் நீ
எழுதாத எண்ணங்களிலும் நீ
என்னை சுற்றி நினைவுகளாய் நீ
என்னை உனக்குள் தேடி தெரியும் நான்... 


 டிசம்பர் 26 - 2004   

கடலினை பார்த்த சந்தோஷம்
துள்ளிக் குதித்து கால் நனைக்க
கடல் அலையிடம் சென்றாள்
ஒருசேர உள்ளே அணைத்துவிட்டு
ஆர்பரித்தது ஆழிப்பேரலை
அசையாது ஒதுங்கினாள் பிணமாக
கரை முழுவுதும் துக்கம்....


புண்ணிய ஆத்மாக்கள் விவசாயிகள்..

உணவிற்கு நாம் உழைக்கலாம் ; 
உணவை உருவாக்க உழைக்கும்
புண்ணிய ஆத்மாக்கள் விவசாயிகள்......
மண்ணை பயிராக்கவும்
பஞ்சத்தை செழிப்பாக்கவும்
வறுமையை வளமையாக்கவும்
பசிபட்டினியை இல்லாமையாக்கவும்
தரணியை உயிராக்கவும்
நிலத்தினை செழிமையாக்கவும்
உயிர்களுக்கு உணவு அளிக்கும்
உயர்வான உன்னத பணிக்கொண்டு
உயிர்வோடு வாழ வழிசெய்யும்
விவாசாயி அனைவருக்கும்
மனமார நன்றி சொல்வோம்….

ஆயிஷாபாரூக் 

December 10, 2013

முத்தச்சுவை

சத்தமில்லாது நீ கொடுத்த
முத்தத்தில் உயிர்நாடி அதிர்கிறது
முத்தத்தின் இலக்கணங்களை
இலக்கங்கள் வைத்து உணர்த்திட்டாய்
காட்சியில் இல்லாத பூக்களும்
தென்படாத பட்டாம்பூச்சிகளும்
மலர்ந்து நம்மை சுற்றி பறந்தன
என்னுடலின் பாகங்கள்
யாழினை மீட்டியதோர் போல
உமிழ்நீர் சுவையோடு
மயங்கியபடி உன்னில் என்னை
நொடி நொடியாக தொலைத்தேன்
காமக்கதவுகளின் தாழினை தேடியப்படி....

 

 ஆயிஷாபாரூக்

வேலை இடத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளை எதிர்க்கொள்வது எப்படி ? Handling Sexual Harassment at Workplace

பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள்
மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அலுவலகத்தில் அல்லது வேலை செய்யும் இடத்தில பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். தங்களின் பொருளாதார நிலையை மேன்படுத்தவும், தங்களின் வாழ்வாதார நிலையை சரிசெய்யவும் சில பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். ஒரு சில குடும்பங்கள் வேலைக்கு செல்லும் பெண்களின் வருமானத்தை நம்பியே உள்ளது.

குடும்ப சுமை, வாழ்கையில் நெருக்கடி போன்ற காரணங்களால் வேலைக்கு செல்லும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அனுசரித்து செல்லவேண்டிய அவலம் உள்ளது. இங்கே பாலியல் தொல்லை என்பது என்ன ? கற்பழிப்பா... ! வார்த்தை மூலமாக, செய்கை மூலமாக கூட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கலாம். பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பதாக இருக்கட்டும், பெண்ணை கண்டு ஆபாச செய்கைகள் செய்வதாக இருக்கட்டும் அது பாலியல் தொல்லையே. சில ஆண்கள் பெண்கள் இருக்கும் இடம் என்று கூட கருதாது ஆபாச வார்த்தைகள், கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தும் போது பெண்களின் முகம் கூனி குறுக்கி கூட போவதுண்டு. அதை கண்டு சிரித்து ரசிக்கும் ஆண்களும் உண்டு.

பணியிடங்களில் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்களை பதமிட விரும்பாத ஆண்கள் சராசரியாக குறைவே. சிலர் மேல் அதிகாரிகளுக்கு பணிந்தால் மட்டுமே சலுகைகள், சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்றவை எளிதாக பெறமுடியும். பெண்கள் அனைவரும் காம இச்சைகளுக்கு பணிவார்கள் என்றும் கருத முடியாது. ஒரு சில பெண்கள் ஒத்துபோவதால் மற்ற பெண்களையும் சரிசெய்து தங்கள் வழிக்கு கொண்டு செல்லாம் என்கிற நினைப்பில் சில மேல் அதிகாரிகள் கைவரிசை காண்பித்து வேலையிலிருந்து வெளியேறியே சம்பவங்களும் உண்டு. வேலையில் பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் என்பது அணைத்து துறைகளிலும் உள்ளது. கீழ் நிலை பணியில் உள்ள பெண்களுக்கு மட்டும் இந்த கொடுமை என்றில்லை மேல்நிலை பணியில் உள்ள பெண்களும் இது போன்ற வேலை பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆளாக நேரிடுகிறது.
வேலை இடத்தில் பெண்கள் பாலியல் 
தொல்லைகளை எதிர்க்கொள்வது எப்படி ?
·        தொழில் சார்ந்த அடையாளத்தை பராமரிக்கவும் :  வேலை இடங்களில் தொழில் முறை சார்ந்த கண்ணியமிக்க ஆடைகளை உடுத்தவேண்டும். பிறரின் கவனம் உங்கள் மீது ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான ஆடைகளை  அலுவலகத்தில் உடுத்த கூடாது. ஆடை சுதந்திரம் அவரவர் விருப்பமே, இருந்தும் எந்த ஆடை எந்த இடத்தில யார் முன் உடுத்தப்பட வேண்டும் என்கிற வரைமுறை அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கருத வேண்டும்.
·        மோசமான கருத்துக்கள் அல்லது வக்கிரமான நகைச்சுவை :- மோசமான கருத்துக்கள் அல்லது வக்கிரமான நகைச்சுவைகளை வேலை செய்யும் நபர்கள் உங்களிடம் பேச அனுமதிக்காதீர்கள். இது போன்ற செயல்களுக்கு கடுமையுடன் நடந்துக்கொள்ளுங்கள், இது போன்ற நிகழ்வுகளுக்கு சிரிக்கவோ அல்லது பதிலளித்து ஊக்குவிக்க வேண்டாம். முதலில் கண்டிப்புடன் பிறகு இந்த செயல் தொடர்ந்தால் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவப்பது நல்லது.
·        தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் காணப்படுங்கள் :-அட்டூழியர்கள் மற்றும் வன்முறை நிகழ்த்தும் நபர்களின்  முன்பு மிகவும் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன்   காணப்படுங்கள். அவர்களின் அச்சுறுத்தலுக்கு இணங்க வேண்டாம். அவர்கள் முன்பு நீங்கள் பயந்தது போல போல காட்ட வேண்டாம். அச்சப்படுவதன் மூலம் அவர்கள் உங்களை மீண்டும் அச்சுறுத்த அல்லது துன்புறுத்த வாய்ப்பு நேரிடும். மேற்கொண்டு இவர்களை பற்றிய புகாரை உயரதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும்.
·        மேலதிகாரியே உங்களிடம் தவறாக நடந்தால் :- நீங்கள் வேலையில் பணிபுரியும் நபரால் பாதிப்புக்கு உள்ளாகும் போது, உங்களின் நெருங்கிய நம்பகம் மிகுந்த நட்பிடம் தெரிவிப்பது நல்லது. இது உங்களின் அச்ச உணர்வை சிறிது குறைக்கும். உங்களின் மேலதிகாரியே உங்களிடம் தவறாக நடந்தால் அதை பகிரங்கபடுத்துவது நல்லது. அவரின் செல்வாக்கு, சக்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாலியல் அச்சுறுத்தல் அல்லது தொல்லை ஆதாரங்களுடன் சரியான நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் போனால் நாம் தான் அதிகப்படியாக பாதிப்புக்கு உள்ளாவோம்.
·        வேலையில் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவிக்கும் முறை வேலையில் பாலியல் துன்புறுத்தல் ஏற்படும் போது புகாரை எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக உங்களின் மேலதிகாரிக்கு தெரிவிப்பது நல்லது. உங்கள் நிர்வாகத்தில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு அல்லது காவல், நீதிமன்ற நடவடிக்கைக்கு இந்த ஆதாரங்கள் உதவும்.
·        வேலையில் இடத்தில குழுவாக இருத்தல்: தனியாக இருப்பதை தவிர்த்து உங்களின் நம்பகத்தன்மை கொண்ட நண்பர்கள் கூடிய குழுவாக இருந்தால் உங்களுக்கு மிகுந்த பலமாக அமையும். இது போன்ற நிகழ்வுகளில் நீங்கள் உங்களை தற்காத்துக்கொள்ள முடியும், மேலும் நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் புகாரும் வலுவு பெரும்.
 
இது போன்ற பாலியல் தொல்லைகள் அல்லது அச்சுறுத்தல் சம்பவங்கள் வேலை இடத்தில்  நடைபெறும் போது இத்தகைய  சம்பவங்களை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும்போது  மற்ற பெண்களும் இத்தகைய சம்பவங்களில் இருந்து பாதிக்காமல் தப்பிக்க கூடும் என்று நினையுங்கள். அதிகப்படியான தொல்லைகள் இருப்பின் உங்களால் சமாளிக்க முடியாமல் போனால் உங்கள் வீட்டாரிடம் சொல்வது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.

தொடரும்….

ஆயிஷாபாரூக்
www.ayeshafarook.blogspot.com
 

December 3, 2013

மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !கண்கள் இருந்தும் குருடாய்
காதுகள் இருந்தும் செவிடாய்
வாய் இருந்தும் ஊமையாய்
கால்கள் இருந்தும் தவறாய் பயணித்து
குறை கூறும் மனதுடன்
நிறைந்த நம் சமூகத்தில்
மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !

தீயதை பார்த்திடாமல்
புரணியை பேசிடாமல்
பொய்யை கேட்டிடாமல்
தவறான வழி நடந்திடாமல்
வஞ்சகம் கொண்டு மனமாக இல்லாது
வாழும் மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !
இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள்

                                                                                                                   ஆயிஷாபாரூக்

December 2, 2013

பொதுமக்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் .....

கஸ்தூரிபா நகர், திருவான்மியூர் ரயில் நிலையங்கள் அருகே திருநங்கைகள் பாலியல் தொல்லை பொதுமக்கள் புகார் - இந்த செய்தியின் அடிப்படை வைத்து என் கருத்து கட்டுரை.

விபச்சாரம், பிச்சை எடுப்பது, வன்முறை போன்றவற்றை நான் ஆதரித்து பேசவில்லை. இத்தகைய செயலை ஆமோதிக்கவும் இல்லை. மக்களுக்கு இடையூறு செய்யும் எந்த செயலும் கண்டிக்கப்பட வேண்டும். அது ஆணாக, பெண்ணாக இல்லை திருநங்கையாக இருந்தாலும் தவறு என்பது தவறு தான்.

வீட்டை விட்டு சிறுவயதில் துரத்தப்பட்டு, கல்வியை பாதி வயதிலே விட்டு விட்டு வெளியேறும் திருநங்கைகள், சரியான வாழ்வாதாரம் அமையாது சமூகத்தில் சமஉரிமைகள் மறுக்கப்பட்ட திருநங்கைகளிடமே அடைக்கலம் புகுகின்றனர். தங்களின் வயிற்று பிழைப்பிற்காக தங்களின் மூதாதை திருநங்கைகள் தங்களுக்கு பயிற்றுவித்த கடை கேட்டல், பாலியல் தொழில் போன்றவையே தங்களை நம்பி அடைக்கலம் வரும் திருநங்கைகளுக்கு கற்றுகொடுக்கின்றனர். இதன் காரணமாக இந்த வாழ்வியலே வாழையடி வாழையாக வளர்கிறது.

இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு ஓரளவிற்கு சாதகமான சூழல் இருந்தாலும் இன்னும் சமுதாயத்தில் சம உரிமைக்கான வாய்ப்பை பெறுவதற்கு பெரும் போராட்டம் தொடுக்க வேண்டி உள்ளது. இத்தகையான இக்கட்டான தருணத்திலும் சில திருநங்கைகள் இன்று தங்களின் வாழ்வாதார சூழ்நிலையை மேன்படுத்திக்கொள்ள சுயமரியாதை கொண்ட மனிதர்கள் போல வாழ முற்படுகின்றனர். பல திருநங்கைகள் இன்னும் பழமையிலே ஊறி உள்ளனர். ஒரே இரவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, கால அவகாசம் எடுக்கும். ஆனாலும் நாங்கள் மாறி வர முற்படுவது மறுக்கமுடியாத உண்மையும் கூட. இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இந்த மாறி வரும் சூழலில் சிலர் செய்யும் இத்தகைய செயலுக்காக ஒட்டுமொத்த இனத்தை அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்டு மக்களிடம் இருக்கும் சில நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடுவது மிகவும் கவலைக்குரியது. இத்தகைய போக்கை சில பத்திரிகை நண்பர்கள் கடைபிடிக்க வேண்டாம். சான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை எங்களுடையது, இது போன்று நாங்கள் சிலர் முன்னேற்றம் கொண்டு வழிநடக்கும் தருவாயில் மக்களிடம் நன்மதிப்பை பெற்று தாருங்கள். ஒரு ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் தவறு நிகழ்த்தினால் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தி செய்தி வருவது இல்லை, அவரின் பெயர் மட்டுமே வெளிவரும். தவறான செய்திகள் இருப்பின் இன்னார் இதை செய்தார் என்கிற அடையாளத்தோடு வெளியுடுங்கள், அதை விட்டு விட்டு திருநங்கைகள் என்று ஒரு இனத்தையே முழுமையாக அடையாளபடுத்தி எங்களை மேலும் சீர்குலைய செய்யாதீர்கள். நல்ல வாழ்வாதார சூழ்நிலை இருந்தும் நேர்மையாக பயணிக்காமல் பலர் வாழும் சமுகத்தில் அடுத்த வேலை சோற்றுக்காக போராடும் திருநங்கைகளை குறை கூறுவதை விட்டு விட்டு, எங்களின் சம உரிமைக்காக எழுதுங்கள். கண்டிப்பாக நாளை எந்த திருநங்கையும் பிச்சையோ பாலியல் செய்யாமல் சுயமரியாதை கொண்டு வாழ்வாள்.
ஆயிஷாபாரூக்