September 25, 2012

மை படிந்த கை


தமிழ் தாயே வணக்கம், உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் தான் இந்த கட்டுரையின் தொடக்கம். தமிழ் என்கிற அற்புதமான மொழி, பல சிறப்புக்களை தன்னகத்தேக்கொண்டு பழமைக்கு பழமையாகவும் புதுமைக்கு புதுமையாகவும் காலத்தின் மாறுதல்களை எதிர்கொண்டு செம்மொழியாக பல நூறாண்டுகள் காலம் கடந்து பவனி வருபவள். அவளை நானும் தாலாட்ட சீராட்ட பாராட்ட விரும்பி கடல்போல பரப்பை கொண்ட அவளின் இடத்தில ஒரு சின்னஞ்சிறிய முத்தாக நானும் எனக்கு தெரிந்த வகையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை படைத்து அவளின் பொன்மேனியில் வாசம்கொண்ட மலர்மாலையில் ஒரு சிறிய மலராகவாவது இருக்க விரும்பி நான் எடுத்த முயற்சி தான் இந்த ஆயிஷாபாரூக் வலைத்தளம். நான் என்னை வளமைப்படுத்த இந்த தளம் எனக்கு ஒரு நல்ல வாய்பாக அமைந்துள்ளது.

என்னுடைய எழுத்து ஆக்கபூர்வமாக பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  என் எழுத்துக்கள் ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை. பெரும்பாலும் சமூக அவலங்களை முன்னிலைப்படுத்தி என் படைப்புகள் எழுதியுள்ளேன். உங்களின் அன்பான ஆதரவோடு என் எழுத்துக்கள் இன்னும் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனந்த விகடனில் உள்ள வளையோசை என்கிற பக்கத்தில் என்னுடைய வலைதளமும் வந்துள்ளது மகிழ்ச்சி, அதை என் அன்பு உள்ளங்களான உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி, (முன்னேறு, பிறரையும் முன்னேற்று!) நீங்கள் எனக்கு கொடுத்த ஊக்கம் என்றுமே மறக்க முடியாது, நான் தற்போது என்னுடைய நூறாவது படைப்பை நெருங்கியுள்ளேன்.

கல்வியறிவு எனக்கு தந்திட்ட என் குடும்பத்தார்க்கும், தமிழறிவு தந்த என் ஆசிரியர் அவர்களுக்கும், என்னை என்றும் ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களான உங்களுக்கும் என் நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.
நான் வலைதளத்திற்கு அறிமுகமான சமயம் என்னை ஊக்கபடுத்திய நண்பர் சதீஷ் மாஸ் அவர்கள் என்னை முதன் முதலாக அவருடைய நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்தார், அதன் பின் நண்பர் இக்பால் செல்வன் அறிமுகம் செய்தார் இன்று ஆனந்த விகடன் வளையோசை மூலாமாக நான் பலருக்கு அறிமுகமாகி உள்ளேன். அறிமுகம் அனைவருக்கும் தேவை தான், இல்லையென்றால் இன்று எந்த ஒரு சிறந்த கலைஞரும் வெளிச்சத்திற்கு வந்திருக்க முடியாது.

சகோதரி எஸ்தர், ராஜிபிரியா, சசிகலா, ஹேமா, அதிசயா, சரளா அக்கா ஆகியோர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ரமணி அய்யா, சென்னை பித்தன் அய்யா, மதுமதி அய்யா, சகோதரர்கள் திண்டுக்கல் தனபலான், சிட்டுக்குருவி, தளிர் அண்ணன், சீனா, வெங்கட் நாகராஜ், இரவின் புன்னகை, ராம்குமார் கோபால், செய்தாலி, நண்டு@நொரண்டு, சுவனப்ரியன், அருணா செல்வம், கோவி ஆகியோர் தங்களின் கருத்துக்களை என் வலையில் பதிந்து ஊக்கம் கொடுத்தனர் மற்றும் இங்கு வரும் நல்ல அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை அன்புடன் தெரிவிக்கிறேன்.

என்னை எழுத ஊக்குவித்த என் தாயார், என் அன்பு கணவர் பாரூக் அலி, சகோதரி காரைக்குடி சரோ, மீனாட்சி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க தமிழ், வாழ்க வையகம் என்று கூறி இந்த நன்றி கட்டுரையை இனிதே முடிகின்றேன். கரை படிந்த கை கொண்ட அரசியல்வாதிகள் இல்லை நாம் மை படிந்த கை கொண்ட எழுத்தாளர்கள் நாம் என்பதில் பெருமைப்படுவோம் தோழர் தோழிகளே! எழுதுவோம், ஒன்றுபடுவோம்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்

September 23, 2012

மனமதை திறக்கலாம்
சேர்ந்திடும் நீர்த்துளிகள்
கடலாக மாறாலாம்
அடைந்திடும் தோல்விகள்
அனுபவ பாடமாகலாம்
துணிந்திடும் இதயம்
பயத்தை விரட்டலாம்

உடைந்த மனம்
எதையும் தாங்கலாம்
அடைந்த அவமானங்கள்
சகிப்பை வளர்க்கலாம்
காணுற்ற அலட்சியங்கள்
பொறுமையை அளிக்கலாம்

தீயக் குணங்கள்
தீமையை தரலாம்
பேராசை மனம்
பேரழிவை வழங்கலாம்
வஞ்சக  எண்ணம்
அமைதியை பறிக்கலாம்

போராடும் குணம்
பலவற்றை வெல்லலாம்
தோல்விகளின் வரவு
வெற்றிகளை பெருக்கலாம்
வாழ்வின் பயணம்
உண்மையை உணர்த்தலாம்

சேர்த்திடும் சேமிப்பு
வறுமையை விரட்டலாம்
பயின்றிடும் கல்வி
காலத்திற்கும் உதவலாம்
நல்ல எண்ணங்கள்
நல்வாழ்வை கொடுக்கலாம்

எனது வரிகள்
மனமதை திறக்கலாம்
உணர்த்திடும் பொருள்
அறிவினை உயர்த்தலாம்
விரைந்திடும் செயல்
புதியப்பாதையை காட்டலாம்


இன்றைய இளைய சமுதாயம் தோல்வியை தாங்கும் மனதை இழந்து வருகிறது, தாங்கள் செய்யும் செயலில் தோல்வி அடைந்தால் உடனே அதிலிருந்து பின்வாங்கின்றனர். முதல் முயற்சியால் வெற்றியை கண்டவர் வெகுச்சிலரே, அடுத்தடுத்த முயற்சியில் வெற்றியை கண்டவர்கள் இங்குப்பல கோடியுண்டு, தோல்வியால் முயற்சியிலிருந்து பின்வாங்கி விதியை குறைகூறுபவர் மூடரே! துவள வேண்டாம் அன்பர்களே! வெற்றி உங்கள் அருகில்!!!

அன்புடன்
ஆயிஷாபாரூக் 

September 16, 2012

பலூன்காரன்
விற்கும் பலூனில்
எத்தனை வண்ணங்கள்
விற்கும் எனக்கோ
கருப்பு வெள்ளையாய்
வாழ்வின் பக்கங்கள் 
நானும் பலூனும்
பறக்க முடிந்தும்
பறக்க முடியாமல்  

வாழ்க்கை வானில்
சூழ்நிலை நூலில்
கட்டப்பட்ட கைதிகளாய் 
காற்றின் திசைநோக்கி 
போகிறோம் முகவரியில்லா
பயணத்தை எதிர்கொண்டு  


அன்புடன்
ஆயிஷாபாரூக்

September 9, 2012

ஒரு தாயின் பிராத்தனைதள்ளாத வயதிலே 
தடுமாறி நடந்திட 
தனிமையான வாழ்வை
தந்துவிட்ட செல்வங்களுக்கு 
தன்னிலைமை வரவேண்டாம்
தாயே அருள்வாயென
தன்னறியாமல் உருகினாள்
தாயான ஒருவள்
தன்வயிற்று பிள்ளையிருந்தும்
தன்னலமில்லா பிராத்தனையுடன்
அநாதை இல்லத்திலே!

முக்கிய எச்சரிக்கை!

இன்று உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு நீங்கள் அனுப்புகையில் ஒரு நிமிடம் சிந்திக்கவும்! முதியோர் இல்லம் நாளை உங்களுக்கும் இருப்பிடமாகலாம்!September 5, 2012

வாழ்கிறேன் ஒரு திருநங்கையாக


தெளிந்த மனமுடன்
தேங்காத நதியாய்
வாழ்க்கை கடலில்
எதிர்நீச்சல் அடித்து
பொறுமை ஆயுதமுடன்
எதிர்வரும் ஏளனங்களை
நிலம்போல பொறுத்து 
துணிவோடு விரட்டி
மடமையை அழித்து
அறிவுடன் செழித்து
தீமைகளை தீயன
மனச்சுடரில் எரித்து
கவலைகளை காற்றில்
பட்டம்போல பறக்கவிட்டு
மனமதை சவாலுடன்
யாவையும் சந்தித்து
பரந்த வான்போல 
வாழ்வை விரிவாக்கி
மகிழ்ச்சியை பெருக்கி
கவலைகளை சுருக்கி

வஞ்சமில்லா மனமால் தூயநீராகி
துயரங்களை நிலம்போல சுமந்து
அக்னிபோன்ற வாழ்கையை தனதாக்கி
தென்றலாய் கவலைகளை மறந்து
எல்லையில்லா சகிப்பால் வானாகி
வாழ்கிறேன் ஒரு திருநங்கையாக!

-- ஆயிஷாபாரூக் --

September 3, 2012

இட்லி

இட்லி பற்றிய கவிதையா என்று வியக்க வேண்டாம்.. தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு உணவு இட்லி.. ஆகையால் இட்லிக்கு ஒரு கவிதை என் மனதில் தோன்றியது. உடனே எழுதிவிட்டேன்.. இந்த கவிதையை இட்லிக்கும் இட்லி பிரியர்கள் அனைவருக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன்..

உங்களுக்காக சுடச்சுட இட்லி தயார்....!!!


அழகான வெள்ளை பஞ்சு
தேவலோக அமிர்தமோ இல்லை
பூலோக அதிசய படைப்போ
அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
கலவையாக நீராவியில் வெந்து
தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ 
அன்னையின் அழகிய பக்குவத்தில் 
அன்பும் பரிவும் கொண்ட 
ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
சுடச்சுட சிரித்தது இட்லி 
நண்பர்கள் சட்னி சாம்பார்
வடையின் வரவு கண்டு

ஆயிஷாபாரூக்

September 1, 2012

வெள்ளை காகிதம்


எழுதாத வெள்ளை
காகிதமாய் நான்
மை துளிகளால்
எழுதிவிடு….
உன் வாழ்க்கை
கவிதையாகிறேன்
வரைந்துவிடு....
உன் எண்ணத்தின்
ஓவியமாகிறேன்
கிருக்கிவிடு….
உன் மனதின்
உணர்வாகிறேன்
கசக்கிவிடு….
உன் தாகத்தின்
தீர்வாகிறேன்
தூக்கி எறியாதே
மரணித்து போவேன்
 ஆயிஷாபாரூக்