February 28, 2013

தமிழின் இன்றைய நிலை


தமிழை அமுதமென நினைப்போரும் உண்டு
தேனினும் மொழியாளை ரசிப்போரும் உண்டு
செந்தமிழை நாபாடி மகிழ்வோரும் உண்டு
சிந்தையிலே சிலையாக்கி வணங்குவோரும் உண்டு

அறம் பொருள் இன்பம்தனைக் கொண்டு
திருக்குறளை என்றும் நினைப்போரும் உண்டு
அகம் புறம் கொண்ட வாழ்வியல் நானூறை 
படித்து ரசிப்போரும் உண்டு

தமிழை நவீன காலத்திற்கு வடிவமைத்து
இணையவழி தமிழை வளர்போரும் உண்டு
எந்த மாற்றம் காணினும் அதற்கேற்றார் போல
தமிழை நவீனபடுத்தும் சிற்பியும் உண்டு

தமிழின் சிறப்பை அறியாத மாக்களும் உண்டு
அவள் மொழி மறந்த அறிவிலிகளும் உண்டு
பிறமொழி மோகம் கொண்ட முண்டங்களும் உண்டு
இத்தனையும் கடந்து வாழும் தமிழ் என்றும் உண்டு

அழிவில்லாத வரம் தமிழுக்கு என்றும் உண்டு
இன்றைய நிலையிலும் இளமையாக வாழ்வுண்டு
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு
வாழும் வல்லமை நம் தமிழுக்கு என்றும் உண்டு

பழமைக்கு பழமையாக புதுமைக்கு புதுமையாக திகழும் நம் தமிழ் மொழி பல யுகங்கள் கடந்து திகழ்பவள். தமிழன் தமிழை மறந்து என்றும் வாழக்கூடாது. இன்றைய தமிழின் நிலையை உணர்ந்து தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே அணைத்து தமிழனின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். 

ஆயிஷா பாரூக் 

February 24, 2013

புன்னகைத்த பூக்கள் காதலை மறுத்ததால்

 புன்னகைத்த பூக்கள்
காதலை மறுத்ததால்
அமிலத்தால் பொசிங்கன
உயிரும் கருகின
பெண்ணாக பிறந்ததால்
இந்த நிலைமையோ
அந்த பேதையின்
கண்ணீரை அறிவீரோ
இந்த வலியின்
கொடுமை உணர்வீரோ
பெற்றோர் படும்பாட்டை
எதைக்கொண்டு களைவீர்
எதை சாதித்தீர் அந்த
உயிரை மாய்த்து
வெறிபிடித்த பிண்டமே
உன் ஆணவத்தை அழிக்க
உன் ஆண் குறியில்
அமிலம் ஊற்றினால்
அழிந்துவிடும் உன்
பெண் மோகம்
பின்பு எந்த பூவும்
இனி கருகாது.......... 
நேற்று வினோதினி,இன்று வித்யா நாளை யாரோ ? எத்தனை கொடுமையான நிகழ்வு ஒரு உயிரை அமிலம் ஊற்றி சாகடிப்பது... வேண்டாம் இது போன்ற கொடுமைகள், வைக்க வேண்டும் இதற்க்கு முற்று புள்ளிகள்.. என் கவிதை மிகுந்த ஆக்ரோஷமாக தோன்றலாம் பலருக்கு. இப்படி பட்ட தண்டனை நிறைவேற்றபட்டால் நாளை எந்த ஆணும் துணிந்து பெண் மீது அசிட் ஊற்ற மாட்டான்.  
                                                                                                                                                                  **ஆயிஷாபாரூக்**

February 19, 2013

நீ நல்லவனா கெட்டவனா



நீ நல்லவனா கெட்டவனா
ஒரு நேரம் நல்ல நண்பனாய்
ஒரு நேரம் அன்பு காதலனாய்
ஒரு நேரம் இன்பத்தின் ஊற்றாய்
ஒரு நேரம் புரியாத புதிராய்
ஒரு நேரம் கண்களின் கண்ணீராய்
ஒரு நேரம் தனிமையின் துணையாய்
ஒரு நேரம் கவலையின் உருவமாய்
ஒரு நேரம் ஏக்கங்களின் வடிகாலாய்
நீ எப்படி இருந்தாலும் ரசிப்பேன்
நேரம் போக்க அல்ல என் ஆயுளை கடக்க
வாழ்க்கை முழுவதும் நீ வேண்டும்....

                                                                                                                              ♥ ஆயிஷா பாரூக் ♥




உன்னையே சுத்தி வரவத்தான்
உன் அன்புக்காக ஏங்குறவத்தான்
சித்தம் கலங்கி உன் நினைப்புல
செத்து செத்து புளைக்கிறவத்தான்
என் சாமி நீயே தான்
வாழ்க்கை வரம் தாறாயோ
பாவி மகள் படும்பாட்டை
ஒரு நிமிஷம் பாராயோ.....

                                                                                                                              ♥ ஆயிஷாபாரூக் ♥

February 18, 2013

மறைந்த ஒன்றைத் தேடி...


கண்ணின் கடைசி தூரப்பார்வை
வரை உன்னை தேடி அலைகிறேன்
செவியின் எல்லை ஒலி வரை
உன் ஓசை கேட்கிறதா என
நுட்பமாக கவனிக்கிறேன்
காடு,கடல்,மலைத் தாண்டி
கால்கள் உன் அடையாளம் காண
தொடர்ப் பயணம் செய்கிறது
வான் தாண்டி மேலே பறந்தாலும்
மண்ணை கீழ் நோக்கி பறித்தாலும்
உன் வாசம் வீசாதா என
நாசி நுகர்ந்து பார்க்கிறேன்
தென்படவில்லை உன் அடிச்சுவடு
ஒருமுறை உன்னை பார்க்கமுடியாதா
தவிப்பில் ஆயிரம் விம்மல்களுடன்
கண்ணீர் தாளை நனைக்கிறது
ஏக்கம் கலந்த உன் நினைவுகளுடன்....


இந்த உலகத்தை விட்டு மறைந்த நம் அன்பு உள்ளங்களை நாம் எங்கே தேடுவது.. எங்கே தேடினாலும் காணமுடியாது... இதோ ஒரு தேடல் கவிதை..

**ஆயிஷாபாரூக்** 

February 17, 2013

ஆயிஷாபாரூக்


தெளிந்த மனமுடன்
தேங்காத நதியாய்
வாழ்க்கை கடலில்
எதிர்நீச்சல் அடித்து
பொறுமை ஆயுதமுடன்
எதிர்வரும் ஏளனங்களை
நிலம்போல பொறுத்து
தீமைகளை தீயன
மனச்சுடரில் எரித்து
துணிவோடு எதிர்த்து
மடமையை அழித்து
அறிவுடன் செழித்து
கவலையை காற்றில்
பட்டம்போல பறக்கவிட்டு
மனமதை திடமுடன்
வருவதை சந்தித்து
பரந்த வான்போல
வாழ்வை விரிவாக்கி
மகிழ்ச்சியை பெருக்கி
கவலைகளை சுருக்கி
வாழ்கிறேன் நான் ஒரு
திறமையான நங்கையாக!
ஆயிஷாபாரூக்

February 15, 2013

உன் முடிவ சொல்லு...





உன் முடிவ சொல்லு, நீ என்ன கல்யாணம் பண்ணுவியா இல்லை கழட்டிவிட்டுறுவியா.. உன் பேச்சும் செயலும் மாறி போச்சு, நீ முன்ன மாறி இல்ல... மாறிட்ட... உனக்கு காதல் மட்டுமே பண்ணிக்கிட்டு ஊற சுத்திக்கிட்டே திரியனும், கல்யாணம் பண்ணனும்னு கேட்டா எந்த பதிலும் உன் வாயிலேந்து வரது கிடையாது என்று தினேஷிடம் கேட்டாள் மெர்சி.

ஐயோ, ஆரம்பிச்சுட்டியா... நான் எங்க வீட்ல எங்க அம்மாகிட்ட சொல்லிட்டேன் நம்ம காதல, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்னு சொல்லிடாங்க மெர்சி, உனக்கு எங்க அப்பா பத்தி தெரியும்ல.. அவரோட பேச்ச மீறி நடக்க எனக்கு தைரியம் கிடையாது.. ப்ளீஸ் கண்டிப்பா அம்மா அப்பாகிட்ட பேசி நல்ல முடிவு நமக்கு சொல்லுவாங்க.. சிகரெட்டை புகைத்தவாறு தினேஷ் மெர்சியிடும் சொன்னான்...

நிப்பாட்டு, உன்னோட இந்த பழைய கதையை கேட்டு போர் அடிச்சுருச்சு... நான் கிளம்புறேன்.. என்று மெர்சி கடற்கரை சாலையிலிருந்து அவள் வீட்டிற்கு நடக்கலானாள்... நடந்துக்கொண்டிருந்த மெர்சியை, கொஞ்சம் நில்லு மெர்சி என்று ஒரு குரல் கேட்க, திரும்பி பார்த்தாள் மெர்சி.. ஏய், ரிஸ்வானா நீயாடி, எப்படி இருக்க காலேஜ் முடிஞ்ச பிறகு இப்போ தான் பார்க்கிறோம்.. ஆளு கொஞ்சம் குண்டாயிட்ட.. என்று தன் கல்லூரிக்கால தோழியை பார்த்த மகிழ்ச்சியில் மெர்சி பேசினாள்..

மெர்சி, நீ அப்படியே தாண்டி இருக்க.. கோச்சுக்காத நான் இந்த ஊர்ல கொஞ்சம் நாளா இல்லை, IELTS பரீட்சைக்கு படிக்க நான் சென்னை போயிருந்தேன், அங்கே எங்க நூர் அக்கா வீட்ல தங்கி படிச்சேன், இப்போ எல்லா எக்ஸாம் முடிஞ்சு நான் தேர்வாகிவிட்டேன். கனடால அல்பேர்டா யுனிவர்சிட்டில சீட் கிடைச்சுருக்கு. எப்போ வேணாலும் கனடா போற மாறி இருக்கும்.. உன்னை பார்த்தவரை சந்தோஷம்.. என்று ரிஸ்வானா கூற

ரிஸ், சந்தோஷம்டி.. ஹ்ம்ம் அப்போ காலேஜ் படிப்பு முடிச்ச உடனே உனக்கு உங்க வாபா நிக்காஹ் பண்ண போறாருன்னு சொன்ன, நீ இப்போ கனடா போறேன்னு சொல்ற.. மெர்சி கேட்க.... எனக்கு PG நானோ டெக்னாலஜி படிக்க ஆசை இருக்குன்னு வாபாக்கிட சொன்னேன், அதுவும் வெளிநாட்டுல.. எங்க வாபா ஒத்துக்கிட்டாங்க.. என்னோட விருப்பத்த வாப்பா எப்போதும் மதிப்பாங்க.. அது சரி, இஞ்சினீயர்.... நீங்க என்ன பண்றீங்க... என்று சிரித்தவாரே ரிஸ்வானா மெர்சியை பார்த்து கேட்டாள்..

புன்னகை பூத்தவாறு, நான் சும்மா தாண்டி இருக்கேன்..வேலைக்கு போக விருப்பம் இல்ல...அநேகமாக எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும். ரிஸ்வானா குறுக்கிட்டு வாவ், மெர்சி யாரு நம்ம கூட படிச்சா தினேஷா... உங்க லவ் அப்போலேந்து காலேஜ்ல ரொம்ப பாபுலர்.. கங்ராட்ஸ் டி மெர்சி..

நானும் அத தான் விரும்புறேன், பட் அப்படி நடக்க வாய்ப்பு இருக்காது போல.. தினேஷ் முன்னாடி மாறி இல்ல, நாம படிச்சு முடிச்சு இப்போ ஒரு வருஷம் ஆகுது இன்னும் ஒரு வேலைக்கு கூட போகணும்னு அவனுக்கு எண்ணம் இல்ல.. அதுவும் இல்லாம எங்க வீட்ல ஒகே சொன்னாலும் அவங்க அப்பா மதம் அது இதுன்னு எதிர்பாங்க போல.. அதிகமா இது சரிப்பட்டு வராது, அதுவும் இல்லாம நான் ரொம்ப குழப்பிக்க கஷ்டபடுத்திக்க விரும்பல.. பாப்போம் ரிஸ்வானா...
 
எதுவாக இருந்தாலும் நல்ல முடிவு எடுடி, உன்னோட வாழ்க்கை உனக்கு தான் எப்படி அமைக்கணும்னு தெரியும் பார்த்துக்கோ மெர்சி.. பார்க்கலாம் கண்டிப்பா உன்னோட கல்யாணத்திற்கு கூப்பிடு மெர்சி.. என்று ரிஸ்வானா கூற.. ஹ்ம்ம் கண்டிப்பா கூப்பிடுவேன் நீ கனடா போகுறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போடி என்று இரு தோழிகளும் விடை பெற்றனர்.
மெர்சி வந்துட்டியா... வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் அவள் அம்மா கேட்க..

என்னமா சொல்லு என்றால் மெர்சி.. 

நாங்க அந்த பைய்யன் வீட்டுக்கு என்ன பதில் சொல்லுறது, அவங்க நம்மோட பதிலுக்காக ஒரு மாசமா காத்துகிட்டு இருக்காங்க, நல்ல சம்மந்தம் மெர்சி.. பையன் நல்ல படிச்சு இருக்கான், நம்ம மோலி அத்தையோட உறவுக்கார பையன்.. இப்போ ஆஸ்திரேலியாவுல டாக்டரா இருக்கான்.. உனக்கு ஏத்த மாறி இருக்கான் மெர்சி.. நீ இன்னும் திணேஷ தான் நம்புகிட்டு இருக்கியா.. எனக்கு உன்னோட முடிவ சொல்லு மெர்சி.. இதுக்கு மேலே எனக்கு பொறுமை இல்லை என்று மெர்சியின் அம்மா கோபித்தவாறு உள்ளே சென்றாள்.

மெர்சி அவள் அறைக்கு சென்றாள்.. கொஞ்சம் மெளனமாக சிந்தித்தாள்.. தினேஷிற்கு கால் செய்தாள்.. 

தினேஷ் மறுமுனையில் பேச, தினேஷ் உன்னோட முடிவ சொல்லு.. இதுக்கு மேலே டைம் இல்ல.. சீரியஸா பேசுறேன்.. உங்க அப்பா என்ன சொல்றார்.. உங்க அம்மா பேசிட்டாங்களா.. நம்ம விஷயம் என்ன ஆச்சு.. என்று அடுத்து அடுத்து மெர்சி கேட்க 

தினேஷ் பதிலாக மெளனமாக இருந்தான்.. 

நான் பேசுறது கேட்குதா, ஏன் எந்த பதிலும் காணோம்... தினேஷ் தினேஷ்... என்று மெர்சி கேட்க...
மெர்சி எங்க அப்பா ஒத்துக்க மாட்டார்... நாம் ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்குவோம்...என்று தினேஷ் சொல்ல 

இந்த ஓடிப்போயிலாம் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல, தினேஷ்... எங்க வீட்டுல உள்ளவங்கள நான் காய படுத்த விரும்பல... நான் எதுவும் பேச விரும்பல.. இனிமே நம்மகுள்ள ஒன்னும் கிடையாது தினேஷ்.. நான் உன்னை மறந்துடுறேன் நீயும் என்னை மறந்திடு.. டேக் கேர் என்று கண்கள் கலங்கியவாறு தன்னுடைய செல்போன்னை அணைத்து விட்டாள்...

மெர்சி அவள் அம்மாவை கண்டவுடன் கட்டி அணைத்த படி அழுக, மகளை தேற்றியவாறு.... மெர்சி.... அம்மா உனக்கு எப்போதும் நல்லது தான் செய்வேன். என்னோட மகள் எப்படி இருந்தா சந்தோசமாக இருப்பான்னு எனக்கு தெரியும். கர்த்தரோட ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு மெர்சி.. 

மெர்சியின் அம்மா மோலி அத்தையை செல்லில் அழைத்து மெர்சி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டாள்.. இனி நடக்க வேண்டியத பாருங்க...  

கதை : ஆயிஷாபாரூக் 

February 14, 2013

காதலர் தினக் கவிதைகள்


 உன் காதலில் உயிர் வாழும்
ஒவ்வொரு நாளும்
எனக்கு காதலர் தினம்
தானடா பின்பு தனியாக
எதற்கு பிப்ரவரி 14 ?

♥ ஆயிஷாபாரூக் ♥


 உன் ஐந்து அடி
கவிதையாக நானிருக்க
உன்(மை) கொண்டு
பொய்(மை) எழுதுவாயோ
காதலில் பொய்மையும்
ஓரழகு தான்
மனம் காயப்படாதவரை...

♥ ஆயிஷாபாரூக் ♥




புற அழகைக் கண்டு
ஆசையுற்று வந்த
காதல் சில புணர்தலில்
மறைந்து போகும்
ஈர்ப்பின் ஆயுளும் சிறிது

அக அழகைக் கண்டு
மனமுவந்து வந்த
காதல் புனர்தலின்றியும்
நிலைத்து நிற்கும்
ஈர்ப்பின் ஆயுளும் பெரிது

தற்போது உள்ள காலச்சூழ்நிலையில் சில காதல் ஜோடிகள் காதலை கொச்சைப்படுத்தும் விதமாக காதல் என்கிற போர்வையில் தங்களுடைய இச்சைகளை தனித்து விட்டு காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று பிரிந்து விடுகின்றனர். இதற்கு பெயர் காதல் இல்லை பச்சையாக சொல்லப்போனால் .......................

♥ ஆயிஷாபாரூக் ♥ 

 
உன்னையே சுத்தி வரவத்தான்
உன் அன்புக்காக ஏங்குறவத்தான்
சித்தம் கலங்கி உன் நினைப்புல
செத்து செத்து புளைக்கிறவத்தான்
என் சாமி நீயே தான்
வாழ்க்கை வரம் தாறாயோ
பாவி மகள் படும்பாட்டை
ஒரு நிமிஷம் பாராயோ.....

♥ ஆயிஷாபாரூக் ♥
 



காதலுக்காகவும் காதலனுக்காகவும் உயிர் நீத்த பல திருநங்கை சகோதரிகளுக்கு இதை சமர்பிக்கிறேன். 
  காதலுக்காக ஏங்கினாள் ஒரு நங்கை
நினைத்ததுப்போல காதல் அரங்கேறியது
காதலனும் வாழ்கையில் வசந்தம் தருவானன
நினைத்து நங்கையவள் பூரித்தாள்
காதல் விலையாக மனம் இழந்தாள்
பணம் இழந்தாள் கற்பும் இழந்தாள்
காதலன் கடைசியில் சொன்னான்
நம்மை ஊர் ஏற்காது உறவும் ஏற்காது
நீ கருவுறும் பூவும் அல்ல
உன்னை மணக்க நான் மகான் அல்ல
அனைத்தும் இழந்த மங்கை உயிரும்
துறந்தால் திருநங்கை யாதலால் !

♥ ஆயிஷாபாரூக் ♥ 

February 13, 2013

திருநங்கையும் காதலும்

 
திருநங்கையும் காதலும் ♥.....
என்னங்க பண்றது எத்தனையோ கஷ்டத்துலயும் கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கறது இந்த காதல் தான், அழகான தென்றல் பூக்களை வருடுவது போல இந்த காதல் மனசுக்கு ஒருவித இதமான உணர்வு, ஒரு மெல்லிய இசை காதோரம் பயணிக்கும் போது எப்படி நம்மள மறந்து இசையை ரசிப்போம் அது போல தான் இந்த அழகிய உணர்வு.

திருநங்கைகளை ஆண்கள் விரும்ப முன்வந்தாலும் சில ஆண்கள் மட்டுமே உண்மையா ஆத்மார்த்தமா நேசிக்கிறாங்க, பலர் காதல் போர்வையில் ஏமாத்து வேலை தான்.. அதிகபட்சமா உடல் சுகம் வேண்டி கண்ணே மணியே அப்படின்னு கொஞ்சுறது, சிலர் பணத்துக்காக பொருளுக்காக பாசமா பேசுறது இப்படின்னு பல தினுசுல காதல் என்கிற போர்வையில் உண்மை காதலை தேடி பல திருநங்கைகள் வாழ்க்கை முழுவதையும் தொலைத்து உள்ளோம். சில பேரு காதல் ஏமாற்றம் தாங்கமுடியாம தற்கொலை செய்து கொள்ளும் அவலங்களும் கண்டு உள்ளோம். ஒட்டுமொத்த ஆண்களையும் குறை சொல்லல...

அதிகபட்சமாக திருநங்கைகள் எதிர்ப்பார்க்கறது உண்மையான அன்பை மட்டுமே.. என்ன பண்றது பாழாபோன மனசு காதலிக்க ஆசைப்படுது.. எத்தனை காதல் தோல்வி வந்தாலும் எத்தனை வயசானாலும் திருநங்கைகளில் சிலர் காதலை விடுவதாய் இல்லை.. நான் சொல்ல மாட்டேன், எங்களை காதலித்த ஆண்கள் நன்கு அறிவார்கள் எங்கள் காதலின் உண்மையும் ஆழமும் அர்பணிப்பும்…காதல் எங்களுக்கு அழகிய வலி... திருநங்கைகளுக்கு காதல் என்பது வரத்தை விட சாபமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது.. இருந்தாலும் காதல் புடிச்சுருக்கு... 

♥ ஆயிஷாபாரூக் ♥

February 12, 2013

வினோதினி...


மனதில் எத்தனை ஆசைகளுடன்
உனக்கே உரித்தான கனவுகளுடன்
வாழ்க்கையில் சிறகடித்து பறக்க
நித்தம் நித்தம் நினைத்திருப்பாய்
தீயில் கருகிய ரோஜாப்பூவை போல
உடலையும் உணர்வையும் பொசுக்கிய
அமிலத்தில் கரைந்தாயே சகோதரி
பெண்ணாய் பிறந்தது தான் தவறா
இந்த பூவுலகில் இன்னும் இதுபோல
எத்தனை மலர்கள் கருக்க காத்திருக்கோ
மனிதா! இனி வேண்டாம்
இது போல இன்னொரு கொடுமை....

ஆழ்ந்த இரங்கல்கள்..


                                                                                                                             ..ஆயிஷாபாரூக்..