December 26, 2012

திருமணம் 
தோரணமும் மாலைகளும் 
வாசலில் அலங்கரிக்க
பன்னீரும் சந்தனமும்
வாசமுடன் வரவேற்திட 

இருமனம் ஓர்மனமாய் 
காதலில் கரைந்துருக 
வாழ்த்துகளும் ஆசிகளும்
வாழ்வுதனை இனித்திட

காலம் கடந்தும்
காவியம் காணும்
உறவுதனை மண்ணுலகம்
விண்ணுலகம் சேர்த்திட

பகலிரவு நேரங்களிலும்
இன்பதுன்ப நிகழ்வுகளிலும்
வாழ்வுதனை சேர்ந்தே
பயணித்து வாழ்ந்திடுவோம்

அன்புடன்
ஆயிஷாபாரூக்

December 18, 2012

தெய்வம் வாழ்வது எங்கே

 நீ அபிஷேகிக்கும் பாலை
தெய்வம் விரும்பவில்லை
பால்லில்லாமல் அழும் குழந்தைகளுக்கு
நீ கொடுக்காததால்

நீ வழங்கிய குர்பானியை
இறைவன் ஏற்கவில்லை
வறுமையால் வாடும் உயிர்களுக்கு
நீ உணவளிக்காததால்

நீ ஏற்றிய மெழுகுவர்த்தியின்
ஒளியை தேவன் ரசிக்கவில்லை
ஒளியிழந்த குடிசைகளுக்கு
நீ ஒளி ஏற்றாததால்

இறைவன் ; எனக்கு எதுவும்
உன் உதவி தேவை இல்லை
தேவையான மனிதர்களுக்கு
உன் உதவிகள் வழங்கிடு

பிறருக்கு உதவி செய்யும் உள்ளத்தில் தான் தெய்வம் வாழ்கிறான் 

அன்புடன்  
♥ ஆயிஷாபாரூக் ♥

December 13, 2012

தீண்டாமல் சுடுகிறாய்

 

உன் நினைவினில்
தினம் மூழ்கி
மனம் உருகினேன்
-----------------------------
உன் பிரிவில்
தினம் வாடி
உடல் மெலிந்தேன்
-----------------------------
உன் கனவில்
தினம் வாழ்ந்து
ஏக்கம் தீர்க்கிறேன்
-----------------------------
உன் சிந்தையில்
தினம் நனைந்து
கவி எழுதினேன்
------------------------------
உன் வாழ்வில்
தினம் சேர
தவம் புரிகிறேன்
-----------------------------
உன் காதலினால்
தினம் வாழ்கிறேன்
உயிர் பெறுகிறேன் 

அன்புடன்
ஆயிஷாபாரூக்

 

December 10, 2012

தமிழுக்கு வந்த ஆபத்து

 

தமிழ் எனக்கு பிடித்த மொழிகளில் அழகிய மொழி. செம்மொழியான தமிழ் மொழி தமிழகத்தில் இன்று மொழி கலப்புடன் தான் புழக்கத்தில் உள்ளது என்பது நான் கூறும் அதிசய உண்மை கிடையாது, இது உங்கள் அனைவருக்குமே அறிந்த நன்கு தெரிந்த யதார்த்த உண்மை. பொதுவாக தமிழுக்கு குரல் கொடுக்கும் பல நபர்கள் தமிழை வெளியிடங்களில் வாழவைத்தும் வீட்டினில் தமிழை கலப்படம் செய்து தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்கின்றனர்.

அப்பா, அம்மா என்ற உ
ணர்வு பூர்வமான தமிழ் சொல்லை பல பெற்றோர்கள் டாடி, மம்மி அல்லது டாட், மம் என்று தேனிசை பாய குழந்தைகள் கூறுவதையே விரும்புகின்றனர். இந்த நவீன மோகத்தில் குழந்தைகள் தமிழை பேசுவது கூட சில தம்பதிகள் கௌரவ குறைச்சலாக கருதுவதும் உண்டு. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்பதற்காக புத்தக கடைக்கு சென்று ஆங்கில அறிவு வளர்க்கும் வண்ணம் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க வாங்கி தருகிறார்கள். இதில் எத்தனை பேர் தமிழ் இலக்கிய, கவிதை புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர், அப்படி கொடுத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெற்றோர்கள் இருப்பர்.

என்னுடைய தாய்மொழி மலையாளம் ஆனாலும் தமிழ் மேல் பற்று காரணமாக நான் இந்த தமிழை எழுதும் அளவிற்கு ஒரு சராசரி தமிழன் எழுதுவது கூட இல்லை என்று சில நேரம் வருத்தபட்டும் இருக்கிறேன். எனக்கு தமிழின் ஆழமான விழுதுகள் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் தமிழை என் மனதினில் விழுதாக விதைத்து நான் தமிழை மதிக்கிறேன், நேசிக்கிறேன்.


தமிழ் என் உயிர் மூச்சு, தமிழ் என் பேச்சு என்று முழங்கிடம் சில ஆசாமிகள் கூட தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால் வெளியே உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் அறிவுரையாக தமிழ் மட்டும் படி, தமிழை மட்டும் பேசு என்று அறிவுரை கூறி தங்கள் குழந்தைகளை அயல்நாடுகளில் படிக்க அனுப்பிய சில தமிழ் மேதைகளும் நான் கண்டதுண்டு. ஏன் இந்த வேஷம், யாரை ஏமாற்ற என்று புரியவில்லை.


இன்றைய காலச்சூழலில் ஆங்கிலம் நமக்கு தேவை. தமிழ்நாட்டில் சாராசரியாக வேலைக்கு செல்லும் இடத்தில் ஆங்கில அறிவு கொண்ட நபரையே முதன்மை படுத்தி வேலைக்கு அமர்த்துகின்றனர். அயல்நாட்டு வேலைக்கு கண்டிப்பாக ஆங்கில அறிவு வேண்டும். என்னை பொறுத்தவரை தன் தாயை மறந்தவனும் தாய் மொழியை மறந்தவனும் ஒன்று. தமிழை நாம் என்றும் சிறப்பித்து காக்க வேண்டும் நம் தாயை போல. பிற மொழிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி பின்பு அதை சுழற்றிவிட வேண்டும். ஆனால் இன்றைய தமிழர்கள் சிலர் நவீன நாகரீகம் என்கிற மட்டமான போதையில் தமிழை துச்சமாகவும் பிற மொழிகளை உச்சமாகவும் கருதுவது தமிழுக்கு வந்த காலக்கொடுமை என்றே சொல்லாம்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்

December 1, 2012

ரிச் லவ் - Sounds Deliciousஎன்னோட BOYFRIEND 
SMARTPHONE போல
TOUCHSCREEN தொட்டதும்
காதல் மொழி பேசுவான்
என் தேவைகள் I PAD ல்
நோட் எடுத்து CREDIT CARD 
SWAPPING செய்து
செலவு செய்வான்

கவலைகள் DEBIT செய்து

HAPPINESS CREDIT ஏத்தி
கண்ணிமை போல பார்த்துக்குவான்
PORSHEம் BENTLEYயும்
தினம்
தினம் மாற்றி
என் கூட DATING செய்வான் 
PIZZAவும் BURGERகரும்
ஊட்டிவிட்டு CHEESE DOLL 
போல மாத்திடுவான் 
HOLIDAYக்கு MILANனும்
HONEY MOON
க்கு SPACE TOURம் 
செய்து CRUSH பண்ணுவான்

WEB SEARCH ENGINE
எங்கே தேடினாலும்
என் ஆளு போல
காதலன் உண்டா
MARSக்கு போனாலும்
SPACE சென்றாலும்
அவனைபோல யாரும் இல்லை 
என் மனச HACK 
செய்பவன் இவனே....

அன்புடன்
ஆயிஷாபாரூக் 

November 28, 2012

காதல் அரும்புகள் Facebook காதல் கலாட்டா
------------------------------
----
நீ போடும் Statusக்காக
உன்னை காதலிக்கவா
இல்லை உனக்கு விழும்
Likeக்காக காதலிக்கவா
எப்படி இருந்தாலும் நம்
காதல் Fake id போல இல்லை

 
 
கிறுக்கல்
--------------
நீ கவிதை என்று எழுதிய
அணைத்து கிறுக்கல்களையும்
ரசித்தேன் உன் மேல் காதல்
கொண்ட பாவத்திற்காகவே
இனியும் தொடராதே
என் காதல் மனம் தாங்காது.காதல் நிமிடங்கள் 
------------------------------
உன்னுடன் நான் இருந்த
ஒவ்வொரு நிமிடங்களில்
மகிழ்ச்சியும் சிரிப்பும்
உன்னுடன் நான் போட்ட
சின்ன சின்ன சண்டைகளில்
கோபங்களும் அழுகையும்
மாறாத காதலோடு வாழ்கையில்
என்றும் வேண்டும் காதலனே...

 கருத்து
----------

பேஸ்புக்
ட்விட்டர்
கருத்து பதிவு
சட்டப்படி கைது
சுதந்திரம் ஏது ?
 


 
விலைமாது
-------------------

படுக்கையில் புரண்டதால்
பணம் புரட்டினேன்
பணத்தை புரட்டியதால்
வாழ்கையை புரட்டினேன்.


அன்புடன்
ஆயிஷாபாரூக் 
 

ஒலித்திடு
அரசியல் பதிவுகள் 
அரசியல் பதிவுகள் இனி எழுதக்கூடாது என்று நினைக்கிறேன்... அரசியல் பதிவுகள் எழுதும் போது ஒருதலை பட்சமாகவோ அல்லது உண்மையை மறைத்து கொண்டோ தான் எழுத வேண்டி உள்ளது. அரசியல் உண்மைகள் சிலருக்கு கசக்கும், சிலருக்கு இனிக்கும்...என்றுமே எனக்கு துவர்க்க தான் செய்கிறது. இங்கே கட்சி சார்பாக அரசியல் பதிவுகள் எழுதும் அனைவரும் தங்களின் மனசாட்சியை சாகடித்து கொண்டு தான் எழுதுகிறார்கள்.

உலக அழிவு 
உலகம் என்ன புதுசா அழியவேண்டி இருக்கு, ஏற்கனவே நாம எல்லோரும் அழிஞ்சு போயிட்டு இருக்குற உலகத்துல தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்...ஜாதியும் ஜாதி கட்சியும் 
ஜாதி என்பது மனிதனில் கலக்கும் நஞ்சு, அது அவனை மிருகமாக்கும். அதுவே அந்த ஜாதி ஒரு கட்சியாக மாறினால் அது நாட்டிற்கே கேடு விளைவிக்கும். ஜாதியும் ஜாதி கட்சிகளும் புறக்கணிக்கபடும் வரை மனிதன் மனிதனாகவும் கட்சி மக்களுக்காகவும் இருக்காது.  

சமநிலை 
இங்கே யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே... 

திருநங்கை
உங்கள் அப்பா என்றாவது உங்களை வெறுத்து நிராகரித்தது உண்டா? என்றாவது உங்கள் அம்மா உங்களை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்தது உண்டா? உங்கள் சகோதரன் அல்லது சகோதரி உங்களை அவமானமாக நினைத்தது உண்டா? உங்களை உங்கள் சுற்றம், நட்பு கேலி செய்தது உண்டா? இத்தனையும் மீறி நீங்கள் வாழ்ந்தது உண்டா? ஒவ்வொரு திருநங்கையும் இத்தனையும் கடந்து தான் வாழ்கிறாள்... பல மனக்காயங்களை சுமந்து தான் வாழ்கிறாள்... வேதனையான மறுக்கமுடியாத உண்மை இது. 

பேரம் பேசுதல் 
பிரபலமான துணி கடைகளில் துணி வாங்கும் பொழுது துணியில் உள்ள அட்டவணையில் உள்ள விலையை சற்றே தயங்காமல் வாதம் செய்யாமல் பணத்தை கட்டி விடுகிறோம். சாலையில் கர்சீப் விற்கும் சிறு வியாபாரிகளிடம் ஒரு ரூபாய்க்கு கூட பேரம் பேசுவது நம்முடைய ஆதிக்கதன்மையும்,புத்திசாலி என்கிற நினைப்பையும் பிரபலமான துணி கடைகளில் நம்முடைய அடிமைத்தனத்தையும் பிரதிபளிக்கிறது. மாற்றம் வேண்டும் சிந்தனையிலும் செயலிலும்.

பழகுவது
எந்த காரணமும் இல்லாமல் யாரும் யாருடனும் பழகுவது இல்லை, தேவையின் அளவை பொருத்து அடுத்தவரோடு பழக்கம் கூட குறைச்சல் உள்ளது. காரணங்கள் பலவகையாக இருக்கலாம் பணமோ, பொருளோ, அன்போ இப்படி எதுவும் இருக்கலாம். இது இயற்கை இதில் தவறும் இல்லை. அதிக சுயநலம் தான் பழக்கவழக்கத்தில் கூடாது.
அன்புடன் ஆயிஷாபாரூக்  

November 22, 2012

மச்சானுக்கு செய்தி வெச்சேன்
காடுக்கரை வேர்வ சிந்தி
உளைச்ச என் மச்சானுக்கு 
பக்குவமா கம்மங்கு கூழு
கிண்டிவைச்சு பத்திரமா
வூடு சேர சன்னலோரம்
நின்னு எட்டி பார்துதிருந்தேன்
மணிக்கணக்கா காத்திருந்தேன்

தாமரைபூ சிரிப்ப போல
மச்சான வரவ பார்த்துபுட்டு
சூடான தண்ணீர கலந்து
உடல்சோர்வ போக்க  
கொல்லையோரம் எடுத்துவெச்சு
சந்தன மணக்க மச்சான்
குளிச்சு வந்து என் முந்தானை
ஈரம்பட தலைய தோர்த்திவிட்டேன்

ராப்பகலா உழைச்சு பசியாறும்
மச்சானுக்கு சேதி வெச்சேன்
நீ குடிச்ச கஞ்சியிலே
என் வயிறும் நிரஞ்சுருச்சு
நீ போட்ட வெத்தலையில்
என் நாக்கு செவந்துருச்சு
சாம்பலும் மாங்காவும்
தின்ன ஆசை வந்தாச்சு
குளிச்சு நாளும் ஆயாச்சு
வெட்கப்பட்டு மாமன் தோளில்
சாஞ்சு செய்தி சொல்லி
மார்போரம் கோலம் போட்டேன்
பாசம் பொங்க அணைச்ச
மச்சான்கிட்ட வார்த்தை மறந்து
நானும் சொக்கி நின்னேன்....

அன்புடன் 
ஆயிஷாபாரூக்

November 19, 2012

காதல் தோல்வி எனக்கில்லை

காதல் தோல்வி
அடைந்த உன்னை
மனமார காதலிக்கிறேன்
அன்பின் ஆழத்தையும்
வலியின் வடுகளையும்
உறைந்த கண்ணீரையும்
சுமந்த உன் இதயம்
இனி ஏமாறக்கூடாது

மறந்து சென்றவளை
நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும்
என்னை காணவில்லையா?

விலகி சென்றவளை
விரும்பும் உன் இதயம்
விழிப்பார்த்து உன்னை
வரவேற்கும் என் மனதை
உனக்கு புரியவில்லையா?

காதல் தோல்வியின்
வலியை அறிந்த நீ
எனக்கும் அந்த வலியை
தருவது முறையோ
ஆருயிரே! என்னுயிரே!

வாழ்வும் மரணமும்
உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு
உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்

அன்புடன்
ஆயிஷாபாரூக்

November 15, 2012

சூப்பர் காதல் கவிதைகள் - பெண்களின் காதல்

 கண்ணாடி வளையல்
  
தங்கத்தால சேஞ்சு
கல்லு கொஞ்சம் பதிச்சு
மின்னும் வைரம் போல
அன்பு மனசு சிலிர்க்க
ஆசை பட்டு கேட்டேன்
என் அத்தான்கிட்ட வளையலு
 
வெள்ளிகழமை சந்தையிலே
வேகாத வெயிலிலே
ராவு பகலா வேர்வை சிந்தி
உளைச்ச மச்சான்
வாங்கி வந்தான் வளையலு
அது கண்ணாடி வளையலு

கூரை வீட்டுக்குள்ளே
கஞ்சி சோறு பிணைஞ்சு
வெங்காயம் மிளகு கில்லி
ஆசையா ஊட்டிவிட்டேன்
மாமன்கிட்ட செய்தி சொன்னேன்
தங்கமென்ன வைரமென்ன
அன்புகொண்ட வளையமா
ஆசைத்தீர பாசம்பொங்க
என் சாமி நீயிருக்க
கண்ணும் மின்னும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
ஓசை கலகலக்கும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
மாமா! இந்த கண்ணாடி
வளையல் போதும்…..
 
அழகிய ராட்சஸி
 
 உன் தேவைகளை
அறிந்து செய்யும்
அசிங்கமான தேவதை
உன் அன்புக்காக
தொந்தரவு செய்யும்
அழகிய ராட்சஸி
உயிருடன் கொல்லும்
உன்னுடைய ஏக்கம்
உறைந்து போகும் முன்
என்னுயிர் பிரியும் பின்
என் கல்லறை
முன்பு அழுவதைவிட
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளில்
என்னை காதலி
அன்பு காதலனே
உயிருடன் மோட்சம் அடைவேன்...
 
 

 விடை சொல்லிவிடு
 
உன் குறுகுறு பார்வை
குளிர் காற்றை வீசுதே
மனம் ஏனோ மகிழ்ந்து
வானில் பறந்து திரியுதே
நேரில் சொல்ல எழுதி
வைத்த கவிதை நூறு
முகத்தை கண்டு சொல்ல
மறந்த வார்த்தை நூறு
மனதினில் ஒளித்து வைத்தேன்
புன்னகைக்கண்டு மறந்து போனேன்
மந்திரம் தந்திரம் என்ன செய்தாய்
மனதில் நுழைந்து ஆட்சி புரிகிறாய்
என்ன செய்வேன் எப்படி சொல்வேன்
காதல் நோயின் மருந்தே நீயென
மனம் படும்பாடு தெரிகிறதா
வஞ்சியின் மனநோய் புரிகிறதா
விடை சொல்லிவிடு என் மன்னவா
எந்தன் வாழ்க்கை உனது அல்லவா... 
 
அழகான மூன்று காதல் கவிதைகள்... காதல் செய்யும் எல்லா பெண்களுக்கும்... 
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 
 

November 12, 2012

தீபாவளி ஸ்பெஷல்


என் அன்பான அணைத்து தோழர் தோழிகளுக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் கவிதை மூலமாக தெரிவித்து கொள்கிறேன். அன்புடன்
ஆயிஷாபாரூக்

November 5, 2012

கட்டவிழும் ஆண்மை...
மோகத்தால் எழுந்த அலைகள்
மேலும் கீழுமாய் மோதிவிட்டு 
மோட்சம் தேடி அலைகிறது
இரவும் பகலுமாய் சுழலும்
காலங்களிலும் அணையா விளக்காய்
மனதில் எழுந்த மின்னல்கள்
உன்னுடலின் காந்த அலைகளில்
அதிரும்  வேகத்தில் மோதிவிட
அனைத்தலும் ஆக்கமும் ஒருசேர
இருமனமும் ஈரமாய் உடலிறுகி
ஆழ்கடலின் ஆழத்தை சுடரும்
திரியாய் ஊடுருவி நீதேட
தேக்குமரத்தை சுற்றிய பூக்கொடியாய்
கண்விழி ஈரம் வழிந்து உண்மூச்சை
சுவாசித்த வண்ணம் ரசிக்கிறேன்
கட்டவிழும் உனது ஆண்மையை...
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

October 31, 2012

நீலம் புயலும் காதலும்... ஆண்கள் ஸ்பெஷல்

அழகான சூழல் இதமான பருவம், சாரலுடன் காற்று சொல்லவே வேண்டாம் கூட ஒரு கப்பில் சூடான தேநீர், ரசனைக்கும் கவிதைக்கும் பஞ்சமே இருக்காது. என்னோட காதலுனுக்காக எழுதினது... ஆனாலும்

இந்த கவிதைகள் அனைத்தும் ஆண்களுக்கு சமர்பிக்கிறேன்.நீ பேசுவது பொய்யென
தெரிந்தும் ரசித்தேன்
உதட்டில் பொய்யும்
உள்ளத்தில் மெய்யும்
கொண்டு பொய் பேசும்
ஆண்கள் அழகு தான்! என் காதோர ரிங்காரம்
பாடும் கொசுவிடும் சொல்வேன்
என்னை மறந்து தூங்கும்
காதலனை என்
தூதுவனாய் போய் கடி...
இதயம் ஈர்க்கும்
வசியம் அவனிடம்
மட்டுமே உள்ளது
கண்கள் குளிரவும்
கண்கள் நனையவும்
செய்பவன் அவனே
என் வசியக்காரன்
நீ பிடிக்கும் சிகரெட்டிற்கு
தெரியாது உருக்குவது
உன்னுயிர் மட்டும் அல்ல
என்னுயிரும் சேர்த்தேயென
புகைப்பதை நிறுத்திவிடு காதலனே
கரையும் சிகரெட்டை உணரும் நீ
கரையும் என் மனதை உணர்வாயோ!
 
 
 நீ முத்தமிடும் போது
என் கன்னத்தில் குத்தும்
உன் மீசை உணர்த்துகிறது
ரோஜாவை காக்கும் முட்களை...


நம்ம நீலம் புயலுக்குக்காக ஒரு குட்டி கவிதை... புயல ரசிச்சுட்டு மழைல நனைஞ்சுட்டு இந்த கவிதைய படிங்க.. அப்போ தான் SUPER EFFECT இருக்கும் !!!


  

நீலம் புயலே நீலம் புயலே
உள்ளம் கொல்லும் சூறாவெளியே
பெய்த்திடும் மழை மூலம்
குளிர் பரவி சிலிர்த்தாயே
மனம் அதிலே நனைந்தபடி
கவி எழுத அழைத்தாயே
காற்றாய் மாறி புயலானாய்
வெப்பம் தனித்து குளிரானாய்
புயலை தணிக்க மழையானாய்
சாயம் போகா நீலம் புயலே...
 
கவிதைகள் ரசிச்சு இருப்பிங்கன்னு நினைக்கிறன்...  நீலம் புயல் அமைதியாக கரையை கடக்கட்டும்... 

அன்புடன்
ஆயிஷாபாரூக்

October 25, 2012

மாண்புமிகு இந்தியர்கள்


 வல்லரசு கனவோடு பயணிக்கும் இந்தியாவில்
எங்களின் பொருளாதார பங்கும் அடங்கும்
நாங்கள் பொறுப்பாக செலுத்திய வரிகளில்
எங்களின் அடிப்படை வசதிகள் குறைந்தது
ஆதிக்கவர்க்கத்தின் அறிவார்ந்த தாக்குதல்
எங்களின் மீதே எங்கும் நடத்தப்படுகிறது
ஏகாதிபத்தியத்தின் அதிகார பண சுரண்டல்கள்
எங்களின் உழைப்பிலிருந்து உறிஞ்சுப்படுகிறது
பணம் உள்ளவர்களின் பலம் அதிகரிக்கப்படுகிறது
ஏழைகளின் வரைமுறைகள் சுருக்கப்படுகிறது
வாழ்கையின் இன்பமும் சொகுசும் இருப்பவர்கே
கலைந்த கனவுகளும் தோய்ந்த முகங்களுடன்
இழக்க எதுவுமின்றி நிர்கதியாக நிர்வாணமாக
அனைத்தும் ஊருவபட்ட நிலையில் நாங்கள்
கையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள் 
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

October 23, 2012

பெண்களின் கவனத்திற்கு...

இந்திய குடும்ப பெண்கள் தங்களின் குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி தங்களை பற்றி அதிகமாக கவனிப்பது இல்லை. இந்தியாவில் இருபத்தி இரண்டு பெண்களுக்கு ஒருவர் என மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானம் நிறுவன நோய் கட்டிகள் பற்றிய ஆய்வு பேராசிரியர் ஜுல்க தெரிவித்தார். இதே எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் எட்டுக்கு ஒரு பெண்மணி விதம் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை விட தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிகமான அளவில் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,15,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு  250,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் உயர வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிறகு சாத்தியமான கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10.9 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் பாதிக்கப்படுகின்றனர். 6.7 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் இறக்கின்றனர்.

ஆபத்து காரணிகள் :-
 • பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
 • முப்பது வயதை கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர சாத்தியக்கூறு உள்ளது.
 • கருப்பு நிற பெண்களை விட சிகப்பான பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் அதிகம் வர சாத்தியம் உள்ளது.
 • தாய்,சகோதரி, மகள் என்று அறியப்படும் நெருங்கிய உறவுகள் மற்றும் பாட்டி, சித்தி இரண்டாம் நிலை உறவினர்கள் எவருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்தால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
 • 12 வயதிலேயே வயதுக்கு வந்த பெண்கள் அல்லது 55 வயது கடந்து மெனோபாஸ் ஆகும் பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
 • கொழுப்பு நிறைந்த அதிக உணவு உட்கொள்ளும் பெண்களிடமும், மற்றும் அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
 • மது உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த மார்பக புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.
 
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:-
 • மார்பகம் உணர்ச்சியற்று இருத்தல் அல்லது மார்பகத்தில் கட்டி உருவாகுவது.
 • அக்குள்களில் அல்லது அதற்க்கு அருகில் கட்டி உருவானால் புற்றுநோய்க்கான ஒரு அடையாளம் இருக்காலாம்.
 • பெரும்பாலான மார்பக கட்டிகள் புற்றுநோய் இல்லை எனினும் ஒரு மருத்துவர் மதிப்பீடு வேண்டும்.
 • மார்பகத்தில் இருந்து இரத்தம் வருவது.
 • முலைக்காம்பில் மாறுபாடுகள்.
 • மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள் சிவத்தல், அமைப்பு மாற்றங்கள் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் பொதுவாக தோல் நோய்கள் அறிகுறிகளாக இருக்கலாம், ஆனாலும் சில நேரங்களில் மார்பக புற்றுநோய் தொடர்பில்  முடியும்.
இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு அறிந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.


மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:-

மார்பக புற்றுநோய் கண்டறிதல் வழக்கமாக மார்பக பயாப்ஸி, மேம்மோகிராஃபி, அல்ட்ராசோனோகிராபி அல்லது MRI பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மூலம் கண்டறியப்படும். மார்பக கட்டியின் அடிப்படையில் மார்பக புற்றுநோய் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தப்படும். மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படுக்கிறது, அதற்க்கு பிறகு நோயின் தீவிரத்தின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி அல்லது ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
மாதவிடாய் நின்ற பின்னர் அணைத்து பெண்களும் ஒரு தடவை மார்பக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. நம் இந்திய பெண்கள் பெரும்பாலும் பாலியல் நோயாக இருந்தாலும் மார்பக நோய் இருந்தாலும் வெளியே சொல்ல தயங்குகின்றனர். சிகிச்சை பெற முன்வருவது கிடையாது. இத்தகைய சூழல் மாற வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்