July 12, 2012

ஜாதிகள் இருக்குதடி பாப்பா

            இந்திய சாதி அமைப்பு, பல சாதிகள் கொண்ட மக்களை உள்ளடிக்கியது. சாதிகள் பெரும்பாலும் மோசமான விளைவுகளை மட்டுமே மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. பாகுப்பாடு, ஒடுக்குமுறை, வேற்றுமை காண்பது என்று பல விளைவுகளை பெயரிட்டாலும் மனிதனுக்குள் கலந்துள்ள ஜாதிப்பித்து அவன் தலைகேறி மிருகமாக நடமாட வைக்கிறது. மனிதன் குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தபின்பு தான் ஜாதியின் அடையலாம் அவனுக்கு காணப்படும். தற்போது அவன் பிறக்கும் முன்பே என்ன ஜாதி வேண்டும் என்று தீர்மானிக்க படுக்கிறது ? வியப்பாக உள்ளதா எங்கே எப்படி என்று!
     தற்போது திருமணமான தம்பதிகள் சிலருக்கு கருவுறாமை என்பது பிரச்சனையாக உள்ளது. இயற்கையிலே கருவுறாமை இல்லாத தம்பதிகளுக்கு தீர்வாக விந்து நன்கொடை மூலம் குழந்தை கிடைக்கும் பேறு பெரும் வாய்பாக அமைந்துள்ளது. இயற்கையிலே கருவுறாமை இல்லா பல தம்பதியினர் இதற்காக மருத்துவர்களை அணுகி தங்களுக்கு குழந்தை பேறு பெற சிகிச்சை மேற்கொள்கின்றனர். இங்கே தொடர்கிறது மனிதனின்  ஜாதிவெறியின் அவலம்.
               சமிபத்தில் ஹிந்தியில் வெளியான " விக்கி டோனோர்" என்கிற திரைப்படம் கூட விந்து நன்கொடையாளரை பற்றிய கதையை அடிப்படையாக கொண்டது. அதன் கதாநாயகன் மகப்பேறு வாய்ப்பு இல்லா பல தம்பதிகளுக்கு விந்து தானம் செய்து கருவுறாமை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முயலும் கதையை அடிப்படையாக கொண்டது. நானும் அந்த திரைப்படம் கண்டேன், கருவுறாமையாள் அவதியுறும் தம்பதிகளுக்கு நவீன காலத்தில் உள்ள மருத்துவத்தின் வாய்ப்புகளும் தேவையும் வெளிக்காட்டிய படம் என்றே கூறலாம். விந்து தானத்திற்கும் ஜாதிவெறி அவலத்திற்கும் எங்கே உள்ளது முடிச்சு என்று நீங்கள் கருத்தலாம். அதற்கு உங்களின் கண்முன்னே ஒரு பார்வைக்காக நான் படித்ததை உங்களிடம் பகிரும் உண்மை சம்பவம் இதோ.. இந்த கட்டுரை நான் எழுத காரணம் ஜாதி எவ்வாறு இந்திய மக்களின் மனவேருகளில் எவ்வாறு  உள்வாங்கியுள்ளது என்பதை தோலுரித்து காட்டத்தான்.
            பாட்னா, அதிக மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்தின் தலைநகரம். அங்கே டாக்டர் ஹிமான்சூ ராய் என்கிற மருத்துவர் விந்து வங்கியுடன் பிரபலாமான மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். விந்து நன்கொடை, செயற்கை மகப்பேறு  என்பது நகர்புற மக்களிடம் அதை பற்றிய அறிவு இருந்தாலும் கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு குறைவு என்றே சொல்லாம். தற்பொழுது கிராம புறங்களில் இருந்தும் பெரும்வாரியான குழந்தை பேறு வாய்ப்பு இல்லா தம்பதிகள் தங்கள் மகப்பேறு மருத்துவனைக்கு வந்து செயற்கை கருத்தரிப்பு முறை குறித்து ஆலோசனை சிகிச்சை பெறுவதற்கு     "விக்கி டோனோர்" என்கிற படம் கிராமபுற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு காரணமாக அமைந்து உள்ளது என்கிறார் மருத்துவர். 
            உலகளவில் பெரும்பாலும் விந்து நன்கொடை பயன்படுத்தும் தம்பதிகள் விந்து கொடுப்பவரின் ஆரோக்கியம் பற்றியே அதிகளவில் மருத்துவரிடம் விசாரிப்பர். ஆனால் பீகாரில் விந்து நன்கொடை பயன்படுத்தும் தம்பதிகள் விந்து கொடுப்பவரின் ஜாதியை பற்றி கேட்பதாக மருத்துவர் கூறுகிறார். சிலர் விந்து கொடுப்பவரின் பண்பாடு, சுகாதாரம், உடல் அம்சங்கள், மதம் பற்றி கேட்பதைவிட சாதி பற்றியே அதிகமாக கேட்பதாகவும் அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினாமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மற்றொரு விந்து வங்கி நடத்தும் டாக்டர் சவுரப் குமார் அவர்களும் இதையே தெளிவுபடுத்தினார். இந்திய மக்களிடம் ஜாதிவெறி எந்த அளவிற்கு ஆழமாக வேருன்றி இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு ஆகும்.
            சில விந்து வங்கிகளில் 'பிராமணர்', பூமிஹார்' 'யாதவ்','ராஜ்புத்' மற்றும் பல சாதி ஸ்டிக்கர்கள் பெயரிடப்பட்ட குழாய்கள் அடையாளப்படுத்தி வகை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மருத்துவர் கூறினார். பீகார் மக்கள் சாதி, சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் போன்றவற்றில் மிகவும் தீவிரமான வேட்கை உடையதால் பிரச்சனையின் உணர்வை மனதில் கொண்டு இப்படி செய்யவதாக மருத்துவர்கள் கூறினார்கள். பல கல்லூரி மாணவர்கள் விந்து கொடை செய்வதாக தெரிவித்த மருத்துவர், கொடையாளர்கள் ஒவ்வொரு தடவையும் விந்து தானம் செய்யும் போது விந்தின் வீரியத்திற்கு ஏற்ப பணம் கொடுப்பதாக தெரிவித்தார். 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விந்து கொடை செய்யும் நபர்களுக்கு பணம் கொடுக்கப்படுக்கிறது என்றார். (நன்றி: இந்திய இங்க்)
             இத்தகைய தூய்மையான குழந்தை பேறு வேண்டி அர்பணிப்புடன் உள்ள இடத்தில கூட ஜாதிவெறி என்கிற சாக்கடையில் புழுக்களை போல  உலவும மக்களால் புனிதத்தன்மை அசுத்தபட்டு விட்டது. அத்தகைய ஜாதி வெறியர்கள் தங்கள் ஜாதி இரத்தம் மட்டுமே தூய்மையானது என்கிற அறிவின்மையில் இருக்கலாம். பெரியார், அம்பேத்கார் போன்ற பல தலைவர்கள், ஜாதி எதிர்ப்பு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பலர் ஜாதி ஆகல பேசியும் செயல்பட்டும் இந்திய மக்களிடையே ஜாதியின் வீரியம் குறையவே இல்லை, அவனின் ரத்தத்தில் அது கலந்துள்ளது. குழந்தைகளுக்கு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி குழந்தைகளிடம் பொய் சொல்கிறோம்.. ஜாதிகள் இருக்கிறது...இந்திய மக்களின் ரத்தத்தில் அது கலந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.. ஆதனால் தான் ஜாதி என்கிற சொல்லில் கூட புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிற பாரதியின் வரிகள் காகிதத்தில் மட்டுமே, நடைமுறையில் நாம் பயணிப்பதோ வேறு! ஜாதிகள் அகல வேண்டும், அனைவரும் சமம் என்கிற நிலை வேண்டும்.

ஜாதி வெறி மனிதர்களுக்கு நான் எழுதிய கவிதை உங்கள் கண்முன்னே....

நீ எந்த ஜாதி என்று கேட்டா
பூமி உன்னை சுமக்கின்றது!

நீ எந்த மதம் என்று பார்த்தா
நிலம் நீர் கொடுக்கிறது!

நீ எந்த இனம் என்று அறிந்தா
காற்று சுவாசிக்க அனுமதிக்கிறது!

கல்விக்கும் வேலைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
அறிவும் செல்வமும் ஜாதியை பார்ப்பதில்லை!

பிறப்புக்கும் இறப்புக்கும் ஜாதியை பார்க்கிறாய்
ஜனனமோ மரணமோ ஜாதியை பார்ப்பதில்லை!

விளையாட்டிலும் வீரத்திலும் ஜாதியை பார்க்கிறாய்
சாதனையும் தைரியமும் ஜாதியை பார்பதில்லை!

நிறத்திற்கும் மொழிக்கும் ஜாதியை பார்க்கிறாய்
நோயோ புலமையோ ஜாதியை பார்ப்பதில்லை!

கோவிலுக்கும் கருவறைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இறைவனோ தீபமோ ஜாதியை பார்பதில்லை!

பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இசையோ கலையோ ஜாதியை பார்ப்பதில்லை

மூடன் ஏற்படுத்திய பிளவு மனிதனுள்
கீழ் ஜாதியாம் மேல் ஜாதியாம்
மேல் ஜாதி என்றால் உனக்கு சொர்கமோ!
கீழ் ஜாதி என்றால் உனக்கு நரகமோ!
சொர்கமோ நரகமோ அவையிரண்டும்
ஜாதியோ மதமோ பார்ப்பதில்லை
உன் புண்ணியக் கணக்கையோ
நீ செய்த பாவக் கணக்கையோ
இறைவன் பார்க்கிறான்! மதிப்பிடுகிறான்.

மரமோ செடியோ கொடியோ
மிருகமோ பறவையோ நுன்னுயிரோ
ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை
அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும்
மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து
ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா!
விழித்திரு மானிடா! விழித்திரு!!!

... அன்புடன் ஆயிஷா பாரூக்...

18 comments:

 1. அருமை ஆயிஷா நல்ல கட்டுரை

  நாம் புலம்புவதை தவிர என்ன செய்ய முடியும்..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 2. மிக நல்ல கட்டுரை! விந்து தானத்திலும் ஜாதி என்பது வேதனையான விசயம்தான்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 3. yes,true ellame poi poi poi thaan.

  ReplyDelete
 4. nice sister..romba azhaga aazhamaa ezhuthirukeenga..thodarattum ungalin ezhuththukkal..

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி!

   Delete
 5. நல்ல பதிப்பு !!!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

   Delete
 6. வருத்தமளிக்கும் செய்திதான். இதை எதிர்த்து என்ன செய்ய முடியும்? பல நூறு ஆண்டுகளாக சாதி மத மாயைக்குள் மயங்கி கிடக்கும் சமுதாயாத்தை சிறிது சிறிதாகத்தான் வழிக்கு கொண்டு வர முடியும். சமூக நலனில் அக்கறை கொண்ட பதிவு
  பகிர்வுக்கு நன்றி ஆயிஷா.

  ReplyDelete
  Replies
  1. சாதிகள் இல்லாமை வேண்டும், மனிதனின் ஏற்ற தாழ்வுகள் விலகிட வேண்டும் என்பதே என் விருப்பம்.. பலர் விருப்பமும் அதே...உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

   Delete
 7. விழித்திரு மானிடா! விழித்திரு!!!
  எப்படிச்சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் கேட்பவர்களுக்கு கேட்குமா? தெரியவில்லை. சிந்திக்க வைக்கும் கட்டுரை நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. சகோ வின் கருத்துக்கு மிக்க நன்றி. சிந்திக்க வேண்டும் அதை செயல்படுத்த வேண்டும்...

   Delete
 8. சிந்தனைக்குறிய கட்டுரை சாதிமதம் ஒழிந்தால்தான் மனிதன் மனிதனாக வாழமுடியும், சகோ. இக்பால் செல்வன் அறிமுகத்தால் தங்களின் பதிவைக் காண முடிந்தது அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பகிர்வை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி.

  இனியவன்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பார்வைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி! அன்புடன் என்றும் உங்களை வரவேற்கிறேன் சகோதரரே!

   Delete