July 11, 2012

விடை அறியா பயணம்...


ஆண்டுகள் புரண்டோட நம் அனுபவம் உலகில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் தினம் நாம் பயணிக்கும் தளங்களில் விருப்பு வெறுப்பு, உண்மை பொய்மை, நல்லவை கெட்டவை என அனைத்தும் கலந்த கலவையான வாழ்கையில் பயணிக்கிறோம். நாளை நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பது யாவருக்கும் அறியாது, நாளை என்பதில் ஆச்சரியமும் வியப்பும் மட்டுமே  நிறைந்துள்ளது. இருந்தும் நல்லதே நடக்கும் என்கிற நினைப்பில் தான் வாழ்க்கை கடலில் பயணிக்கிறோம்.

புலரும் காலைப்பொழுதில் சூரியனும் அந்தி சாயும் வேளையில் சந்திரனும் தத்தம் கடமைகளை திறன்பட செய்துவருகிறது. நம்முடைய நாட்களும் கடமைகளும்,செயல்களும் அதை கொண்டே கணிக்கிடப்படுகின்றன. இறைவன் படைத்த உலகில் எத்தனை வேற்றுபாடுகளை மனிதன் உருவாக்கியுள்ளான். வடதுருவம் தென்துருவம் போல மனிதனின் வாழ்க்கை வேறு வேறு எல்லையில் அமைக்கப்பட்டு உள்ளது. தினம் ஒருவேளை சோற்றுக்கு திண்டாடி வறுமையில் வாழும் மக்கள் ஒரு புறம் அடம்பர சொகுசு வாழ்வில் திக்குமுக்காடி தவழும் மக்கள் ஒரு புறம். யார் உருவாக்கியது இத்தனை முரண்கள்?

கண்முன்னே காட்சியில் இருக்கும் இத்தகைய வேறுபாடுகள் கலையப்பட வேண்டியவை. மனிதன் மனிதனையே வேறுபடுத்தும் மதங்கள், இனம், மொழிகள், ஜாதிகள் போன்றவை நம்மை குறுகிய வட்டத்திற்குள் சுழல விட்டுள்ளது. இத்தகைய காரணிகள் பெயரால் நாம் நம்மை அடுத்த மனிதரிடம் இருந்து வேறுபடுத்தி நிற்கிறோம். அதனால் நாம் சாதித்து என்ன? எதை அடைந்தோம்!  பிரிவினைவாத செயலுக்கா  இல்லை சண்டையிட்டு சாகவா.. வாழ்கையை அன்பும் அரவணைப்பும் கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டிய நாம் நம் மனதில் தேவையற்ற போட்டி,பொறமை,வஞ்சகம் என்று நிம்மதி இழந்து தவிக்கிறோம். மகிழ்ச்சியின் ஆரம்பமும் துன்பத்தின் பொறியும் நம் மனதே என்பதை நினைவில் கொள்ளவும்.

மனிதன் மனிதனை ஆள்கிறான், அடுக்குமுறை செய்கிறான். மனிதனே நீதிபதி, அவனே தண்டனைகள், விதிகள் அமைக்கிறான். பணம், செல்வாக்கு, அதிகாரம் உள்ளவர்க்கு இந்த விதிமுறைகள் மாறும் இல்லாதவர்க்கு விதிகள் தன் கடமையை செய்யும். உழைக்கும் வர்க்கம் வியர்வை துளிகளை கூலியாக பெற்று முதலாளி வர்க்கம் பணத்தை தின்று ஏப்பம் விட்டு உழைக்கும் தொழிலாளிகள் மேலேறி வாழ்கையை ஆடம்பரமாக பயணிக்கிறது. இருப்பவன் இன்னும் பொருளை சேர்கிறான் இல்லாதவன் இருக்கும் பொருளை விற்கிறான்! இது தான் சமதர்ம நிலையா? இல்லை வாழ்வியலின் அர்த்தமா!

ஒடுக்கபட்டோரின் குரல்கள் ஒலிப்பதை யாரும் உணரவில்லை, அடக்கியாளும் மக்களின்  காதுகளில் இன்னிசை கீதம் பாய்வதால். உலகம் தன் முடிவு வரை இப்படியே தான் பயணிக்குமா? விடையை தெரியாமல் உங்களை போல நானும் தேடுகிறேன், மாற்றம் வரும்.. மாறாத சில காட்சிகள் மாறும் என்கிற நம்பிக்கையில்!

3 comments:

 1. Hi... I connected to Valaiyakam.. Thanks!

  ReplyDelete
 2. இருப்பவன் இன்னும் பொருளை சேர்கிறான் இல்லாதவன் இருக்கும் பொருளை விற்கிறான்! இது தான் சமதர்ம நிலையா? இல்லை வாழ்வியலின் அர்த்தமா!

  ஆதங்க வரிகள் சகோ. மாற்றம் வருமா?

  ReplyDelete
 3. வணக்கம் ஆயிஷா உங்களுக்கு ஒரு விருதை தந்துள்ளேன். என் தளத்திற்கு வந்து பெற்று கொள்ளுங்கள்...

  ReplyDelete