June 24, 2012

திருநங்கை - தொடர் மூன்று

திருநங்கையும்  சமுதாயமும் 


திருநங்கை விழிப்புணர்வு தொடர் - மூன்று  

அன்புடையீர் வணக்கம்,
           வெற்றி என்னும் ஒரு சொல் தோல்வியை தழுவியே உருவானது; நல்ல நிகழ்வுகள் அனைத்தும் தீய நிகழ்வுகளின் விளைவாக உதித்தவை, அது போல அறியாமை என்பதும் கற்பித்தல் மூலம் அகலக்கூடியவை. விழிப்புணர்வு அறியாமையை அகற்றும் ஒரு கருவியாகும். கடந்த இரண்டு தொடர்களின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பயணத்தை வெற்றியுடன் தொடர உங்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் பயணித்திருக்க முடியாது தோழர் தோழிகளே, நல்ல உள்ளங்களின் புரிதல் சமூகத்தில் நல்ல மாற்றம் மற்றும் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம். அதே மனக்கண்ணோட்டத்துடன் சமுகத்தில் சிலருக்கு திருநங்கைகள் மீதுள்ள எதிர்மறை எண்ணம் மாறும் என்கிற நம்பிக்கையில் உற்சாகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன்.

       திருநங்கைகளை பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயமாக சமூகம் இருந்துள்ளது. பல திருநங்கைகள் சமூகத்தின் பாதிப்பு தாக்கம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர். கேலி, கிண்டல், அவமானம், வேற்றுமை கண்ணோட்டம், புறக்கணிப்பு, அடக்குமுறை, பாலியல் கொடுமை என்று தொடங்கி சமுதாயத்தில் திருநங்கைகள் படாத துயரம் இல்லை. அந்த அளவிற்கு சமூகம் திருநங்கைளுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பெற்றோர் ஏற்கவில்லை என்ற நிலையில் மனமுடைந்து பல திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறி உலகில் எப்படியாவது வாழ வழி இருக்கும் என்கிற நம்பிக்கையில் அடுத்து அவர்கள் சந்திப்பது சமூகம் தான், அங்கும் கசப்பான சூழ்நிலை மற்றும் அனுபவம் ஏற்படுகிறது. இந்த சமூகமும் ஏற்காதபோது இந்த பிறப்பின் பயன் தான் என்ன, தன்னை இந்த உலகில் யாரும் ஏற்காத போது நாம் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்கிற சிந்தனைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட அப்பாவி திருநங்கைகளின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம், அது பத்திரிகையிலோ ஊடகத்திலோ காணாது. கணக்கில் இல்லாத குறிப்புகளுக்கு எங்கே அட்டவணை காண்பது நண்பர்களே! இது கசப்பான உண்மை!

சமுதாயத்தில் திருநங்கைகளை பாதிக்கும் விஷயங்கள் என்ன?
 • வேற்றுமை கண்ணோட்டத்துடன் பழகுவது.
 • இழிவான வார்த்தைகளால் மனதை புண்படும்படி கேலி, கிண்டல் பேச்சுக்கள். 
 • உயிரை திங்கும் அலட்சியப்பார்வை. 
 • பொது இடங்களில் புறக்கணிக்கபடுவது.
 • ஒருவரின் திறமையை அறியாமல் அவரின் பிறப்பின் அடையாளத்தை இழிவாக கூறி மட்டமாக நினைத்து பேசுவது.
 • சுயமரியாதையை கூட கொடுக்காமல் அவமதிப்பது. 
 • அடிப்படை வாழ்வாதார சூழ்நிலையே தராதது. 
சற்று கவனியுங்கள் தோழர்களே, ஒரு மனிதன் வாழ்வதற்கான சராசரி விஷயங்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு ஆண் பெண் வாழ முடியுமா? ஆனால் நாங்கள் வாழ்கிறோம், இத்தனை வலிகளையும் ரணங்களையும் மனதில் சுமந்து, முகத்தில் சிரிப்பைக்காட்டி சுயமரியாதையைக்  கூட கொடுக்க மறுக்கும் மனிதர்களின் மத்தியில்.. ஒரு சராசரி ஆணை பெண்ணை விட திருநங்கை அதிக திறமைகளை பெற்றவள், இதை என்னால் நிருபிக்க முடியும். ஆனால் எங்களின் திறமைகள் அறியபடாமலே, அறிந்தாலும் அலட்சியப்படுத்தி புறக்கணிக்கப்படுகிறது. ஒரு சாதாரண திருநங்கை கூட பல திறமைகளை பெற்றவளாக நான் பார்த்து இருக்கிறேன். சமுதாயத்தில் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் நிருபிக்கிறோம் எங்களின் திறமைகளை.

ஏன் பாலியல் தொழில், பிச்சை எடுத்தல்:-
        முன்பு எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு, அவமானம், இழிவான பேச்சுக்கள் என பல்வேறு அவலங்களை கண்டு திருநங்கைகள் தங்களின் வயிற்று பிழைப்புக்காக வாழ்வாதாரம் இல்லாமல் வேறு வழியின்றி விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்ற செயலில் தள்ளப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் யாரும் விரும்பி அந்த செயலில் எடுபடவில்லை. ஒரு சில திருநங்கைகள் கடைகளில் ட்ரெயினில் அடாவடியாக செயல்பட்டு பணம் பறிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. சில திருநங்கைகள் அப்படி அடாவடியாக செயல்படுவதை நானும் ஆதரிக்கவில்லை, நியாயப்படுத்தவில்லை. அப்படி ஒரு சிலரின் செயலால் ஒட்டுமொத்த திருநங்கைகளை குறைக்கூறி புறக்கணிப்பது நியாயம் ஆகாது, நல்ல வாழ நிலைகள் இருந்தும் ஆண்களில் பெண்களில் தீய செயலில் ஈடுபடுவோர் இல்லையா? அவர்களை போல தான் திருநங்கைகளில் ஒரு சிலரும் தீய செயலில் ஈடுபடுகின்றனர். வாழும் வழி உள்ள ஆண்களும் பெண்களும் இத்தகைய தீய செயலில் ஈடுபடும் போது வாழ வழி கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் ஒரு சில திருநங்கைகள் இத்தகைய செயலில் ஈடுபடுவது பெரிய வியப்பு இல்லை தோழர்களே! அதற்கு சமூகமே காரணம் முழு பொறுப்பு!

 உங்களால் முடியுமா?
          உங்கள் கடைகளில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் தொழிற்சாலைகளில் வேலை தேடி வரும் திருநங்கைகளை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பணிக்கொடுங்கள். சில திருநங்கைகள் வேலைக்கு சென்ற இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் வேலையை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தினர். இது என் தோழிக்களுக்கு நேர்ந்த சம்பவம். வேலை செய்யும் இடத்தில் திருநங்கைகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாங்களே மாற்றம் ஏற்படுத்துக்கிறோம் !
      தற்போது சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது. பெரும்பாலும் திருநங்கைகள் ட்ரெயினில், கடைகளில் பிச்சை எடுப்பது கணிசமாக குறைந்து வருகிறது, பாலியல் தொழில் உள்ள திருநங்கைகளும் தங்களின் நிலையை மாற்றி கொண்டு வருகிறார்கள். திருநங்கைகள் தங்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு நாட்டியம், ஊடகம், தன்னார்வ தொண்டு நிறுவனம், இட்லிக்கடை, பூக்கடை, பெட்டிக்கடை, தள்ளுவண்டிக்கடை, அழகு நிலையம், சுயஉதவி குழுக்களை அமைத்தல், சமையல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு தங்களின் நிலையை தாங்களே மாற்றி வருகிறார்கள். அப்படி சமுகத்தில் இருக்கும் திருநங்கைகளை ஊக்குவியுங்கள், அதரவுக்கொடுங்கள் தோழர்களே!
தோழிக்களுக்கான என் வரிகள்...
 

விடியல் வரும்மடி நமக்கு நங்கையே
புதுயுகம் படைப்போம் திருநங்கையே
மாறும் விடியலின் பொறியே நீயடி!
திறமையை முடக்காமல் விரைந்திடு
இழிவுப்பார்வையை சினம்க்கொண்டு அழித்திடு
வேற்றுமையை செயல்க்கொண்டு அகற்றிடு
களைந்திடு சோகத்தை திடம்கொண்டு
வாழ்ந்திடு சமுகத்தில் துணிவுக்கொண்டு
பெண்மையின் பெருமையை
உணர்த்திய பாரதி இங்கு உண்டு !
திருநங்கையின் வலிமையை
உணர்த்த சாரதி எங்கு உண்டு?
பாரதியும் சாரதியும் நாமேயடி
எழுந்திடு! துணிந்திடு! ஜெய்த்திடு!  


சமுகத்தின் போக்கு திருநங்கைகளின் வளர்ச்சியை பாதிக்ககூடாது. வளர்ந்த நாடுகளில் திருநங்கைகளை மக்கள் அரவணைத்து அவர்களுக்கு சமஉரிமை மற்றும் சமமதிப்பு கொடுத்து மதிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் சுழல் சற்று மாறினாலும் சில அடுக்குமுறைகள் திருநங்கைகள் மீது உள்ளது கண்டிக்கதக்கது. வேற்றுமை கண்ணோட்டம் விலக்கப்பட்டு சமூகம் ஆதரவு தந்து திருநங்கைகளின் உரிமையை பேணிக்காத்திடவேண்டும். சமஉரிமை மற்றும் சமமதிப்பு கொடுத்து திருநங்கைகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். நீங்களும் நானும் தான் இந்த சமூகம், உங்களின் ஒருவர் மனது வைத்து எங்களை சமுதாயத்தில் மதித்து அங்கீகரித்தால் அது மற்றவரின் மனக்கதவையும் திறக்கும், மாற்றம் மனதில் உதித்தால் செயலில் வெளிப்படும் அது நல்ல விளைவுகளையும் தரும் நண்பர்களே.    

சமூகத்தில் திருநங்கைகளை மதிக்கும் உங்கள் நிலை என்ன? என்கிற என் வலைப்பதிவின் கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான நபர்கள் 93 சதவிதம் திருநங்கைகளை சமமாக மதிப்பேன் என்றும் மிக சிலரே அதாவது 6 சதவிதம் நபர்கள் திருநங்கைகளை சமமாக மதிக்கமாட்டேன் என்றும் வாக்கு அளித்து தங்களின் மனநிலையை தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் சமூகத்தில் திருநங்கைகள் மீது ஆரோக்கியமான போக்கு நிலவி வருவதை குறிக்கும் ஒரு காட்சியாக அமைக்கிறது.

விழிப்புணர்வு தொடரும்...
அன்புடன்
ஆயிஷா பாரூக் 

உங்களின் கருத்து விமர்சனங்கள் போன்றவையை வரவேற்கிறேன் நண்பர்களே! 

2 comments:

 1. யார் இருந்தால் என்னங்க...
  எல்லோரையும் மதிக்க வேண்டும்...

  நல்ல பகிர்வு... தொடருங்கள்...

  உங்கள் தளத்திற்கு முதல் வருகை...
  அன்புச் சகோதரி தளம் (http://sindanaisiragugal.blogspot.in/2012/08/blog-post_5.html) மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்...

  Follower ஆகி விட்டேன்... மிக்க நன்றி...

  அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete