October 14, 2012

ஒலித்திடு - 3

என் எண்ணங்களும் சிந்தனைகளும்....


 • வாழ்க்கை
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் வாழ்க்கை, ஆனந்தம் பூத்து குலுங்க அன்பு என்கிற ஆயுதத்தை பயன்படுத்தி வாழ்கையை அழகாக அமைப்பதும் (அல்லது) பிறர் மனம் நோக வெறுப்பை அனைவரிடமும் காட்டி வாழ்கையை ரணகளப்படுத்தி அழிப்பதும் நம் கையில் தான் உள்ளது.. எது வேண்டும் என்பதை அவரவர் முடிவு செய்யுங்கள்
 •   ஏளனம்
சித்தம் கலங்கி பேசும் சிலரின் பேச்சு எப்போதும் பலருக்கு ஞானியின் பேச்சு போல தான் தெரியும் ஆனால் உண்மையில் அவர் ஒரு பித்தரே... அடுத்தவரை ஏளனம் செய்து வாழும் வாழ்க்கை நிலைக்காது
 • அன்பும் அமைதியும்
தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் அன்பும் அமைதியும் உருவாக்க/ நிலைக்க ஒவ்வொரு மனிதனும் சிறிதளவாவது முயற்சிக்க வேண்டும். அன்பான மனிதர்கள் கொண்ட அமைதியான உலகம் அமைந்திட முயற்சிப்போம். 
 • முயற்சி
நம்முடைய கனவுகளும் ஆசைகளும் பெரிது, அதற்கு இணையாக நம்முடைய முயற்சியும் பெரிதாக இருக்க வேண்டும், அப்படி இல்லாத காரணத்தினால் தான் கனவு நினைவு ஆகாமல் கனவாகவே நீள்கிறது

 • முதியோர் தினம்
நாளை நாமும் கொண்டாடுவோம் அது நம் குழந்தைகளுடனா இல்லை தனித்து முதியோர் இல்லத்திலா என்று நம் பிள்ளைகள் முடிவு செய்வார்கள். நாம் நம் வயதான பெற்றோரை அன்புடன் மதித்து நடந்தால் தான் அதை பார்த்து நம் குழந்தைகளும் நாம் முதியவர் ஆன பிறகும் நம்மை போல அன்புடன் நடந்துகொள்வர்.
 • சுற்றுச்சுழல்
நாளைய சந்ததிகள் நம்மை பழி கூறும் வகையில் நம் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உள்ளது. பாதுகாப்பான சுற்றுச்சுழல் கொண்ட உலகம் உருவாக நம் பங்கு ஒரு சிறு அளவேனும் வேண்டும், அது எப்படி இருந்தாலும் கவலை இல்லை. ஒரு மரம் நடுவதோ அல்லது கழிவுகளை நம் வீட்டில் மறு சுழற்சி செய்வதோ, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயனில் தவிர்ப்பது, அதிக புகை கக்காமல் வாகனத்தை ஓட்டுவதோ, ஒலி பெருக்கிகளை முடிந்தவரை உபயோகப்படுத்தாமல் இருப்பது என்று நம்மால் முடிந்தவைகளை செய்து செய்து மாசுயில்லா உலகம் உருவாக முற்படவேண்டும்.
 • மௌனம்
பேசிய வார்த்தைகளை விட மௌனமான பார்வை பல பதில்கள் சொல்லும், ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு மௌனம் சிறந்தது.பிரச்சனையில்லாதாது, அமைதியானது, நிம்மதியானது
 • வானம் வசப்படும்
வானம் நமக்கு வசப்பட வேண்டும் என்றால் முதலில் நம் மனதை நாம் வசப்படுத்த வேண்டும்.. ஏனேன்றால் மனதின் தேவைகளை விட வானத்தின் உயரம் குறைவே.. மனம் எதையும் சாதிக்கும், எதையும் தோற்கடிக்கும்.
 • சமூக கட்டமைப்பு
மனிதன் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொண்டது தான் அவன் உருவாக்கிய சமூக கட்டமைப்பு. மனிதரில் பல வேற்றுமைகளை உருவாக்கி தன்னை தானே எதிரியாக்கி கொண்டான். இந்த சமூக கட்டமைப்பில் பெரும்பான்மையான வசதிகள் பணம் உள்ளவர்களுக்கே சாதகமாக உள்ளது.  
 • தீண்டாமை
தனது பீச்சாங்கையால் தன்னுடைய மலத்தை கழுவும் மனிதன் தனது வலது கையால் கழிவு அள்ளும் மனிதனின் கையைத்தொட மறுக்கிறான். கழிவு அள்ளும் மனிதனின் மனதில் அசிங்கம் இல்லை.. தொட மறுக்கும் மனிதனின் மனதில் தான் அசிங்கம் உள்ளது.
 •  நான்
ஒரு சிலர் மட்டுமே தேடும் உண்மையான நிலை, கண்ணிற்கு அப்பாற்பட்டு மனதில் ஒளிந்துள்ள ஒரு தன்னிரைவற்ற ஆழ்ந்த அமைதியான பிரபஞ்சம். அங்கே எந்த சலனமும் குழப்பமும் இல்லை. அறிந்தவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
 • பணம்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கம் அனைவருக்கும் உள்ளது. பெரும்பாலும் மிக விரைவிலே அதிக பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆவலில் உண்மையான வழியை கைவிட்டு தவறான வழியை உபயோகித்து பணம் சேர்கின்றனர். அல்லது அவர்களுக்கு அமையும் வாய்ப்பை பயன்படுத்தி தவறான வழிகளில் பணம் சேர்கின்றனர். கடைநிலை ஊழியர் முதல் அலுவலகத்தின் பொது மேலாளர் வரை இந்த நகழ்ச்சி நடக்கிறது. இது எல்லா துறைக்கும் பொருந்தும்! நியாயமாக பேசும் சிலர் கூட இப்படி பட்ட வாய்ப்பு வந்தால் மனம் குறுகுறுத்தாலும் கவலைபடாமல் பணம் சேர்கின்றனர். எல்லாம் பணம் செய்யும் மாயம் தான் இது!
 •  சூழ்நிலை
மனம் விரும்பும் பாதையில் செல்ல நாம் நாடினாலும், நம் சுழல் அதன் பாதையில் தான் நம்மை அழைத்து செல்கிறது.நம் வாழ்வின் பயணத்தை நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலைகளே பெரும்பாலும் தீர்மானிக்கிறது, அந்த பயணத்தின் முடிவே ஒன்று வெற்றியாகவோ தோல்வியாகவோ முடிகிறது. செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பது அவரவர் அனுபவம் அறிவைக்கொண்டு
அறியப்படுகிறது. பெரும்பாலும் நமக்கு குழப்பம் என்னவென்றால் எந்த பாதையில் போவது என்பதை பற்றி தான்?
 • உறவுகள்
கண்ணாடி பாத்திரம் போன்றது உறவுகள்; நிதானமாக கையாள வேண்டும். உடைத்துவிட்டால் மறுபடியும் சேர்ப்பது கடினம் கண்ணாடி துகள்கள் போல. சேர்ந்தாலும் அந்த பழைய பசை (பாசம்) இருக்காது.
 • தேடல் 
நம் மனது எதை தேடி பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே பாதி வாழ்க்கை தேவைபடுகிறது, மனதின் தேடலை நிறைவேற்ற மீது காலங்கள் பயணப்படுகிறது.

அன்புடன் 
ஆயிஷாபாரூக்