July 29, 2012

ரோஜா துளிகள்... காதல் துளிகள்


உன் காதல் அடையாளமாக நீ 
கொடுத்த ரோஜா மலர் வாடினாலும் 
வாடாத மலராக என் மணமுள்ளது 
உன் காதலை சுமந்துகொண்டு! 

----***----

வாசமுள்ள மலருக்கு 
என் மேல் கோபம் 
வாசமில்லா மலரான 
என் மீதுள்ள உன் காதலால்!

----***----

ரோஜாவே! நீயே அழகித்தான்
ஆனால் என்னவள் வெட்கத்தின்  
முன் உன் அழகும் தோற்றது 

----***----

முள்ளில்லா ரோஜாவும் 
கட்டுபாடுயில்லா பெண்ணும் 
பாதுகாப்பற்றது!

----***---- 

உன்னை சுற்றிய வண்டும் 
என்னை சுற்றிய காதலனும் 
இல்லையென்றால் 
நாம் பூத்தது வீண்!

----***----

மகிழ்ச்சியான மஞ்சள்நிற ரோஜா 
மென்மையான இளஞ்சிவப்புநிற ரோஜா 
உண்மையான வெள்ளைநிற ரோஜா 
பெருமையான ஆரஞ்சுநிற ரோஜா 
கௌரவமான லாவெண்டர்நிற ரோஜா 
உயிர் காதலுக்கு சிவப்பு ரோஜா 
இத்தனை ரோஜா நீ கொடுத்தாலும்  
என் ராஜா உன் அன்பின்முன்னால் 
எல்லாம் மனமிழந்து போகிறது 
மனம் கவர்ந்தவனின் அருகில் உள்ளபோது!

----***----
ஆயிஷாபாரூக்  

உன்னை நீயே கொல்லாதே...









போராளே, போராளே
போற வழி திரும்பாம
போகும் நேரம் வரும்முன்னே
பொறுமையின்றி போராளே
பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல
பார்த்திறாத துன்பமில்லை
மனசுக்குள்ள புழுங்கிச்செத்து
அழுதுதீர்த்த நாளுமில்ல
எந்த கஷ்டமும்  வேணாமுன்னு
மண்ணைவிட்டு போவதென்ன
வாழவழித் தேடி
வாழாமல் போனதென்ன
வேண்டாமடி செல்லக்கிளி
சொல்லுறத நீ கேளு
விட்டுவிடு உன் முடிவ
நீயே உன்னை கொல்லுவத
சாகவழி உள்ளபோதும் 
வாழவழி நூறு உண்டு
சோதனைகள் இல்லாம
பூமியில்ல யாருமில்ல
விட்டுவிடு சோகத்தை
துணிந்துவிடு எதுவும் எதிர்கொள்ள
போராடி வென்றுவிடு
வரலாறு நீ எழுது
வாழ்ந்து பாப்போம் வாடி பெண்ணே 

வாழ்க்கை என்பது போராட்டம் தான், ஆனால் ஒரு திருநங்கைக்கு சராசரி ஆண், பெண்ணை விட வாழ்க்கை பன்மடங்கு போராட்டமாக உள்ளது. அவமான சொற்கள், வீட்டிலும் வெளியிலும்  புறக்கணிப்பு, ஒடுக்குமுறை, ஏளனம், கேலி, கிண்டல், சமஉரிமை இல்லாமை,காதல் தோல்வி என்று பல ஏவுகணைகள் திருநங்கைகளை
மனச்சிதைவு, மனஅழுத்தம், கவலை என்று ஏற்படுத்தி கடைசியில் பல திருநங்கைகள் இதில் இருந்து தப்பிக்க தற்கொலையை நாடி செல்கிறார்கள். திருநங்கைகளின் தற்கொலையை தடுக்க அவர்களை அன்புடன் சமமாக அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் மனித சமுதாயம்.  நீங்கள் ஒருமுறை திருநங்கையை கூறிய ஒரு அவமான சொல் அல்லது புறக்கணிப்பு கூட ஒரு திருநங்கையின் தற்கொலைக்கு காரணமாக இருக்காலம்.. சிந்திப்பீர் தோழர் தோழிகளே!
அன்புடன் ஆயிஷாபாரூக்

July 21, 2012

மழையும் உன் குடையும் வேண்டும்....


மழையில் நனைந்தபோது
குடைக்கொண்டு காத்தாய்
உன் நினைவில் நனைக்கிறப்போது 
அரவணைத்துக் காக்கிறாய்
என்றும் வேண்டும் மாரிமழை
உலகம் செழித்து வாழ!
என்னாயுள் முழுதும் வேண்டும்நின் 
  அன்பின்மழை  என்னுயிர் வாழ!   

♥ஆயிஷாபாரூக்♥ 

July 20, 2012

மோகம்...



யன்மோ கச்சாரலில்
நனைந்தயுன் கண்களின்
அனல் தனிய முத்தமிட்ட
செவ்விதல்கள் வெப்பங்கண்டு
யம்கண் தனைனோக்கி
சுடர்விட யுன்கண்ணும்
பனிந்த(தே) கதனலை தணிக்க...


 மோகம் கொள்ளாமல் இங்கு யாருமில்லை... ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மோகம்.. காதல், பெண், பணம், புகழ், பொருள், மது, இடம், பதவி என்று மனிதனின் மோகம் நீள்கிறது. எந்த மோகமும் அளவோடு இருந்தால் மனிதனுக்கு நலம் இல்லையேல் அதுவே அவனுக்கு அழிவை ஏற்படுத்தும்... 
 மோகம் கொள்க அளவோடு நிற்க..  

 ♥ஆயிஷாபாரூக்♥

July 16, 2012

தேவதை நீ எனக்கு...

நவரத்தினங்கள் கொண்டு மாலையாக சூட்டினாலும் அந்த மழலை குழந்தை செல்வங்களுக்கு எதுவும் ஈடாகாது..



தவமாய் தவமிருந்து
நான் பெத்த மாணிக்கமே
தனியாய் தவிக்கவிட்டு
தாய்மனம் நோக போனத்தென்ன

கொஞ்சம்மொழி கோமேதகமே
பொறுத்திருந்து போனாலென்ன
போகயிலே சொல்லாம போறவழி
திரும்பாம தீர்க்கமாய் போனத்தென்ன

பாசமுள்ள மணிமுத்தே
பாராமுகம் ஆனதென்ன
பாசக்கிளி செல்லமகளே
மனபாரமாக்கி போனத்தென்ன

சின்னஞ் சிறுவைரமே
சிட்டான முல்லைமொட்டே 
சித்திரமாய் நித்திரைக்கொண்டு
சிறுவயசில் சீக்கிரமாய் போனத்தென்ன

மாசுயில்லா மனசோடு
மயக்கும்மழகு வைடூரியமே
மாறாத வலியத்தந்து
மாயமாகி காத்தோட போனத்தென்ன

கண்ணான பவளக்கொடியே
கருகமணிக் கற்கண்டே கண்
பூத்துக்நின்னவள கதிக்கலங்க
வைச்சுப்புட்டு கண்ணயர்ந்து போனத்தென்ன

தெவிட்டாத தெள்ளமுதே
தேன்மதுரக் கருவண்டே
இறைவனடிச் சேரப்புஷ்ப
ராகதேவதையாய் போனத்தென்ன
நீலநிறங் கருவிழியே
நீதானேயென் குலவிளக்கு
நீயில்லாம நம்மவீடு
நிசப்தமாய் போனத்தென்ன

பாலுக்குடி சூடுப்பட்டாலும்
பதறிவிடும் மரகதமே பாவிமக
பாவியானேன் படிக்கயனுப்பி பாளும்தீயில
கருகவிட்டு உன்னையிழந்து போனத்தென்ன

என்சாமி கொலச்சாமி எந்தூரு
சாமிகளும் உன்னுசுர காக்கலயே
காசுபணம் முக்கியமுன்னு கருகவெச்சு
கொன்னானே பாதுகாப்பு இல்லாத
பள்ளியில சேர்க்காதே பாவிமக
பட்டப்பாடு பாவிநீயும் பட்டுடாதே!

கும்பகோணம் தனியார் பள்ளியில் தீயில் 94 மழலை செல்வங்கள் பலியான நாள் ஜூலை 16 ,2004 .ஆண்டுகள் கரைந்தோடினாலும் ஆற்றன்னா துயரத்தோடு மனதில் ஆறாத வலியோடு அழியாத நினைவோடு வாழும் குழந்தைகளின் பெற்றோருக்கு கண்ணீருடன் இதை சமர்பிக்கிறேன்... பாதுகாப்பான பள்ளியில் உங்களின் குழந்தைகளை சேருங்கள், பள்ளி நிர்வாகிகளே பணத்தை விட உயிரே மதிப்பானது என்பதை உணருங்கள். 

அன்புடன் ஆயிஷாபாரூக்

July 13, 2012

பா எழுதி வந்தேன்

வாசமில்லா  மலராய் விரிந்தே
வண்ணமில்லா வானவில்லாய்  
மௌனகீதமாய் இசையும்மீட்டு  
சுவரில்லா சித்திரமாய்
இறைவியின் மறதியில் பாதி
வரைந்நின்ற ஓவிய மங்கையான
திருநங்கையானவள் நானே!
உணர்வின்பால் வலியோடும்
உறவின்காள் கண்ணீர்விழியோடும்  
பார் உலகில் வாழவழித்தேடி
மயிலிறகில் மையிட்டு பா
எழுதியுன் முன்வந்தேன்
எற்றுகொள் நானும் மனித
மேயன ஒலித்து கூறிடவே

ஆயிஷாபாரூக்  

July 12, 2012

ஜாதிகள் இருக்குதடி பாப்பா

            இந்திய சாதி அமைப்பு, பல சாதிகள் கொண்ட மக்களை உள்ளடிக்கியது. சாதிகள் பெரும்பாலும் மோசமான விளைவுகளை மட்டுமே மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. பாகுப்பாடு, ஒடுக்குமுறை, வேற்றுமை காண்பது என்று பல விளைவுகளை பெயரிட்டாலும் மனிதனுக்குள் கலந்துள்ள ஜாதிப்பித்து அவன் தலைகேறி மிருகமாக நடமாட வைக்கிறது. மனிதன் குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தபின்பு தான் ஜாதியின் அடையலாம் அவனுக்கு காணப்படும். தற்போது அவன் பிறக்கும் முன்பே என்ன ஜாதி வேண்டும் என்று தீர்மானிக்க படுக்கிறது ? வியப்பாக உள்ளதா எங்கே எப்படி என்று!
     தற்போது திருமணமான தம்பதிகள் சிலருக்கு கருவுறாமை என்பது பிரச்சனையாக உள்ளது. இயற்கையிலே கருவுறாமை இல்லாத தம்பதிகளுக்கு தீர்வாக விந்து நன்கொடை மூலம் குழந்தை கிடைக்கும் பேறு பெரும் வாய்பாக அமைந்துள்ளது. இயற்கையிலே கருவுறாமை இல்லா பல தம்பதியினர் இதற்காக மருத்துவர்களை அணுகி தங்களுக்கு குழந்தை பேறு பெற சிகிச்சை மேற்கொள்கின்றனர். இங்கே தொடர்கிறது மனிதனின்  ஜாதிவெறியின் அவலம்.
               சமிபத்தில் ஹிந்தியில் வெளியான " விக்கி டோனோர்" என்கிற திரைப்படம் கூட விந்து நன்கொடையாளரை பற்றிய கதையை அடிப்படையாக கொண்டது. அதன் கதாநாயகன் மகப்பேறு வாய்ப்பு இல்லா பல தம்பதிகளுக்கு விந்து தானம் செய்து கருவுறாமை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முயலும் கதையை அடிப்படையாக கொண்டது. நானும் அந்த திரைப்படம் கண்டேன், கருவுறாமையாள் அவதியுறும் தம்பதிகளுக்கு நவீன காலத்தில் உள்ள மருத்துவத்தின் வாய்ப்புகளும் தேவையும் வெளிக்காட்டிய படம் என்றே கூறலாம். விந்து தானத்திற்கும் ஜாதிவெறி அவலத்திற்கும் எங்கே உள்ளது முடிச்சு என்று நீங்கள் கருத்தலாம். அதற்கு உங்களின் கண்முன்னே ஒரு பார்வைக்காக நான் படித்ததை உங்களிடம் பகிரும் உண்மை சம்பவம் இதோ.. இந்த கட்டுரை நான் எழுத காரணம் ஜாதி எவ்வாறு இந்திய மக்களின் மனவேருகளில் எவ்வாறு  உள்வாங்கியுள்ளது என்பதை தோலுரித்து காட்டத்தான்.
            பாட்னா, அதிக மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்தின் தலைநகரம். அங்கே டாக்டர் ஹிமான்சூ ராய் என்கிற மருத்துவர் விந்து வங்கியுடன் பிரபலாமான மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். விந்து நன்கொடை, செயற்கை மகப்பேறு  என்பது நகர்புற மக்களிடம் அதை பற்றிய அறிவு இருந்தாலும் கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வு குறைவு என்றே சொல்லாம். தற்பொழுது கிராம புறங்களில் இருந்தும் பெரும்வாரியான குழந்தை பேறு வாய்ப்பு இல்லா தம்பதிகள் தங்கள் மகப்பேறு மருத்துவனைக்கு வந்து செயற்கை கருத்தரிப்பு முறை குறித்து ஆலோசனை சிகிச்சை பெறுவதற்கு     "விக்கி டோனோர்" என்கிற படம் கிராமபுற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு காரணமாக அமைந்து உள்ளது என்கிறார் மருத்துவர். 
            உலகளவில் பெரும்பாலும் விந்து நன்கொடை பயன்படுத்தும் தம்பதிகள் விந்து கொடுப்பவரின் ஆரோக்கியம் பற்றியே அதிகளவில் மருத்துவரிடம் விசாரிப்பர். ஆனால் பீகாரில் விந்து நன்கொடை பயன்படுத்தும் தம்பதிகள் விந்து கொடுப்பவரின் ஜாதியை பற்றி கேட்பதாக மருத்துவர் கூறுகிறார். சிலர் விந்து கொடுப்பவரின் பண்பாடு, சுகாதாரம், உடல் அம்சங்கள், மதம் பற்றி கேட்பதைவிட சாதி பற்றியே அதிகமாக கேட்பதாகவும் அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினாமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மற்றொரு விந்து வங்கி நடத்தும் டாக்டர் சவுரப் குமார் அவர்களும் இதையே தெளிவுபடுத்தினார். இந்திய மக்களிடம் ஜாதிவெறி எந்த அளவிற்கு ஆழமாக வேருன்றி இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு ஆகும்.
            சில விந்து வங்கிகளில் 'பிராமணர்', பூமிஹார்' 'யாதவ்','ராஜ்புத்' மற்றும் பல சாதி ஸ்டிக்கர்கள் பெயரிடப்பட்ட குழாய்கள் அடையாளப்படுத்தி வகை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மருத்துவர் கூறினார். பீகார் மக்கள் சாதி, சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் போன்றவற்றில் மிகவும் தீவிரமான வேட்கை உடையதால் பிரச்சனையின் உணர்வை மனதில் கொண்டு இப்படி செய்யவதாக மருத்துவர்கள் கூறினார்கள். பல கல்லூரி மாணவர்கள் விந்து கொடை செய்வதாக தெரிவித்த மருத்துவர், கொடையாளர்கள் ஒவ்வொரு தடவையும் விந்து தானம் செய்யும் போது விந்தின் வீரியத்திற்கு ஏற்ப பணம் கொடுப்பதாக தெரிவித்தார். 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விந்து கொடை செய்யும் நபர்களுக்கு பணம் கொடுக்கப்படுக்கிறது என்றார். (நன்றி: இந்திய இங்க்)
             இத்தகைய தூய்மையான குழந்தை பேறு வேண்டி அர்பணிப்புடன் உள்ள இடத்தில கூட ஜாதிவெறி என்கிற சாக்கடையில் புழுக்களை போல  உலவும மக்களால் புனிதத்தன்மை அசுத்தபட்டு விட்டது. அத்தகைய ஜாதி வெறியர்கள் தங்கள் ஜாதி இரத்தம் மட்டுமே தூய்மையானது என்கிற அறிவின்மையில் இருக்கலாம். பெரியார், அம்பேத்கார் போன்ற பல தலைவர்கள், ஜாதி எதிர்ப்பு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பலர் ஜாதி ஆகல பேசியும் செயல்பட்டும் இந்திய மக்களிடையே ஜாதியின் வீரியம் குறையவே இல்லை, அவனின் ரத்தத்தில் அது கலந்துள்ளது. குழந்தைகளுக்கு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி குழந்தைகளிடம் பொய் சொல்கிறோம்.. ஜாதிகள் இருக்கிறது...இந்திய மக்களின் ரத்தத்தில் அது கலந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.. ஆதனால் தான் ஜாதி என்கிற சொல்லில் கூட புகைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிற பாரதியின் வரிகள் காகிதத்தில் மட்டுமே, நடைமுறையில் நாம் பயணிப்பதோ வேறு! ஜாதிகள் அகல வேண்டும், அனைவரும் சமம் என்கிற நிலை வேண்டும்.

ஜாதி வெறி மனிதர்களுக்கு நான் எழுதிய கவிதை உங்கள் கண்முன்னே....

நீ எந்த ஜாதி என்று கேட்டா
பூமி உன்னை சுமக்கின்றது!

நீ எந்த மதம் என்று பார்த்தா
நிலம் நீர் கொடுக்கிறது!

நீ எந்த இனம் என்று அறிந்தா
காற்று சுவாசிக்க அனுமதிக்கிறது!

கல்விக்கும் வேலைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
அறிவும் செல்வமும் ஜாதியை பார்ப்பதில்லை!

பிறப்புக்கும் இறப்புக்கும் ஜாதியை பார்க்கிறாய்
ஜனனமோ மரணமோ ஜாதியை பார்ப்பதில்லை!

விளையாட்டிலும் வீரத்திலும் ஜாதியை பார்க்கிறாய்
சாதனையும் தைரியமும் ஜாதியை பார்பதில்லை!

நிறத்திற்கும் மொழிக்கும் ஜாதியை பார்க்கிறாய்
நோயோ புலமையோ ஜாதியை பார்ப்பதில்லை!

கோவிலுக்கும் கருவறைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இறைவனோ தீபமோ ஜாதியை பார்பதில்லை!

பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இசையோ கலையோ ஜாதியை பார்ப்பதில்லை

மூடன் ஏற்படுத்திய பிளவு மனிதனுள்
கீழ் ஜாதியாம் மேல் ஜாதியாம்
மேல் ஜாதி என்றால் உனக்கு சொர்கமோ!
கீழ் ஜாதி என்றால் உனக்கு நரகமோ!
சொர்கமோ நரகமோ அவையிரண்டும்
ஜாதியோ மதமோ பார்ப்பதில்லை
உன் புண்ணியக் கணக்கையோ
நீ செய்த பாவக் கணக்கையோ
இறைவன் பார்க்கிறான்! மதிப்பிடுகிறான்.

மரமோ செடியோ கொடியோ
மிருகமோ பறவையோ நுன்னுயிரோ
ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை
அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும்
மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து
ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா!
விழித்திரு மானிடா! விழித்திரு!!!

... அன்புடன் ஆயிஷா பாரூக்...

July 11, 2012

விடை அறியா பயணம்...


ஆண்டுகள் புரண்டோட நம் அனுபவம் உலகில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் தினம் நாம் பயணிக்கும் தளங்களில் விருப்பு வெறுப்பு, உண்மை பொய்மை, நல்லவை கெட்டவை என அனைத்தும் கலந்த கலவையான வாழ்கையில் பயணிக்கிறோம். நாளை நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பது யாவருக்கும் அறியாது, நாளை என்பதில் ஆச்சரியமும் வியப்பும் மட்டுமே  நிறைந்துள்ளது. இருந்தும் நல்லதே நடக்கும் என்கிற நினைப்பில் தான் வாழ்க்கை கடலில் பயணிக்கிறோம்.

புலரும் காலைப்பொழுதில் சூரியனும் அந்தி சாயும் வேளையில் சந்திரனும் தத்தம் கடமைகளை திறன்பட செய்துவருகிறது. நம்முடைய நாட்களும் கடமைகளும்,செயல்களும் அதை கொண்டே கணிக்கிடப்படுகின்றன. இறைவன் படைத்த உலகில் எத்தனை வேற்றுபாடுகளை மனிதன் உருவாக்கியுள்ளான். வடதுருவம் தென்துருவம் போல மனிதனின் வாழ்க்கை வேறு வேறு எல்லையில் அமைக்கப்பட்டு உள்ளது. தினம் ஒருவேளை சோற்றுக்கு திண்டாடி வறுமையில் வாழும் மக்கள் ஒரு புறம் அடம்பர சொகுசு வாழ்வில் திக்குமுக்காடி தவழும் மக்கள் ஒரு புறம். யார் உருவாக்கியது இத்தனை முரண்கள்?

கண்முன்னே காட்சியில் இருக்கும் இத்தகைய வேறுபாடுகள் கலையப்பட வேண்டியவை. மனிதன் மனிதனையே வேறுபடுத்தும் மதங்கள், இனம், மொழிகள், ஜாதிகள் போன்றவை நம்மை குறுகிய வட்டத்திற்குள் சுழல விட்டுள்ளது. இத்தகைய காரணிகள் பெயரால் நாம் நம்மை அடுத்த மனிதரிடம் இருந்து வேறுபடுத்தி நிற்கிறோம். அதனால் நாம் சாதித்து என்ன? எதை அடைந்தோம்!  பிரிவினைவாத செயலுக்கா  இல்லை சண்டையிட்டு சாகவா.. வாழ்கையை அன்பும் அரவணைப்பும் கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டிய நாம் நம் மனதில் தேவையற்ற போட்டி,பொறமை,வஞ்சகம் என்று நிம்மதி இழந்து தவிக்கிறோம். மகிழ்ச்சியின் ஆரம்பமும் துன்பத்தின் பொறியும் நம் மனதே என்பதை நினைவில் கொள்ளவும்.

மனிதன் மனிதனை ஆள்கிறான், அடுக்குமுறை செய்கிறான். மனிதனே நீதிபதி, அவனே தண்டனைகள், விதிகள் அமைக்கிறான். பணம், செல்வாக்கு, அதிகாரம் உள்ளவர்க்கு இந்த விதிமுறைகள் மாறும் இல்லாதவர்க்கு விதிகள் தன் கடமையை செய்யும். உழைக்கும் வர்க்கம் வியர்வை துளிகளை கூலியாக பெற்று முதலாளி வர்க்கம் பணத்தை தின்று ஏப்பம் விட்டு உழைக்கும் தொழிலாளிகள் மேலேறி வாழ்கையை ஆடம்பரமாக பயணிக்கிறது. இருப்பவன் இன்னும் பொருளை சேர்கிறான் இல்லாதவன் இருக்கும் பொருளை விற்கிறான்! இது தான் சமதர்ம நிலையா? இல்லை வாழ்வியலின் அர்த்தமா!

ஒடுக்கபட்டோரின் குரல்கள் ஒலிப்பதை யாரும் உணரவில்லை, அடக்கியாளும் மக்களின்  காதுகளில் இன்னிசை கீதம் பாய்வதால். உலகம் தன் முடிவு வரை இப்படியே தான் பயணிக்குமா? விடையை தெரியாமல் உங்களை போல நானும் தேடுகிறேன், மாற்றம் வரும்.. மாறாத சில காட்சிகள் மாறும் என்கிற நம்பிக்கையில்!

July 9, 2012

திருநங்கை - தொடர் நான்கு


 திருநங்கைகளும் ஊடகங்களும்

அன்புடையீர் வணக்கம்,

      நல்ல ஒரு துவக்கம் நல்ல பயன்களை தரும் என்கிற கூற்றுக்கு ஏற்ப நம்முடைய "திருநங்கை - விழிப்புணர்வு" நல்ல துவக்கத்தில் தொடங்கி  வெற்றியுடன் பயணிக்கிறது. கடந்த மூன்று தொடர்களில் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் நன்றி என்கிற ஒற்றை சொல் சுருக்கி கூறி முடித்துவிடமுடியாது. திருநங்கைகளை சமமாக மதிக்கும் உங்களை போன்ற மனிதநேயமுள்ள உள்ளங்கள் உலகத்தில் இருப்பதால் தான் இந்த பூமியில் ஈரம் வற்றமால் அனைவருக்கும் மழையாக பொழிந்து உலகை நிலை பெறச்செய்கிறது.

மனிதனும் ஊடகமும்  

           மனிதன் பிறந்தது முதல் அவனுடன் பயணித்த பல நிலைகளில் ஒன்றுத்தான் தொடர்புகள். ஒருவரை ஒருவர் உலகில் தொடர்புக்கொள்ள பல வழிகள் காலந்தொட்டே இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் புறாக்கள் மூலம் தொடர்புக்கொள்ள ஆரம்பித்து நவீன யுகமான தற்பொழுது இணையத்தளம் வரை மனித தொடர்புகள் தொடர்ந்து முன்னேறி போய்க் கொண்டுறிக்கிறது. இத்தகைய தொடர்புகளில் ஊடகத்தின் பங்கும் பாதிப்பும் அதன் தாக்கமும் மக்களிடையே அளவிடமுடியாது. ஊடகம் பல நல்ல நிகழ்வுகளையும் தீய நிகழ்வுகளையும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடையே ஒரு தொடர்பு கருவியாக ஊடுருவும் ஊடகங்கள் காலப்போக்கில் மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவையை மாற்றக்கூடிய சக்தியாகவும் விளங்கியது. திருநங்கைகள் மீது ஊடகங்களின் தாக்கம் பெரும்பாலும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே  அமைந்துள்ளது.       

திருநங்கை புரிதலில் ஊடகங்களின் பங்களிப்பு   

     மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் மாற்றுபாலின புரிதலை மக்களிடையே எடுத்துச்சென்று பெரிய மாறுதல்களை உருவாக்கியது. மேற்கத்திய நாடுகளின் பாலியல் புரிதல் வளம்பெறத் தொடங்கியதும் மாற்றுப் பாலினருக்கான அங்கீகாரமும் துளிர்விடத் தொடங்கியது.பெரும்பாலும் பத்திரிக்கை ஊடகங்களில் திருநங்கைகளை பற்றி மக்களிடையே புரிதலுக்கான முயற்சியை மற்ற ஊடகங்களை காட்டிலும் அதிகபடியான பங்கை பத்திரிக்கை மேற்கொண்டு வருகிறது. திருநங்கைகள் பற்றிய செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, அதாவது திருநங்கைகளின் கூட்டமைப்பின் செயல்பாடுகள், பேரணிகள், திருவிழாக்கள், அழகிப்போட்டிகள், திருநங்கைகளின் பிரச்சனைகள் போன்றவைகளை தாங்கிய நிகழ்வுகள் அவ்வப்போது பத்திரிகையில் காணமுடிக்கிறது. வானொலியில் திருநங்கைகள் பற்றிய நிகழ்சிகளின் பங்கு மிகவும் குறைந்த அளவிலே உள்ளது. 
            

தமிழ் திரைப்படங்களில் திருநங்கைகளின் அவல நிலை

     தமிழில் வெளிவந்த பல திரைப்படங்கள் திருநங்கைகளை கேலிக்கான காட்சியாக மட்டுமே பயன்படுத்தி எங்களின் உணர்வுகளை காயப்படுத்தி அன்றுத்தொட்டு தன் கடமையாக சிறப்பாக செய்து வருகிறது. மீசை மழித்து முரட்டு ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்கவைத்து திருநங்கைகளை தோற்றத்தில் கூட அவமானம் படுத்திய இயக்குனர்கள் பலர் உண்டு. நகைச்சுவை என்கிற போர்வையில் அவமான பேச்சுக்கள், இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பாலியல் ரீதியான காட்சி அமைப்புகள் என்று திருநங்கைகளை திரைப்படங்கள் அலங்கோலம் படுத்தின. 
        பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் திருநங்கைகள் போல வேடமிட்ட ஆண்களை காணும் போது முகம் சுளிக்க வைக்கும்.போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், ஈரமான ரோஜாவே, லீலை, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள் திருநங்கைகளை கேவலமான முறையில் சித்தரித்துள்ளது. அந்த படங்களில் ஒரு நகைச்சுவை காட்சியிலோ இல்லை பாடல்களிலோ திருநங்கைகளை அவமதிக்கும் செயல்கள் அரங்கேறியுள்ளது. நகைச்சுவை என்கிற பெயரில் எங்களை நீங்கள் இழிவபடுதுவதை நிறுத்துங்கள். வேண்டாம் இனி திருநங்கைகளை அவமானபடுத்தும் வகையில் கேவலமான காட்சிகள் தமிழ் திரைப்படங்களில். தமிழ் திரையுலகமே திருநங்கைகளை இனி கண்ணியமான முறையில் திரைப்படங்களில் காட்டுங்கள். எங்களின் உணர்வுகளோடு உங்கள் வேடிக்கை வேண்டாம். இத்தகைய காட்சிகளை படத்தில் காணும் போது எங்கள் மனம் நோகுகிறது, மிகவும் தர்மசங்கடமான வருத்தமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. உங்களுக்கு திருநங்கை போன்ற காட்சி அமைப்புகள் கொண்ட கதாபாத்திரம் வேண்டும் என்றால் திருநங்கைகளையே அந்த கதாபத்திரத்தில் நடிக்க வையுங்கள், எதற்கு அகோரி தோற்றம் உள்ள ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்க வைக்கிறீர்கள்? ஒரு தனிமனிதனையோ, சமூகத்தையோ, இனத்தையோ இழிவாக பேசுவதை சென்சார் அனுமதிக்க கூடாது என்பது விதி. திரைப்படங்களில் மிருகத்தை சித்திரவதை செய்வது கூட அனுமதிக்காத சென்சார் எப்படி ஒரு மனித இனத்தை திருநங்கைகளை  இழிவாக பேச, மட்டமாக காட்சி அமைக்க அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.

தமிழ் திரைப்படங்களில் மேன்மையான போக்கு

     சில தமிழ் இயக்குனர்கள் திருநங்கைகளை கண்ணியமான முறையில் அருமையான கதாபாத்திரங்கள் கொடுத்து பெருமைபடுத்தி சிறப்பித்துள்ளனர்.அந்த வரிசையில் சில படங்கள்....
  • மதக்கலவரத்தில் உள்ளவர்களை தடுத்துநிறுத்தி உயிரின் மதிப்பையும் உறவின் பெருமையையும் ஒரு திருநங்கை மூலம் கருத்தை பதிவு செய்த  பாம்பே படத்தில்  திரு.மணிரத்தினம் அவர்கள்
  • திருநங்கையின் வலிமையை பெருமையை உணர்த்திய  "காஞ்சனா" படத்தில் ராகவ லாரன்ஸ் அவர்கள்
  • திருநங்கையின் அன்பையும் பரிவையும் சிறப்பையும் வாழ்வியல் முறையை அழகாக கூறிய "நர்த்தகி" படத்தில் புன்னகை பூ கீதா அவர்கள்
  • திருநங்கையின் உணர்வுகள், பாலியல் தடுமாற்ற சூழ்நிலை உணர்த்திய "நவரசா" படத்தில் திரு.சந்தோஷ் சிவன் அவர்கள்,  
  • தங்களை நம்பி வரும் காதல் ஜோடிகளை அரவணைத்து உதவி செய்து உயிரை விடும் திருநங்கையின் தியாகத்தை தெளிவுபடுத்திய "தெனாவட்டு" படத்தில் திரு.கதிர் அவர்கள்
  • வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட திருநங்கை சமுதாயத்தில் முன்னேறி சாதித்த விதத்தை அழகுபடக் கூறிய "கருவறை பூக்கள்" படத்தில் திரு.சேவியர் IPS அவர்கள்,
இவர்கள் அனைவருக்கும் திருநங்கைகள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறேன். திருநங்கைகளை சமமாக உணர்வுகளை உணர்ந்து மதித்து, நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து திருநங்கைகளை மேன்மைபடுத்திய அணைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் திருநங்கைகள் உலகம் நன்றியோடு நினைவில்கொள்ளும். 

"நர்த்தகி" படத்தில் கல்கி சுப்ரமணியம், "தெனாவட்டு" படத்தில் ரேவதி, "கருவறை பூக்கள்" படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா ஆகிய திருநங்கை சகோதரிகள் திரைப்படங்களில் தங்களுக்கு கொடுத்த கதாபத்திரத்தை அருமையாக திறம்பட செய்தனர். 

பல்வேறு சமூக காரணங்கள் மற்றும் மிருகங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கும் திரை நட்சித்திரங்கள், திருநங்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு குரல் கொடுத்தால் அந்த கருத்து மக்களுக்கு நல்ல விதமான முறையில்  சென்று அடையும். 

இணையத்தில் திருநங்கைகள்

        இணையத்தில் திருநங்கைகள் பற்றி பரவலான கட்டுரைகள், குறும்படங்கள், படக்காட்சிகள் வலைபதிவிலும், சமூக தளங்களான FACEBOOK, TWITTER, YOUTUBE போன்ற தளங்களில் பார்க்கலாம். திருநங்கைகள் பற்றி பல இணையதளங்கள்களில் குறிப்பாக www.sahodari.org,www.orinam.net திருநங்கை பற்றிய செய்திகளை காணலாம். பல எழுத்தாளர்கள்  திருநங்கைகள் பற்றி வலைபதிவிலும் தங்களின் கருத்தையும் ஆதரவையும் இணையம் மூலமும் வெளிபடுத்தியுள்ளனர்.

ஊடகத்துறை தோழர்களே உங்களால் முடியாதது எதுவுமில்லை!

            நாட்டின் தலைவிதியை வரலாற்றை மாற்றும் சக்திகள் நீங்கள். மக்களிடையே அணைத்து தகவல்களையும் ஆராய்ந்து அலசி நடுநிலையாக உண்மையாக செய்திகளை கொண்டுச்சேர்க்கும் பணி உங்களுடையது. ஊடகத்தின் உதவிகள் இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் இன்றைய  காலச்சுழ்நிலையில் அடைவது கடினம். ஒடுக்கப்பட்ட எங்களின் சமுதாயத்திற்கு அதரவாக குரல் கொடுங்கள், மக்களிடம் திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு புரிதலை ஏற்படுத்த முற்படுங்கள். திருநங்கைகள் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்களின் மனதை மாற்ற, திருநங்கைகள் பற்றி மூட நம்பிக்கை அகல, அறிவு கண்ணை திறந்திட உங்களின் செயல்களால் ஊடகம் மூலமாக மாற்றம் ஏற்படுத்தமுடியும்.

ஊடகத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்புக்கொடுங்கள்

             மேற்கத்திய நாடுகளில் திருநங்கைகளின் நிகழ்ச்சி, பங்களிப்பு அதிகஅளவில் உள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழிகளில் வரும் ஊடகங்களில் கூட கணிசமான திருநங்கைகளின் பங்களிப்பு உள்ளது. சகோதிரி கல்கி சுப்ரமணியம் அவர்கள்  "சகோதிரி" என்கிற பத்திரிக்கை நடத்தி சிறப்பாக செயல்புரிந்து பத்திரிகை ஆசிரியாராக தன் திறமையை நிரூபிக்க செய்தார். ரோஸ் வெங்கடேசன் தொலைகாட்சி மற்றும் வானொலியில் தன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். விஜய் தொலைகாட்சியில் வெளிவந்த "இப்படிக்கு ரோஸ்" கலைஞர் தொலைகாட்சியில் "இது ரோஸ் நேரம்" மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது."ரோசுடன் பேசுங்கள்" என்ற நிகழ்ச்சி மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவும் திகழ்ந்தார். சமீபத்தில் "CHENNAI IN AND OUT MAGAZINE" ஆசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் எனக்கு அவருடைய பத்திரிகையில் எழுத வாய்ப்புக்கொடுத்தார். "விடியலை தேடி திருநங்கைகள்" என்கிற தலைப்பில் நான் எழுதினேன். நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. திறமையான திருநங்கைகளுக்கு வாய்ப்பும் கொடுங்கள் எங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு குரலும் கொடுங்கள் ஊடக தோழர்களே! 

உங்களின் கருத்தும் விமர்சனமும் வரவேற்கிறேன்....  
அன்புடன்
ஆயிஷா பாரூக்

July 7, 2012

அன்பின் முகவரி


தன்னிகரற்ற தொண்டின் மூலம் உலகிலுள்ள மனிதநேயம் தலைத்தோங்கிட தேவைபடுவோர்க்கு உதவிகள் பலச்செய்து, மக்களின் மனங்களில் நீங்கா தியாக சுடராய், எளியோரை தேடி தொண்டூழியம் செய்த அன்னை தெரேசா அவர்களை புகழ்பாட வார்த்தைகள் எதுவுமில்லை. அன்னையின் கூற்றுப்படி நம்மால் முடிந்த உதவி ஒருவருக்காவது செய்வோம்...

சுடரொளியாய் பூமியில் நீக்கமற
தன்னலமில்லா சேவையின் மணிமகுடமாய்
எளிமையின் எளிமையாய் பழகுவதில்
இனிமையாய் பேசுவதில் கனிமையாய்
அளவற்ற தொன்டூழியத்தில் முன்மாதிரி
யானஅருட்  சகோதரி  இரக்கத்தின் உறைவிட
மேலானஅன் பிற்குமரு பொருளேயுன்
முகத்தில் சுருக்கங்கள் வந்தாலும்
தள்ளாது பதறாது மனம் குன்றாது  
முகம் சுனங்கா  தாமரையின்
இதழ் விரிபுன்னகை  யோடுநின்  
அரவணைப்பில் உறங்கிய ஆயிரமாயிரம்
ஆதரவில்லா உயிர்களின் புனிதன்னையாய்  
நோயிபிடி  உடலுருகி மனமிறுகி
மரணத்தின் மடியில்தலைச் சாயுல்லூரை
நல்லாள்நின்  கைக்கொண்டு புனிதமாக்கியவர்  
கரையேறத்  தொளுத சாந்தக் குனவதியே
வறியாரை நீதேடி கண்டோடி உதவினன்காள்
என்சொல்லி தமிழ்தேடி புகழ்வேனம்மா
உன்யுகம்வாழ் பிறந்ததேயென் புண்ணியமே!

அமைதி புன்னகையில் தொடங்குகிறது; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புன்னகைப்போம், அன்பு அதிலிருந்து தொடங்குகிறது... அன்னை தெரேசா

July 4, 2012

காதலாகி கனிந்து ....


காதலாகி கனிந்து ....

கண்களில் காதலை
மறைத்துவிட துணிந்தேன்
தைரியமில்லை இதயத்தில்
உனக்காய் துடிக்கும் மனதை
காட்டிவிட்டது கரும்விழிகள்
முகத்தில் திரையிட்டும்
கைதியானேன் உன் மனச்சிறையில்
வேண்டாமடா விடுதலை
என்னாயுள் முடியும்வரை....