July 16, 2012

தேவதை நீ எனக்கு...

நவரத்தினங்கள் கொண்டு மாலையாக சூட்டினாலும் அந்த மழலை குழந்தை செல்வங்களுக்கு எதுவும் ஈடாகாது..



தவமாய் தவமிருந்து
நான் பெத்த மாணிக்கமே
தனியாய் தவிக்கவிட்டு
தாய்மனம் நோக போனத்தென்ன

கொஞ்சம்மொழி கோமேதகமே
பொறுத்திருந்து போனாலென்ன
போகயிலே சொல்லாம போறவழி
திரும்பாம தீர்க்கமாய் போனத்தென்ன

பாசமுள்ள மணிமுத்தே
பாராமுகம் ஆனதென்ன
பாசக்கிளி செல்லமகளே
மனபாரமாக்கி போனத்தென்ன

சின்னஞ் சிறுவைரமே
சிட்டான முல்லைமொட்டே 
சித்திரமாய் நித்திரைக்கொண்டு
சிறுவயசில் சீக்கிரமாய் போனத்தென்ன

மாசுயில்லா மனசோடு
மயக்கும்மழகு வைடூரியமே
மாறாத வலியத்தந்து
மாயமாகி காத்தோட போனத்தென்ன

கண்ணான பவளக்கொடியே
கருகமணிக் கற்கண்டே கண்
பூத்துக்நின்னவள கதிக்கலங்க
வைச்சுப்புட்டு கண்ணயர்ந்து போனத்தென்ன

தெவிட்டாத தெள்ளமுதே
தேன்மதுரக் கருவண்டே
இறைவனடிச் சேரப்புஷ்ப
ராகதேவதையாய் போனத்தென்ன
நீலநிறங் கருவிழியே
நீதானேயென் குலவிளக்கு
நீயில்லாம நம்மவீடு
நிசப்தமாய் போனத்தென்ன

பாலுக்குடி சூடுப்பட்டாலும்
பதறிவிடும் மரகதமே பாவிமக
பாவியானேன் படிக்கயனுப்பி பாளும்தீயில
கருகவிட்டு உன்னையிழந்து போனத்தென்ன

என்சாமி கொலச்சாமி எந்தூரு
சாமிகளும் உன்னுசுர காக்கலயே
காசுபணம் முக்கியமுன்னு கருகவெச்சு
கொன்னானே பாதுகாப்பு இல்லாத
பள்ளியில சேர்க்காதே பாவிமக
பட்டப்பாடு பாவிநீயும் பட்டுடாதே!

கும்பகோணம் தனியார் பள்ளியில் தீயில் 94 மழலை செல்வங்கள் பலியான நாள் ஜூலை 16 ,2004 .ஆண்டுகள் கரைந்தோடினாலும் ஆற்றன்னா துயரத்தோடு மனதில் ஆறாத வலியோடு அழியாத நினைவோடு வாழும் குழந்தைகளின் பெற்றோருக்கு கண்ணீருடன் இதை சமர்பிக்கிறேன்... பாதுகாப்பான பள்ளியில் உங்களின் குழந்தைகளை சேருங்கள், பள்ளி நிர்வாகிகளே பணத்தை விட உயிரே மதிப்பானது என்பதை உணருங்கள். 

அன்புடன் ஆயிஷாபாரூக்

No comments:

Post a Comment