August 2, 2012

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - சமீப நிகழ்வுகளுடன் ஒரு பார்வை.


கல்பனா சாவ்லா முதன் முதலாக விண்வெளியில் பயணித்த இந்திய பெண்மணி என்கிற சாதனையை நிகழ்த்தினார். நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதி, பாராளுமன்ற சபாநாயகர், மாநில முதல்வர் என்று பெண்கள் நம் நாட்டில் பெரியநிலைகளில் பதவி வகித்தாலும் ஒரு சராசரி இந்திய பெண்ணின் பாதுகாப்பு இன்று வரை அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்களின் பாதுகாப்பு பின்தங்கிய நிலையிலே காணப்படுக்கிறது. பெண்களை அடிமைப்படுத்தி வந்த இந்திய சமூகம் பின்னாளில்  பெண்களுக்கான உரிமைகள், போராட்டங்கள் என்று பெண் விடுதலை வடிவம் பெற்றவுடன் பெண்களின் முன்னேற்றும் தற்காலத்தில் கணிசமான அளவு அதிகரித்து உள்ளது, பெண்கள் முன்னேறி உள்ள அதே நிலையில் அவர்களின் மீது நடக்கும் குற்ற செயல்களும் அதிகரித்தே காணப்படுக்கிறது.   

பெண்ணுரிமைகள் பற்றி மேடை போட்டு பேசினாலும் அது வெறும் வெற்று பேச்சாகவே உள்ளது. நடைமுறையில் பெண்களின் உரிமைகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதெல்லாம் பறிக்கப்படுகிறது. பெண்ணுரிமை பற்றி பேசும் ஆண்கள் கூட வீட்டில் உள்ள பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பது இல்லை என்பதே உண்மை.பெண் சிசுக்கொலை முதல் ஆரம்பித்து சிறுமிகள் பலாத்காரம், இளவயது பெண்கள் கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை, பெண்களிடம் உரிமை மீறல் என்று ஒரு பெண் குழந்தை முதல் கிழவி ஆகும் வரை அணைத்து பருவங்களிலும் ஏதாவது வகையில் பெண்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது என்னுடைய திடமான கருத்து. அது குக்கிராமமாக இருந்தாலும் சரி இல்லையேல் நகபுறமாக இருந்தாலும் சரி பெண்கள் பல இடங்களில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் உள்ள பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பாரம்பரியம் மற்றும் பெண்கள் உரிமைகள் சட்டம் மற்றும் பாதுகாப்பு பற்றி அறிவின்மை காரணமாக பல பெண்களுக்கு தங்களின் அடிப்படை உரிமைகள் பற்றிக்கூட அதிகமாக தெரியவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் கடந்த ஆண்டை விட சற்று இந்த ஆண்டு அதிகமாக உள்ளது அதிகரித்து உள்ளது. ஜூலை மாதத்தில் கடந்த வாரத்தில் மட்டும்  நடந்த சில பெண்களுக்கு எதிரான குற்றசெயல்களை சற்று காண்போம். 

(ஜூலை 13) கவுகாத்தியில் ஒரு பள்ளி மாணவிக்கு நடந்த அவலம் நாட்டையே தலைக்குனிய வைத்தது. இருபது ஆண்கள் சேர்ந்த ஒரு கும்பல், வழிபோக்கர்கள் உட்பட இணைந்து 30 நிமிடங்கள் ஒரு பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். ஒரு உள்ளூர் செய்தியாளர் அதைக் கண்டு  வீடியோ காட்சியில் பதிவு செய்து பின்பு  யுடூயூப் மூலம் அந்த காணோளியை பதிவு செய்தபின்பு அது பரபரப்பாகி அந்த பெண்ணிற்கு எதிரான செயலில் ஈடுபட்ட அயோகியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த காணோளி தடயம் மூலம் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். இது வரை 12 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.. பாதிக்கபட்ட பெண் ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகள் ஆவார். இத்தகைய செயல் மூலம் ஒரு வழிப்போக்கன் கூட எத்தனை துணிவு இருந்தால் ஒரு இளம் பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்தான் என்பது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும்.
 
மேற்கு வங்காள மாநிலத்தில்  உள்ள ஹூக்ளியில்  இயங்கி வரும் ஒரு மறுவாழ்வு மையதில் 32 வயது மதிப்பு உள்ள காதுகேளாத வாய்பேசமுடியாத குரியா என்பவரை  பாலியல் சித்திரவதைக்கி ஆளாக்கி கொன்று புதைத்துள்ளனர். மறுவாழ்வு மைய நிர்வாகி உதய் மற்றும் அவனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் உள்ளனர். பெண்களுக்கு மறுவாழ்வு தரும் ஒரு இல்லத்தில் இத்தகைய நிகழ்வு நடந்திருப்பது மனிதாபிமானம் கொன்று புதைக்கப்பட்டு உள்ளது என்பதை வெளிக்காட்டும் நிகழ்வாக அமைக்கிறது.

விசாரணை என்கிற  பெயரில் வரவழைக்கப்பட்ட  ஒரு  பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்த சகுந்தலா தேவி என்கிற பெண்ணை லக்னோவில் உள்ள மல் காவல் நிலையத்தில் வைத்து  காவல் துணை ஆய்வாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காவலாக இருக்க வேண்டிய ஒருவரே இப்படி பட்ட கேவலமான குற்றத்தை செய்தால் பின்பு நீதி, நேர்மை, நியாயம் எங்கே பெண்களுக்கு கிடைக்கும்.

உத்தர பிரதேசம் ஆஸ்ரா என்கிற கிராமத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அங்கே பெருகி வரும் காதல் திருமணத்தை தடுப்பதற்க்காக அங்கே உள்ள பெண்கள் அனைவரும் அலைபேசி உபயோகபடுத்த தடை செய்துள்ளனர். இது பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையே காட்டுக்கிறது.   

ராஜஸ்தான், உ.பி, கர்நாடகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏழு வயது முதல் பதினாறு வயது உள்ள சிறுமிகள், இளவயது பெண்கள் உட்பட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கற்பழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.பெண் வெறி கொண்ட பித்தனுக்கு சதை மட்டுமே தேவை.. அவள் சிறுமியோ, கிழவியோ, கருப்போ, சிகப்போ, எந்த மதமோ, ஜாதியோ, ஊமையோ, செவிடோ, பார்வையற்றவளோ எதுவும் அந்த காமவெறியனின் கண்ணுக்கு தெரியாது என்பதை ஆணித்தரமாக நிருபிக்கும் நிகழ்வுகள் நான் மேலே குறிப்பிட்ட அனைத்து குற்றச்செயல்களும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2011 ஆண்டு குற்ற பதிவு புள்ளியல் பதிவு படி பெண்கள் கடத்தல் தொடர்பான பதிவு 35565 ஆகவும்,பெண்களுக்கு எதிரான தொல்லை தொடர்பான பதிவு 42968 ஆகவும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பதிவு 8570 ஆகவும்,கணவன் உறவினர்களால் பெண்கள் பாதிப்பு தொடர்பான பதிவு 99135 ஆகவும் என்று பெண்களுக்கு எதிரான நிகழ்வுகள் 2011 ஆண்டில் பதியப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2010: 2,13,585 ஆக இருந்தது தற்போது 2011: 2,28,650 அதிகரிதுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் IPC குற்றங்கள் சதவீதம் உயர்வு 2007: 8.8% ஆக  இருந்தது தற்போது 2011: 9.8% ஆகா அதிகமாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் நகரங்களில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 13 .3 % சதவித குற்ற பதிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு 5.6 % சதவிதமும் ஹைதராபாத் 5.5 % சதவிதமும் பெற்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நகரங்களில் அடுத்து அடுத்து உள்ளன.பெண்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் புள்ளியல் விவரப்படி அதிகப்படியான குற்றங்கள் கொண்ட மாநிலமாக மேற்கு வங்காளம் 29133 வழக்குகள், ஆந்திரா 28246 வழக்குகள் மற்றும் உ.பி 22639 வழக்குகள் கடந்த 2011 ஆண்டில் மட்டும் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் 6940 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றசெயல் பிரிவில் பதிவாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும், பெண்கள் அனைவரும் தற்காத்துக்கொள்ள வழிமுறைகள் பயிற்றுவிக்க படவேண்டும். பெண்களின் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு பெண் உரிமைகள், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் போன்றவை இந்தியா முழுவதும் அதிகளவில் நடத்தப்பட வேண்டும். பெண்கள் அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்க வகைச்செய்ய வேண்டும்.

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்கிற ஒருவித பயஉணர்வோடு தான் அநேக இந்திய பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெண் நகரத்தில் வேலைக்கு செல்பவளாக இருந்தாலும் சரி இல்லையேல் கிராமபுரத்தில் வயல் வேலைக்கு செல்பவளாக இருந்தாலும் சரி, அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்தியாவில் உள்ள கிராமப்புறத்தில் வாழும் ஒரு சாதாரண பெண்ணின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாத வரை, அவருக்கு சரியான சமஉரிமை வழங்காத வரை  நாட்டின் ஜனாதிபதியாக பெண்ணை அமரவைத்து அழகு பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.  

 அன்புடன் ஆயிஷா பாரூக் 

2 comments:

  1. இந்தியாவில் உள்ள கிராமப்புறத்தில் வாழும் ஒரு சாதாரண பெண்ணின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாத வரை, அவருக்கு சரியான சமஉரிமை வழங்காத வரை நாட்டின் ஜனாதிபதியாக பெண்ணை அமரவைத்து அழகு பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.
    உண்மைதான் சகோ ஒருவித பயஉணர்வு இல்லாமல் பெண்கள் வீட்டிலிருந்து வெளிப்படுவது இல்லை என்று கிடைக்கும் பெண்மைக்கு விடுதலை.

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு தான் இந்த கட்டுரை, சகோதரியின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி!

      Delete