August 13, 2012

திருநங்கை - விழிப்புணர்வு தொடர் ஐந்து

 பாதை மாறும் பயணம்...

அன்புடையீர் வணக்கம்,

புரட்சிகளும், எழுச்சிகளும் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியவை. மாற்றம் என்றும் தேவை, இல்லையனில் மனிதன் என்பவன் இன்றும் கற்கால வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு மிருகங்களோடு ஒரு மிருகமாக காட்டில் உலாவிக் கொண்டுருப்பான். இன்றைய நவீன உலகில் பல்வேறு மாற்றங்கள் மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும் நிகழ்ந்து மனிதகுலத்தையே வியப்பில் ஆழ்த்திக்கொண்டு இருக்கிறது. திருநங்கைகளுக்கும் மாற்றம் வேண்டும், பழைய நிலையில் இருந்து புதியதோர் நிலைக்கு மாற வேண்டிய தருணம் இது சகோதரிகளே!

நவீன யுகத்திற்கு ஏற்ப நாமும் நம் அறிவிலும், திறமையிலும்  செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்போம். காலத்தோடு மாறும் நபர்களை தான் இந்த உலகம் வரவேற்கும் என்பதை நினைவில் கொள்ளவும். உலகில் தினமும் பல கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வியல் முன்னேற்றம் வேண்டி தினமும் தங்களின் தேவையை நிறைவேற்ற ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். நாமும் அவர்களுக்கு ஈடு கொடுத்து ஓடவேண்டும், இல்லையனில் பின்தங்கியே இருப்போம். மாற்றம் ஏற்பட மாற்றத்தை உருவாக்க நாம் தான் முனைந்திட வேண்டும்.

தொட்டு விடும் தூரத்தில்
வெற்றியிருக்கு அதை
தேடி பார்க்க உனக்கும்
புத்தியிருக்கு!
வென்று விடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்கு அதை
எதிர்கொண்டு வாழ உனக்கு
வீரமிருக்கு!
திருநங்கையாக பிறப்பது தவறில்லை. நாம் திருநங்கையாக பிறந்துவிட்டோம் என்று தினம் எண்ணி துவண்டு கவலையில் ஆழ்ந்து உறைந்து மனம் வெந்தது போதும். பிறந்துவிட்டோம்,  இனி வாழ்ந்து பார்ப்போம் என்கிற வைராக்கியம் மனதில் விதைத்து எதிர் வரும் சவால்களை மன திடம் கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும். பழைய பாதையில் பயணித்தது போதும் தோழிகளே, பாதையை மாற்ற வேண்டிய தருணம் இது, வாய்ப்பை தேடுவோம் இல்லையேல் நாமே வாய்ப்பை உருவாக்குவோம். திருநங்கைகளின் வாழ்வியல் முறைகள் மாற வேண்டிய தருணம் இது.எந்த ஒரு செயலும் செய்யும்போது தடைகள் வருவது இயற்கை. அந்த தடைகளை நாம் தோல்வியாக நினைக்காமல் வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும். நம்மை ஆதரிக்கும் கைகளுடன் கைகோர்த்து முன்னேற வழிக்கான வேண்டும். நம்மை இகழும், அவமான படுத்தும் நபர்களை பொருட்படுத்தாமல் நாம் நம் பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். காலம் மெல்ல மாறிவருகிறது. திருநங்கைகளும் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், நமக்கும் சமூகத்தில் பங்கு உண்டு என்பதை பறைசாற்றும் வகையில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

பிறப்பை நினைத்து
கலக்கம் வேண்டாம்
வாழ்வை நினைத்து
வருத்தம் வேண்டாம்
இழிவை நினைத்து
கலங்க வேண்டாம்
இன்னல்களை நினைத்து
பயமும் வேண்டாம்
நம்முடைய பொருளாதார சூழ்நிலையை உயர்த்த நாமே முன்வர வேண்டும். திருநங்கைகள் பல திறமைகள் கொண்டவர்கள். பல கலைகள் இயற்கையாகவே பெற்றவர்கள், அந்த சிறப்பு சாதாரண ஆணுக்கோ, பெண்ணிற்கோ கிடையாது. ஆடல், பாடல், ஓவியம், எழுத்து என்று பலரின் திறமை அறியபடாமலே முடிங்கி கிடக்கிறது. நம்முடைய கவலைகளும் சோகங்களும் மேலோங்கி இருப்பதால், பல திறமைகள் நாம் அடையாளம் காணாமல் முடிங்கி இருக்கிறோம்.  முடிங்கி இருந்தது போதும் சகோதரிகளே, சாதிக்க புறப்படுங்கள். பழைய நிலையில் இருந்து மாற வழி தேடுங்கள். எத்தனை கதவுகள் மூடபட்டாலும் ஒரு கதவாவது கண்டிப்பாக திறந்து இருக்கும் என்பதே அழுத்தமான உண்மையும் விதியும். நாம் தான் அந்த திறக்க பட்ட கதவை தேடாமல் மனம் சோர்ந்து விட்டுவிடுகிறோம். மன உறுதி கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நாமும் உலகில் சாதித்த பட்டியலில் இடம்பெறுவோம்.
 தடைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை
மனம் இல்லாமல்
மார்க்கமும் இல்லை
தோல்வி இல்லாமல்
வெற்றி இல்லை
வலி இல்லாமல்
பலனும் இல்லை

ஒரு திருநங்கை சாதனையாளர் பற்றிய பகிர்வு:-

இந்தியாவின் முதல் திருநங்கை மாநில சட்டமன்ற உறுப்பினராக சோஹாக்பூர் சட்டபேரவை தொகுதியில் மத்திய பிரதேச மாநிலத்தில் 1998 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினாராக தேர்ந்துதெடுக்கப்பட்டவர் ஷப்னம் மௌசி.  அவருடைய தந்தை காவல்துறை கண்காணிப்பாளர். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினாலும் பன்னிரண்டு மொழிகள் கற்க தவறவில்லை. தனது தொகுதியில் ஊழல், வேலையின்மை, வறுமை, மற்றும் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்தார். திருநங்கைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை எதிர்த்தும், எச்.ஐ. வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படுத்தினார். மக்கள் அவரை மௌசி (ஹிந்தியில் அத்தை என்பது பொருள்) என்று செல்லமாக அழைத்தனர். நான் ஒரு திருநங்கை, ஆனால் மற்ற ஊழல் படிந்த அரசியல்வாதிகளுக்கு ஒப்பிடுகையில் நான் அவர்களை விட சிறந்தவள் என்ற வாசகத்துடன் சுயட்சையாக தேர்தலில் நின்று வென்றார். நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை, சில நேரம் நினைக்கிறோம், பின்வாங்குகிறோம். பின்வாங்காமல் தன்னுடைய இலக்கை அடைபவர் சாதனை காண்கிறார், பின்வாங்குபவர்கள் சாதனை செய்பவரை பார்த்து வியக்குறார்கள்.அது தான் சாதனையாளருக்கும் சாதாரண நபருக்கும் உள்ள வேறுபாடு.

ஏளனமும் பேச்சுகளும் தெருக்கு தெரு மலிந்து கிடக்கிறது, அதை காதில் வாங்கி நடக்காமல் உங்களின் லட்சிய பாதையை மட்டுமே நோக்கி உங்கள் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டும். சாதித்த பலரும் பல வகையான துன்பங்களை கடந்து வந்தவர்களே. வெற்றி சிகரங்கள் எளிதில் கிடைக்காது. கடந்த வந்த பாதைகள் மிகவும் துயரமானவையே. கல்லடி படாத மரமும் இல்லை, சொல்லடி படாத மனிதரும் இல்லை. நமக்கு மட்டுமே வேதனை, வலி என்று நினைத்து கொண்டு இருந்தால் நாம் தெருவோரம் உள்ள குப்பை தொட்டி போல முடங்கி இருக்க வேண்டியது தான். அடுத்தவர் வந்து உதவுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம், நாம் தான் நம் வாழ்கையை வளமாக மாற்ற முற்பட வேண்டும் தோழிகளே! உங்களுக்கு விருப்பமான துறை எதுவாக இருந்தாலும் அதில் முழு உடன்பாடு, அற்பணிப்பு, கடின உழைப்பு, விட முயற்சி இருந்தால் கண்டிப்பாக நம் இலக்கை அடையலாம். பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதை மாற்றி புதிய பாதையை அமைப்போம் தோழிகளே!மாறுதல் ஏற்படும் போது சிரமமாக இருக்கும், ஆனால் அதன் பலன் சிறப்பாக இருக்கும்.

அன்பான சமுதாய மக்களுக்கு,
தங்கள் நிலையில் இருந்து மாற நினைக்கும் திருநங்கை சகோதரிகளுக்கு சமூகமும் நல்ல வரவேற்பை அளித்து, முடிந்த அளவு உதவிட நல்ல உள்ளங்கள் முன்வர வேண்டும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம். மனமுடைய பேசாமல், மனமுவந்து நீங்கள் வரவேற்க வேண்டும்.. ஏனென்றால் நாங்களும் வாழ பிறந்தவர்களே...திருநங்கைகளை பணிக்கு அமர்த்துங்கள், அப்போது தான் வாழ்வாதார சூழ்நிலை மாறும் தோழர் தோழிகளே!


அன்புடன்
ஆயிஷாபாரூக்