June 15, 2012

திருநங்கை - தொடர் இரண்டு

திருநங்கை விழிப்புணர்வு தொடர் - II

திருநங்கையும் கல்வியும்

 

அன்புடையீர் வணக்கம்!
              நான் எதிர்பாராத வகையில் அணைத்து தோழர் தோழிகளின் ஆதரவு "திருநங்கை - சமூக விழிப்புணர்வு" கட்டுரைக்கு கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் பல. முதல் தொடரின் வெற்றிக்கு நீங்களே காரணம், நீங்கள் எனக்கு கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அளவிடமுடியாதது. கட்டுரையை படித்து நல்ல விமர்சனங்களை தந்துள்ளிர்கள்.சில நண்பர்கள் கருத்துகளையும் பகிர்ந்தனர், மிக்க நன்றிகள்.இனி தொடரில் பயணிப்போம்.

    வாழ்வில் அனைவருக்கும் ஒரு வசந்த காலதருணம் பருவ வயதுக்காலம். பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பது தான் அப்போதைய பெரிய கடமை, குடும்பத்தில் பெரிய சுமை ஒன்றும் இருக்காது, படிப்பு முடிந்தவுடன் வேலை, திருமணம் என்று வாழ்க்கை சக்கரம் சுழலும் காலமே பொதுவாக சுமையான தருணம். தங்களுடைய பாலின மாறுபாடுகளால் மனதிற்குள் குழப்பத்துடன், சக நண்பர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் சிறுவர்களை என்ன சொல்வது? திருநங்கைகளின் பள்ளி கல்லூரி வாழ்க்கை முள் மேல் நடக்கும் நிகழ்வை போன்றது. மிகவும் கசப்பான அனுபவம் அது.

            பள்ளியில், கல்லூரியில் படிக்கும் சக நண்பர்கள் சிறப்பு பாலின மாணவர்கள்களை வேற்றுமையாக பார்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சில மாணவர்களை தவிர்த்து சிறப்பு பாலின மாறுபாடு மாணவர்களை பற்றி போதிய அறிவும் தெளிவும் இல்லை. பாலின மாறுபாடு குழப்பத்தில் உள்ள மாணவர்களை சக மாணவர்கள் புறக்கணிப்பது, கிண்டல் கேலிச்செய்து மனதை நோக அடிப்பது போன்ற செயல்கள் நீங்கள் கண்டிராமல் இல்லை, நினைவு கூர்ந்தாள் விளங்கும். சில சிறப்பு பாலின மாணவர்கள் இவ்வாறு தொடர்ந்து அவதிக்குள் ஆளாகி பள்ளி படிப்பையோ, கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்துகின்றனர். சிலர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை.

பள்ளி கல்லூரியில் எழும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணலாம்:-

             தங்களுக்கு பாலின பாகுப்பாடு பார்க்கப்படும், புறக்கணிப்பு, அவமான சூழ்நிலை பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது நேரிடலாம் என்ற அச்சத்தில் சிறப்பு பாலின மாணவர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்க செல்ல விரும்புவதில்லை.
  • பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு திருநங்கைகளை பற்றி அறிவு சார்ந்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • கிண்டல் கேலி செய்வது திருநங்கைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • பெண்களை கேலி செய்தால் தண்டிக்க சட்டம் உள்ளதை போல திருநங்கைகளை கேலி செய்தால் சட்டப்படி தண்டிக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • தமிழக பள்ளி கல்வித்துறை திருநங்கைகளை பற்றிய அறிவு சார்ந்த கல்வியை ஒரு பாடமாக மேல்நிலை படிக்கும் மாணவர்களின் சமூக பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.
  • இவ்வாறு மன பாதிப்புக்குள் உள்ளாகி அவதியுறும் சிறப்பு பாலின மாணவர்களுக்கு பள்ளி கல்வி துறை அலுவலர் அல்லது பள்ளி முதல்வர் மன அழுத்தம் நீங்க ஆலோசனை வழங்க வேண்டும்.
  • பள்ளி கல்லூரிகளில் இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் பயிலும் சிறப்பு பாலின மாணவர்களுக்கு படிப்பின் மீது போதிய கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
  • சிறப்பு பாலின மாணவர்கள் தங்களின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்தி கொண்டு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
  • பல திருநங்கைகள் பள்ளியில் கல்லூரியில் இத்தகைய அவமான சூழ்நிலை நிலவுவதால் படிப்பை தொடராமல், பாதியிலே படிப்பை நிறுத்துகின்றனர். இதுவே பெரும்பாலான திருநங்கைகள் கல்வி அறிவு பெறாததிற்கு முக்கிய காரணம். கல்வியறிவு இல்லாததால் வாழ்கையில் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
  • சமூகத்தில் நல்ல நிலையில் திருநங்கைகள் மதிப்புடன் வாழ அவர்களுக்கு கல்வி அவசியம் என்பதை சிறப்பு பாலின குழந்தைகளின் பெற்றோர் உணர வேண்டும்.
  • பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடன் பயிலும் திருநங்கைகளை அவர்களின் மனம் நோகாது, புறக்கணிக்காமல் வேற்றுமை காணாமல் பயில ஊக்குவிக்க வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் பயிலும் திருநங்கைகளை நல்வழி காட்டி கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் அன்பான வேண்டுகோள்.
  • பள்ளி கல்லூரியில் பயிலும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையுடன் மானியக்கட்டணத்தில் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் அன்பான வேண்டுகோள்.
திருநங்கைகளே கல்வியினால் பெறும் பயன்களை பாருங்கள்:-
  • திருநங்கைகள் நல்ல கல்வி பயின்றால் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிட்டும் என்பதை உணர வேண்டும்.
  • வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெறலாம்.
  • துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்ள தைரியம் கிடைக்கும்.
  • சமூகத்தில் ஒரு வேலை வாய்ப்பு பெற வழிகிடைக்கும்.
  • யார் துணையும் சாராமல் வாழலாம்.
  • கௌரவமாக வாழ வழி கிடைக்கும்.
திருநங்கைகளே படிக்கும் சமயத்தில் மன ஊளைச்சலுக்கு ஆளாகாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களுக்கான என் வரிகள் இதோ...

போராடு நங்கையே நீ போராடு
வாழ்க்கை உனதென்னி நீ வாழு
அறிவுக்கண் கொண்டு உலகைப்பாரு
வாழ்வில் முன்னேற வழிப்பாரு
கல்லாதார் பூமியில் வாழவழி ஏது?
கற்றபின் வாழ்வில் உயர்வாய் பலவாறு
சிந்தித்து எழுந்திரு நங்கையே
வாழ்வை வெல்வோம் பல எல்லையே !
போராடு நங்கையே நீ போராடு!

             அவமான பேச்சு, புறக்கணிப்பு, பாலின பாகுப்பாடு போன்றவைக்கு அஞ்சிடாமல் மனஉறுதியுடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படித்தால் திருநங்கைகள் கல்வியிலும் வெற்றிபெறலாம். நானும் என் தோழிகளும் மற்றும் சிறப்பு பாலின மாணவர்கள் பலரும் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது கசப்பான சூழ்நிலையே இருந்தது. அவமான பேச்சுக்கள், கேலி கிண்டல்கள், பாகுபாடுகள், புறக்கணிப்பு எனக்கு நேராமல் இல்லை, அவற்றை நான் மனஉறுதியுடன் எதிர்கொண்டு முதுகலை படிப்பு வரை சென்று சிறப்பான முறையில் தேர்சியுற்றேன். என்னால் முடியும் போது உங்களாலும் முடியும் தோழிகளே!

      தற்பொழுது கணிசமான திருநங்கைகள் சமூகத்தில் நல்ல நிலையை பெற போராடுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை சிறப்பான முறையில் செயலாக்கி தங்கள் திருமையானவர்கள் என்று சமூகத்தின் முன் நிருப்பிக்கிறார்கள். சமையல் பணி, பூ கட்டுதல், பலகார விற்பனைகள், தையற்கடை, இஸ்திரியிடல், காய்கறி வியாபாரம், சிற்றுண்டி கடை, பொட்டி கடை என்று பாரட்டப்படும் வகையில் திருநங்கைகள் இன்று செயல்படுகிறார்கள். என்னுடைய இந்த விழிப்புணர்வு படித்து ஒருவராது தங்களின் மனக்கதவை திறந்து திருநங்கைகளை நாங்கள் சமமாக மதிக்கிறோம், சமூகத்தில் அவர்களை அங்கமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதி எடுத்தால் கூட அது எனக்கு வெற்றி தான் தோழர் தோழிகளே!

      சமூகத்தில் 80 சதவித திருநங்கைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். கல்வி என்கிற முதல் ஆயுதமே சமூகத்தில் மதிப்பிற்கான முதல் திறவுக்கோல். கல்வியால் கண்டிப்பாக நமக்கும் நம்முடைய வாழ்கைக்கும் மாற்றம் ஏற்படும் என்பது என் அழுத்தமான கருத்து. அதனால் தான் கல்வியை பற்றி திருநங்கைகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவ சமுதாயத்திற்கும் இந்த விழிப்புணர்வு கட்டுரையை எழுதினேன். படிக்க வரும் திருநங்கைகளுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பது என் கருத்து! உங்கள் கருத்தும் அதுவாக இருந்தால் மிகவும் நலம்.

உங்கள் விமர்சனம் கேள்விகள் கருத்துகளை வரவேற்கிறேன்.

இந்த கட்டுரையை படித்த அணைத்து நண்பர்களும் தயவு செய்து உங்கள் மனநிலை கண்ணோட்டத்தை வலது பக்கத்தில் உள்ள கருத்து கணிப்பு பெட்டியில் பதிய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
விழிப்புணர்வு தொடரும்....
அன்புடன்
ஆயிஷா பாரூக்

9 comments:

  1. சிறப்பாக கூறியுள்ளீர்கள் தோழி. நன்றி... நம் போன்ற திருநங்கைகள் பால் உணர்வுகளை கட்டுபடுத்தி... மற்ற துறைகளில் சாதிக்கும்போது கண்டுப்பக நாம் இந்த சமுதாயத்தில் மதிப்புளவர்களாக மாறிவிடுவோம்... அந்தவகைஇல் நமக்கு நிறைய எடுத்து காட்டு உண்டு... உதாரணம் தோழி கல்கி... நாம் வெல்லும் காலம் தொலைவில் இல்லை தோழி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  2. வணக்கம் சகோ...
    நான் திருநங்கைகளை என் உடன் பிறப்பாய் இந்த பூமியில் என்னை போன்ற ஒரு சக உயிராக தன் நான் மதிக்கிறேன். கல்வி திருநங்கைகளுக்கு மிக மிக அவசியம். அதற்காக நான் உங்களோடு இறங்கி போராட தயார். நம் கட்டுரைகளை விட நம் வலியை உணர்த்தும் போராட்டங்கள் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். நானும் எனது நண்பர்களுக்கும் உங்கள் போராட்டங்களில் பங்கெடுத்து கொள்வோம். இந்த அரசுக்கு உங்கள் நிலையை எடுத்து சொல்லலும் போராட்டம் ஒன்று செய்வோம். சொல்லுங்கள் எவ்வகை போராட்டங்களை முன் நடத்தலாம். எனக்கு இன்னொரு வருத்தம் இருக்கிறது சகோ.... ஒவ்வொரு கடைகளும் ஏறி ஏறி மிரட்டி யாசகம் பெரும் திருநங்கைகளின் நிலையை மாற்ற இயலாதா? அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. திருநங்கைகளை சமமாக மதிக்கும் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. போராட்டங்கள் சிறந்த பலனை அளிக்கும், போராட்டம் நடத்தும் சமயம் உங்களை அழைக்கிறேன். அடாவடியாக பணம் பறிக்கும் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மிக மிக குறைவு, ஆண்களில் பெண்களில் சில தீயர் இருப்பது போல சில திருநங்கைகள் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடப்பது வேதனையானது. இவர்களின் செயலால் மற்ற எல்லா திருநங்கைகள் மீதும் எதிர்மறை எண்ணம் வேண்டாம் தோழரே! உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. Dear

    don't stop u can run in to human heart u can do anything

    ReplyDelete
    Replies
    1. Sure, Thanks a lot Aathimathi and Keep supporting always for this good cause.

      Delete