June 24, 2012

திருநங்கை - தொடர் மூன்று

திருநங்கையும்  சமுதாயமும் 


திருநங்கை விழிப்புணர்வு தொடர் - மூன்று  

அன்புடையீர் வணக்கம்,
           வெற்றி என்னும் ஒரு சொல் தோல்வியை தழுவியே உருவானது; நல்ல நிகழ்வுகள் அனைத்தும் தீய நிகழ்வுகளின் விளைவாக உதித்தவை, அது போல அறியாமை என்பதும் கற்பித்தல் மூலம் அகலக்கூடியவை. விழிப்புணர்வு அறியாமையை அகற்றும் ஒரு கருவியாகும். கடந்த இரண்டு தொடர்களின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பயணத்தை வெற்றியுடன் தொடர உங்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் பயணித்திருக்க முடியாது தோழர் தோழிகளே, நல்ல உள்ளங்களின் புரிதல் சமூகத்தில் நல்ல மாற்றம் மற்றும் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம். அதே மனக்கண்ணோட்டத்துடன் சமுகத்தில் சிலருக்கு திருநங்கைகள் மீதுள்ள எதிர்மறை எண்ணம் மாறும் என்கிற நம்பிக்கையில் உற்சாகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன்.

       திருநங்கைகளை பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயமாக சமூகம் இருந்துள்ளது. பல திருநங்கைகள் சமூகத்தின் பாதிப்பு தாக்கம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர். கேலி, கிண்டல், அவமானம், வேற்றுமை கண்ணோட்டம், புறக்கணிப்பு, அடக்குமுறை, பாலியல் கொடுமை என்று தொடங்கி சமுதாயத்தில் திருநங்கைகள் படாத துயரம் இல்லை. அந்த அளவிற்கு சமூகம் திருநங்கைளுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பெற்றோர் ஏற்கவில்லை என்ற நிலையில் மனமுடைந்து பல திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறி உலகில் எப்படியாவது வாழ வழி இருக்கும் என்கிற நம்பிக்கையில் அடுத்து அவர்கள் சந்திப்பது சமூகம் தான், அங்கும் கசப்பான சூழ்நிலை மற்றும் அனுபவம் ஏற்படுகிறது. இந்த சமூகமும் ஏற்காதபோது இந்த பிறப்பின் பயன் தான் என்ன, தன்னை இந்த உலகில் யாரும் ஏற்காத போது நாம் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்கிற சிந்தனைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட அப்பாவி திருநங்கைகளின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம், அது பத்திரிகையிலோ ஊடகத்திலோ காணாது. கணக்கில் இல்லாத குறிப்புகளுக்கு எங்கே அட்டவணை காண்பது நண்பர்களே! இது கசப்பான உண்மை!

சமுதாயத்தில் திருநங்கைகளை பாதிக்கும் விஷயங்கள் என்ன?
  • வேற்றுமை கண்ணோட்டத்துடன் பழகுவது.
  • இழிவான வார்த்தைகளால் மனதை புண்படும்படி கேலி, கிண்டல் பேச்சுக்கள். 
  • உயிரை திங்கும் அலட்சியப்பார்வை. 
  • பொது இடங்களில் புறக்கணிக்கபடுவது.
  • ஒருவரின் திறமையை அறியாமல் அவரின் பிறப்பின் அடையாளத்தை இழிவாக கூறி மட்டமாக நினைத்து பேசுவது.
  • சுயமரியாதையை கூட கொடுக்காமல் அவமதிப்பது. 
  • அடிப்படை வாழ்வாதார சூழ்நிலையே தராதது. 
சற்று கவனியுங்கள் தோழர்களே, ஒரு மனிதன் வாழ்வதற்கான சராசரி விஷயங்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு ஆண் பெண் வாழ முடியுமா? ஆனால் நாங்கள் வாழ்கிறோம், இத்தனை வலிகளையும் ரணங்களையும் மனதில் சுமந்து, முகத்தில் சிரிப்பைக்காட்டி சுயமரியாதையைக்  கூட கொடுக்க மறுக்கும் மனிதர்களின் மத்தியில்.. ஒரு சராசரி ஆணை பெண்ணை விட திருநங்கை அதிக திறமைகளை பெற்றவள், இதை என்னால் நிருபிக்க முடியும். ஆனால் எங்களின் திறமைகள் அறியபடாமலே, அறிந்தாலும் அலட்சியப்படுத்தி புறக்கணிக்கப்படுகிறது. ஒரு சாதாரண திருநங்கை கூட பல திறமைகளை பெற்றவளாக நான் பார்த்து இருக்கிறேன். சமுதாயத்தில் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் நிருபிக்கிறோம் எங்களின் திறமைகளை.

ஏன் பாலியல் தொழில், பிச்சை எடுத்தல்:-
        முன்பு எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு, அவமானம், இழிவான பேச்சுக்கள் என பல்வேறு அவலங்களை கண்டு திருநங்கைகள் தங்களின் வயிற்று பிழைப்புக்காக வாழ்வாதாரம் இல்லாமல் வேறு வழியின்றி விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்ற செயலில் தள்ளப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் யாரும் விரும்பி அந்த செயலில் எடுபடவில்லை. ஒரு சில திருநங்கைகள் கடைகளில் ட்ரெயினில் அடாவடியாக செயல்பட்டு பணம் பறிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. சில திருநங்கைகள் அப்படி அடாவடியாக செயல்படுவதை நானும் ஆதரிக்கவில்லை, நியாயப்படுத்தவில்லை. அப்படி ஒரு சிலரின் செயலால் ஒட்டுமொத்த திருநங்கைகளை குறைக்கூறி புறக்கணிப்பது நியாயம் ஆகாது, நல்ல வாழ நிலைகள் இருந்தும் ஆண்களில் பெண்களில் தீய செயலில் ஈடுபடுவோர் இல்லையா? அவர்களை போல தான் திருநங்கைகளில் ஒரு சிலரும் தீய செயலில் ஈடுபடுகின்றனர். வாழும் வழி உள்ள ஆண்களும் பெண்களும் இத்தகைய தீய செயலில் ஈடுபடும் போது வாழ வழி கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் ஒரு சில திருநங்கைகள் இத்தகைய செயலில் ஈடுபடுவது பெரிய வியப்பு இல்லை தோழர்களே! அதற்கு சமூகமே காரணம் முழு பொறுப்பு!

 உங்களால் முடியுமா?
          உங்கள் கடைகளில், உங்கள் அலுவலகத்தில், உங்கள் தொழிற்சாலைகளில் வேலை தேடி வரும் திருநங்கைகளை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு பணிக்கொடுங்கள். சில திருநங்கைகள் வேலைக்கு சென்ற இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் வேலையை விட்டு வெளியேறி பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தினர். இது என் தோழிக்களுக்கு நேர்ந்த சம்பவம். வேலை செய்யும் இடத்தில் திருநங்கைகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாங்களே மாற்றம் ஏற்படுத்துக்கிறோம் !
      தற்போது சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது. பெரும்பாலும் திருநங்கைகள் ட்ரெயினில், கடைகளில் பிச்சை எடுப்பது கணிசமாக குறைந்து வருகிறது, பாலியல் தொழில் உள்ள திருநங்கைகளும் தங்களின் நிலையை மாற்றி கொண்டு வருகிறார்கள். திருநங்கைகள் தங்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு நாட்டியம், ஊடகம், தன்னார்வ தொண்டு நிறுவனம், இட்லிக்கடை, பூக்கடை, பெட்டிக்கடை, தள்ளுவண்டிக்கடை, அழகு நிலையம், சுயஉதவி குழுக்களை அமைத்தல், சமையல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு தங்களின் நிலையை தாங்களே மாற்றி வருகிறார்கள். அப்படி சமுகத்தில் இருக்கும் திருநங்கைகளை ஊக்குவியுங்கள், அதரவுக்கொடுங்கள் தோழர்களே!
தோழிக்களுக்கான என் வரிகள்...
 

விடியல் வரும்மடி நமக்கு நங்கையே
புதுயுகம் படைப்போம் திருநங்கையே
மாறும் விடியலின் பொறியே நீயடி!
திறமையை முடக்காமல் விரைந்திடு
இழிவுப்பார்வையை சினம்க்கொண்டு அழித்திடு
வேற்றுமையை செயல்க்கொண்டு அகற்றிடு
களைந்திடு சோகத்தை திடம்கொண்டு
வாழ்ந்திடு சமுகத்தில் துணிவுக்கொண்டு
பெண்மையின் பெருமையை
உணர்த்திய பாரதி இங்கு உண்டு !
திருநங்கையின் வலிமையை
உணர்த்த சாரதி எங்கு உண்டு?
பாரதியும் சாரதியும் நாமேயடி
எழுந்திடு! துணிந்திடு! ஜெய்த்திடு!  


சமுகத்தின் போக்கு திருநங்கைகளின் வளர்ச்சியை பாதிக்ககூடாது. வளர்ந்த நாடுகளில் திருநங்கைகளை மக்கள் அரவணைத்து அவர்களுக்கு சமஉரிமை மற்றும் சமமதிப்பு கொடுத்து மதிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் சுழல் சற்று மாறினாலும் சில அடுக்குமுறைகள் திருநங்கைகள் மீது உள்ளது கண்டிக்கதக்கது. வேற்றுமை கண்ணோட்டம் விலக்கப்பட்டு சமூகம் ஆதரவு தந்து திருநங்கைகளின் உரிமையை பேணிக்காத்திடவேண்டும். சமஉரிமை மற்றும் சமமதிப்பு கொடுத்து திருநங்கைகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். நீங்களும் நானும் தான் இந்த சமூகம், உங்களின் ஒருவர் மனது வைத்து எங்களை சமுதாயத்தில் மதித்து அங்கீகரித்தால் அது மற்றவரின் மனக்கதவையும் திறக்கும், மாற்றம் மனதில் உதித்தால் செயலில் வெளிப்படும் அது நல்ல விளைவுகளையும் தரும் நண்பர்களே.    

சமூகத்தில் திருநங்கைகளை மதிக்கும் உங்கள் நிலை என்ன? என்கிற என் வலைப்பதிவின் கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான நபர்கள் 93 சதவிதம் திருநங்கைகளை சமமாக மதிப்பேன் என்றும் மிக சிலரே அதாவது 6 சதவிதம் நபர்கள் திருநங்கைகளை சமமாக மதிக்கமாட்டேன் என்றும் வாக்கு அளித்து தங்களின் மனநிலையை தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் சமூகத்தில் திருநங்கைகள் மீது ஆரோக்கியமான போக்கு நிலவி வருவதை குறிக்கும் ஒரு காட்சியாக அமைக்கிறது.

விழிப்புணர்வு தொடரும்...
அன்புடன்
ஆயிஷா பாரூக் 

உங்களின் கருத்து விமர்சனங்கள் போன்றவையை வரவேற்கிறேன் நண்பர்களே! 

June 22, 2012

ஒலித்திடு..


 என் எண்ணங்களின் எதிரொலி...
  • பிறருக்கு அன்பு செலுத்தும் நிமிடத்தை விட அன்புக்காக ஏங்கும் நிமிடமே வாழ்கையில் அதிகமாக இருக்கிறது. 
  • சமுதாயம் என்பது நாம் தான் தோழர்களே, அடுத்தவர் மாற்றம் ஏற்படுத்துவார் என்று காத்துநிற்பதை விட நாமே மாற்றத்தை தொடக்குவோம். சமுதாயம் மாற்றம் நம்மோட தான் தொடங்க வேண்டும். 
  • ஜாதியின் காரணமாக ஒதுக்குதல், மதம் காரணமாக ஒதுக்குதல் என மேடை போட்டு பேசும் தலைவர்கள், பேச்சாளர்கள் கூட திருநங்கை என்கிற இனத்தை ஆதரித்து பேசியதாக தெரியவில்லை.. உங்களின் சாதியும் மதமும் எங்களுக்கு வேண்டாம், நாங்கள் எந்த ஜாதியும் இல்லை மதமும் இல்லை, எங்களை வாழவிடுங்கள் என்று தான் காலம் காலமாக கதுறுகிறோம். திருநங்கைகளை கேலி செய்யும் ஆண்களும் பெண்களும் தயவுசெய்து நாங்களும் மனிதர்கள் தான் என்பதை உணருங்கள்.. பின்பு நீங்கள் மனிதநேயம் பற்றி மேடை போட்டு பேசலாம்.. மிருகங்களுக்கு பாதுக்காக கூட ரெட் கிராஸ் என்கிற அமைப்பு இருக்கிறது, எங்களின் பாதுகாப்புக்கு எதுவும் அரசு சட்டங்கள் இயற்றவில்லை. என்னும் எத்தனை ஆண்டுகள் இருளில் வாழ்வது....? 
  • தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் நம் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் மட்டும் குறையவில்லை.. தங்கம் விலை போல ஏழை மக்களின் வருமானம் ஏறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனமாக போகும் ஆண்கள் இனி திருமணத்தின் போது பெண்களின் குணத்தை மட்டும் பாருங்கள், அவர்கள் எத்தனை பவுன் நகை அணிந்து வருகிறார்கள் என்று பார்க்காதீர்கள்.. புன்னியமாகி போகும் உங்களுக்கு நண்பர்களே... 
  • ஓரிரு தவிர்த்து பெரும்பாலும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மக்களுக்கு சமூகத்தில் நடக்கும் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளையே முன்னிறுத்தி பருசுரிக்கிறது, இது ஒருவேளை அவர்களின் வயாபார யுக்திகாக இருக்கலாம்.. இப்படிப்பட்ட செய்திகள் சமூகத்தில் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று ஏன் சில பத்திரிக்கை நண்பர்கள் புரிந்துகொள்வது இல்லை? சிறிய விஷயங்களை மிகைபடுத்துவதும், மக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவதும் நல்ல பத்திரிகைக்கு அழகல்ல.. 
  • பல உயிர்கொல்லி நோய்களான டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கென்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுவை அடியோடு ஒழிப்பது கடினம். இது போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களில் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள் முழுவதும் கொசுவலைகள் கொண்ட ஜன்னல் கதவுகளை கட்டாயமாக்க வேண்டும். ஏழை மக்களுக்கு தரமான கொசுவலைகளை இலவசமாக வழங்கலாம். மக்களுக்கும் கொசு ஒழிப்பில் போதிய விழிப்புணர்வும் வேண்டும் :- வீட்டில் கழிவுதண்ணீரை தேங்க வைக்க கூடாது, தேவையல்லாத பழைய சாமான்களை அப்புறபடுத்தவேண்டும், குப்பைகளை குப்பைதொட்டியில் கொட்டி தினமும் அப்புறபடுத்த வேண்டும். சுகாதாரம் நம் ஓவ்வொருமிடமிருந்தே தொடங்குகிறது தோழர்களே... 
  • அறிவாக பேசுபவர்கள் பெரும்பாலும் வாழ்கையில் பின்தங்கியே இருப்பார்கள், இவர்கள் பேச்சை கேட்டவர்கள் இவர்களை விட முன்னேறி இருப்பர்.. 
  • வாழ்வின் ஓவ்வறு துளியும் பொன்னானது ஆனால் நாம் நம் அவசர தேவையின் போது மட்டுமே நேரத்தின் முக்கியத்தை உணர்கிறோம். நேரம் என்றுமே பொன்னானது தான்! நம் நேரத்தை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவோம் நண்பர்களே!!! 
  • பரிசுத்தமான பால், தூய்மையான தண்ணீர் போன்று அவள் மனம்.. களங்கமில்லா அன்பு, அளவிடமுடியா பாசம், உண்மையான அரவணைப்பு கொண்டவள் அன்னை.. நம் வாழ்வில் தேவதை அவள். 
  • தற்கொலை என்ற முடிவையும், தற்கொலை செய்யும் நபர்களையும் நான் என்றும் ஆதரிக்க மாட்டேன், தற்கொலை செய்வதினால் யார்க்கும் எந்த ஒரு பரயோஜோனமும் கிடையாது. தற்கொலை செய்தவருக்கும், அவரை நம்பி இருக்கும் குடம்பதிற்குமே அது மிக பெரிய இழப்பு, துயரம் எல்லாமே. தலைவர்களுக்காக பல தொண்டர்கள் தீக்குளித்து இறந்தார்கள், நாட்டுக்காகவும் தொண்டர்களுகாகவும் எந்த தலைவர் இதுவரை தீக்குளித்து இறந்து இருக்கிறார்? இன்னும் சிலர் நடிகர்களுகாக தீக்குளிகிறார்கள்... தமிழ்நாட்டில் இது போன்ற செயல் நடப்பது வேதனை மிகுந்த நிகழ்வாக இருக்கிறது. தமிழின தந்தை, தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறும் பல தலைவர்கள் நாட்டுக்காகவும் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உயிர்தயாகம் செய்வார்களா? இல்லை ஒரு சின்ன சூடாவது கையில் இடுவார்களா? தமிழனே விழித்திரு, மடமையை விலக்கி உனக்காக வாழ பழகு... நடிகர்காகவும் அரசியில் தலைவருகாகவும் வாழாதே!
  • ஒவ்வொரு நிமிடமும் உலகில் எட்டு பேர் அடுக்குமுறை பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க அகதியாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒருவர் தன்னுடைய நாட்டை விட்டு வீட்டை விட்டு இனம், மதம், தேசியம், ஒரு குறிப்பிட்ட சமூக குழு, அல்லது அரசியல் கருத்து பயம் காரணமாக அகதிகளாக அல்லது இயற்கை அல்லது மனித-உருவாக்கப்பட்ட பேரழிவுகள் விளைவுகளிருந்து தப்பிக்க தங்களுடைய நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் அகதிகள் என ஐக்கிய நாட்டின் படி குறிப்பு தருகிறது. 2011 ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி 15.2 மில்லியன் அகதிகள் உள்ளனர், அதில் 46 சதவிதம் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 48 சதவிதம் பெண்கள் அகதிகளாக உள்ளனர்.895000 பேர் தஞ்சம்-தேடுவோர் பட்டியலில் உள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக தமது வீடுகள் மற்றும் சமூகங்களிருந்து இருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.  
  • உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவில் 433 மில்லியன் மக்கள் US $1 குறைவான வருமானத்தை தினம் பெறுகின்றனர். உலகில் உள்ள ஏழைகளின் 36 சதவிதம் இந்தியாவில் வசிகின்றனர் - அதாவது மூன்றில் ஒரு பங்கு, இவர்களின் குழந்தைகள் 46 சதவிதம் உட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கிறது. உலக பசி பட்டினி அட்டவணை படி இந்தியா 67 வது இடத்தை வகிக்கிறது. உலகில் உள்ள முதல் 7 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட 41 கடனுள்ள ஏழை நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவே..
  • சீனாவில் வடக்கு யாங்கோன் மாகாணத்தில் உள்ள ஹ்லவ்க கிராமத்தில் உள்ள ஒரு சிறுமி கட்டிடவேலையில் செங்கல் சுமக்கும் காட்சி. UNICEFன் அறிவிப்புப்படி 5 முதல் 14 வயதுக்கொண்ட 250 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உலகம் முழுவதும் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். 70 முதல் 80 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளில் இத்தகைய சூழல் நிலவுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம்மாகும். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை எதிர்போம்!
  • சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம் என்று அழைக்கப்படுகிறது) சர்வதேச தொழிலாளர் இயக்கம் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் இதை கொண்டாடுகின்றன. பொதுவாக உழைப்பாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து மே தினத்தை 80 க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடுகின்றனர். இது ஒரு தேசிய விடுமுறை தினம் ஆகும். இந்தியாவில் முதல் மே தின கொண்டாட்டம் மே 1, 1923 அன்று இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சியால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவப்புப் கொடியை இந்தியாவில் முதல் முறையாக அந்த கட்சி பயன்படுத்தியது. லேபர் கிசான் கட்சி தலைவர் சிங்காரவேலு செட்டியார் இரண்டு இடங்களில் மே தின கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். ஒரு கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடற்கரை எதிரில் நடைபெற்றது; மற்றொரு கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. தொழிலாளர் கிசான் கட்சி சென்னையில் மே தின கொண்டாட்டங்கள் அறிமுகப்படுத்தியது. தோழர் சிங்காரவேலர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அரசாங்கம் விடுமுறை தினமாக மே தினம் அறிவிக்க வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச அரசியல் கட்சிகள் தொழிலாளர் இயக்கங்கள் இணைந்து மே தினத்தை கொண்டாடுகின்றன.   

June 15, 2012

திருநங்கை - தொடர் இரண்டு

திருநங்கை விழிப்புணர்வு தொடர் - II

திருநங்கையும் கல்வியும்

 

அன்புடையீர் வணக்கம்!
              நான் எதிர்பாராத வகையில் அணைத்து தோழர் தோழிகளின் ஆதரவு "திருநங்கை - சமூக விழிப்புணர்வு" கட்டுரைக்கு கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் பல. முதல் தொடரின் வெற்றிக்கு நீங்களே காரணம், நீங்கள் எனக்கு கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அளவிடமுடியாதது. கட்டுரையை படித்து நல்ல விமர்சனங்களை தந்துள்ளிர்கள்.சில நண்பர்கள் கருத்துகளையும் பகிர்ந்தனர், மிக்க நன்றிகள்.இனி தொடரில் பயணிப்போம்.

    வாழ்வில் அனைவருக்கும் ஒரு வசந்த காலதருணம் பருவ வயதுக்காலம். பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பது தான் அப்போதைய பெரிய கடமை, குடும்பத்தில் பெரிய சுமை ஒன்றும் இருக்காது, படிப்பு முடிந்தவுடன் வேலை, திருமணம் என்று வாழ்க்கை சக்கரம் சுழலும் காலமே பொதுவாக சுமையான தருணம். தங்களுடைய பாலின மாறுபாடுகளால் மனதிற்குள் குழப்பத்துடன், சக நண்பர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் சிறுவர்களை என்ன சொல்வது? திருநங்கைகளின் பள்ளி கல்லூரி வாழ்க்கை முள் மேல் நடக்கும் நிகழ்வை போன்றது. மிகவும் கசப்பான அனுபவம் அது.

            பள்ளியில், கல்லூரியில் படிக்கும் சக நண்பர்கள் சிறப்பு பாலின மாணவர்கள்களை வேற்றுமையாக பார்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சில மாணவர்களை தவிர்த்து சிறப்பு பாலின மாறுபாடு மாணவர்களை பற்றி போதிய அறிவும் தெளிவும் இல்லை. பாலின மாறுபாடு குழப்பத்தில் உள்ள மாணவர்களை சக மாணவர்கள் புறக்கணிப்பது, கிண்டல் கேலிச்செய்து மனதை நோக அடிப்பது போன்ற செயல்கள் நீங்கள் கண்டிராமல் இல்லை, நினைவு கூர்ந்தாள் விளங்கும். சில சிறப்பு பாலின மாணவர்கள் இவ்வாறு தொடர்ந்து அவதிக்குள் ஆளாகி பள்ளி படிப்பையோ, கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்துகின்றனர். சிலர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை.

பள்ளி கல்லூரியில் எழும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணலாம்:-

             தங்களுக்கு பாலின பாகுப்பாடு பார்க்கப்படும், புறக்கணிப்பு, அவமான சூழ்நிலை பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது நேரிடலாம் என்ற அச்சத்தில் சிறப்பு பாலின மாணவர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்க செல்ல விரும்புவதில்லை.
  • பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு திருநங்கைகளை பற்றி அறிவு சார்ந்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • கிண்டல் கேலி செய்வது திருநங்கைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • பெண்களை கேலி செய்தால் தண்டிக்க சட்டம் உள்ளதை போல திருநங்கைகளை கேலி செய்தால் சட்டப்படி தண்டிக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • தமிழக பள்ளி கல்வித்துறை திருநங்கைகளை பற்றிய அறிவு சார்ந்த கல்வியை ஒரு பாடமாக மேல்நிலை படிக்கும் மாணவர்களின் சமூக பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.
  • இவ்வாறு மன பாதிப்புக்குள் உள்ளாகி அவதியுறும் சிறப்பு பாலின மாணவர்களுக்கு பள்ளி கல்வி துறை அலுவலர் அல்லது பள்ளி முதல்வர் மன அழுத்தம் நீங்க ஆலோசனை வழங்க வேண்டும்.
  • பள்ளி கல்லூரிகளில் இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் பயிலும் சிறப்பு பாலின மாணவர்களுக்கு படிப்பின் மீது போதிய கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
  • சிறப்பு பாலின மாணவர்கள் தங்களின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்தி கொண்டு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
  • பல திருநங்கைகள் பள்ளியில் கல்லூரியில் இத்தகைய அவமான சூழ்நிலை நிலவுவதால் படிப்பை தொடராமல், பாதியிலே படிப்பை நிறுத்துகின்றனர். இதுவே பெரும்பாலான திருநங்கைகள் கல்வி அறிவு பெறாததிற்கு முக்கிய காரணம். கல்வியறிவு இல்லாததால் வாழ்கையில் தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
  • சமூகத்தில் நல்ல நிலையில் திருநங்கைகள் மதிப்புடன் வாழ அவர்களுக்கு கல்வி அவசியம் என்பதை சிறப்பு பாலின குழந்தைகளின் பெற்றோர் உணர வேண்டும்.
  • பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடன் பயிலும் திருநங்கைகளை அவர்களின் மனம் நோகாது, புறக்கணிக்காமல் வேற்றுமை காணாமல் பயில ஊக்குவிக்க வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் பயிலும் திருநங்கைகளை நல்வழி காட்டி கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் அன்பான வேண்டுகோள்.
  • பள்ளி கல்லூரியில் பயிலும் திருநங்கைகளுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையுடன் மானியக்கட்டணத்தில் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் அன்பான வேண்டுகோள்.
திருநங்கைகளே கல்வியினால் பெறும் பயன்களை பாருங்கள்:-
  • திருநங்கைகள் நல்ல கல்வி பயின்றால் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிட்டும் என்பதை உணர வேண்டும்.
  • வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெறலாம்.
  • துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்ள தைரியம் கிடைக்கும்.
  • சமூகத்தில் ஒரு வேலை வாய்ப்பு பெற வழிகிடைக்கும்.
  • யார் துணையும் சாராமல் வாழலாம்.
  • கௌரவமாக வாழ வழி கிடைக்கும்.
திருநங்கைகளே படிக்கும் சமயத்தில் மன ஊளைச்சலுக்கு ஆளாகாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களுக்கான என் வரிகள் இதோ...

போராடு நங்கையே நீ போராடு
வாழ்க்கை உனதென்னி நீ வாழு
அறிவுக்கண் கொண்டு உலகைப்பாரு
வாழ்வில் முன்னேற வழிப்பாரு
கல்லாதார் பூமியில் வாழவழி ஏது?
கற்றபின் வாழ்வில் உயர்வாய் பலவாறு
சிந்தித்து எழுந்திரு நங்கையே
வாழ்வை வெல்வோம் பல எல்லையே !
போராடு நங்கையே நீ போராடு!

             அவமான பேச்சு, புறக்கணிப்பு, பாலின பாகுப்பாடு போன்றவைக்கு அஞ்சிடாமல் மனஉறுதியுடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படித்தால் திருநங்கைகள் கல்வியிலும் வெற்றிபெறலாம். நானும் என் தோழிகளும் மற்றும் சிறப்பு பாலின மாணவர்கள் பலரும் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது கசப்பான சூழ்நிலையே இருந்தது. அவமான பேச்சுக்கள், கேலி கிண்டல்கள், பாகுபாடுகள், புறக்கணிப்பு எனக்கு நேராமல் இல்லை, அவற்றை நான் மனஉறுதியுடன் எதிர்கொண்டு முதுகலை படிப்பு வரை சென்று சிறப்பான முறையில் தேர்சியுற்றேன். என்னால் முடியும் போது உங்களாலும் முடியும் தோழிகளே!

      தற்பொழுது கணிசமான திருநங்கைகள் சமூகத்தில் நல்ல நிலையை பெற போராடுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை சிறப்பான முறையில் செயலாக்கி தங்கள் திருமையானவர்கள் என்று சமூகத்தின் முன் நிருப்பிக்கிறார்கள். சமையல் பணி, பூ கட்டுதல், பலகார விற்பனைகள், தையற்கடை, இஸ்திரியிடல், காய்கறி வியாபாரம், சிற்றுண்டி கடை, பொட்டி கடை என்று பாரட்டப்படும் வகையில் திருநங்கைகள் இன்று செயல்படுகிறார்கள். என்னுடைய இந்த விழிப்புணர்வு படித்து ஒருவராது தங்களின் மனக்கதவை திறந்து திருநங்கைகளை நாங்கள் சமமாக மதிக்கிறோம், சமூகத்தில் அவர்களை அங்கமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதி எடுத்தால் கூட அது எனக்கு வெற்றி தான் தோழர் தோழிகளே!

      சமூகத்தில் 80 சதவித திருநங்கைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். கல்வி என்கிற முதல் ஆயுதமே சமூகத்தில் மதிப்பிற்கான முதல் திறவுக்கோல். கல்வியால் கண்டிப்பாக நமக்கும் நம்முடைய வாழ்கைக்கும் மாற்றம் ஏற்படும் என்பது என் அழுத்தமான கருத்து. அதனால் தான் கல்வியை பற்றி திருநங்கைகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவ சமுதாயத்திற்கும் இந்த விழிப்புணர்வு கட்டுரையை எழுதினேன். படிக்க வரும் திருநங்கைகளுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பது என் கருத்து! உங்கள் கருத்தும் அதுவாக இருந்தால் மிகவும் நலம்.

உங்கள் விமர்சனம் கேள்விகள் கருத்துகளை வரவேற்கிறேன்.

இந்த கட்டுரையை படித்த அணைத்து நண்பர்களும் தயவு செய்து உங்கள் மனநிலை கண்ணோட்டத்தை வலது பக்கத்தில் உள்ள கருத்து கணிப்பு பெட்டியில் பதிய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
விழிப்புணர்வு தொடரும்....
அன்புடன்
ஆயிஷா பாரூக்

June 14, 2012

சே குவேர




 சே என்ற மக்கள் செல்லமாக அழைத்த
பன்முக பண்பாள நிகரில்லா தலைவனே
அர்ஜென்டினாவின் மார்க்சிச புரட்சியாளனே
கியூபா புரட்சியின் சரித்திர கதாநாயகனே
முதலாளித்துவத்தின் ஏகவலை பகைவனே
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புலியாய் சீறியவனே
பாடிஸ்டா அரசை தூக்கியெறிய முனைந்தவனே
ஃபிடல் காஸ்ட்ரோவின் தளபதியானவனே
படைப்பாற்றல் மிக்க புரட்சிக்கர எழுத்தாளனே
கெரில்லா போர்முறையில் புதுஏடு இயற்றியவனே.
எதிர்கலாச்சாரதின் சின்னமாக விளங்கியவனே
பொலிவியாவின் கிளர்ச்சிக்கு வித்திட்டவனே
பொலிவிராணுவத்தால் கொல்லபட்டாலும்
கிளர்ச்சி, புரட்சி, சோசலியத்தின் மருப்பொருளாய்
மக்களின் மனதில் என்றும் வாழ்பவனே
சே குவேர! காலத்தால் அழியாத் தலைவனே

June 13, 2012

அன்பு கணவனுக்கு.....


எனக்காய்  பிறந்தாயே
வாழ்வின் அர்த்தமாய்
மனதில் விதைதாயே
உயிர்வரை சென்றாயே
நினைவின் முழுமையாய்
நாளும் வாழ்ந்தாயே

நட்பாய்  நுழைந்தாயே
அன்பின் வடிவமாய்
உயிரில் கலந்தாயே
காதலாய் மலர்ந்தாயே
உணர்வின் பிம்பமாய்
வாழ்வில் இணைந்தாயே

இசையின் ராகமாக
ஆதார சுருதியாய்
லயத்தில் சேர்ந்தாயே
நடனத்தின் ஜதியாக
உள்ளத்தின் பாவமாய்
தாளத்தில் ஒலித்தாயே

அன்பின் வினையாக
ஈரேழு ஜென்மமாய்
என்னை தொடர்ந்தாயே
தவத்தின் பயனாக
அன்பு கணவனாய்
வாழ்க்கை அளித்தாயே 

ஆயிஷா பாரூக் 

June 12, 2012

சமூக அவலங்கள்


பெண்ணை விற்கும் சந்தையாம்
திருமண பந்த வியாபாரம்
வரதட்சனையை கைமாற்றி  
பெண்ணின் கழுத்தில் தாலிக்கட்டி
சீர் சனத்தை கையிலேந்தி
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

ஜாதிகள் பார்க்கும் கிராமமாம்
ஏற்ற தாழ்வுகள் ஏராளம்
இரட்டைக்குவளை நடைமுறையாம்
தீண்டாமையை விலக்காமல்
சமமாய் மனிதனை பார்க்காமல்
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

பலயினங்கள் வாழும் உலகமாம்
வேற்றுமை காணும் கண்ணோட்டம்
இனகொடுமை  அரங்கேற்றம்
உயிரை பறிக்கும் அநியாயம்
இன வெறியாட்டம் நிறுத்தாது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

உழைக்கும் வர்க்கம் அதிகமாம்
உழைப்பின் கூலியோ குறைவுத்தான்
பணக்கார முதலைகளுக்கு கொண்டாட்டம்
ஏழைகளின்பாடோ திண்டாட்டம்
அடங்கா ஏகாதிபத்தியத்தை எதிர்காது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

பெண்ணாய் பிறந்தால் பிரச்சனையாம்
சிசுகொலை செய்வது வழிமுறையாம்
ஆணாதிக்கம் மேலூங்கும் சமூகம்
பாலினப் பாகுப்பாடு  பார்க்காமல் 
பெண்ணுரிமையை பேணாமல்
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

ஜனநாயகம் வாழும் தேசமாம்
ஊழலில் மிதக்கும் அரசியிலாம்
பணத்திற்கு ஓட்டை போட்டு
ஏமாந்து தவிக்கும் மக்களை
அறிவு புகட்டி திருத்தாமல்
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

வானம் பார்க்கும் பூமியாம்
மழைக்கு ஏங்கும் விவசாயி
குறைந்து போச்சு விவசாயம்
மரங்களை வெட்டி நிலமாக்கி
பசுமை புரட்சி செய்யாது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...

பாலியல் கொடுமை ஒருபக்கம்
மதவெறி கூட்டம் மறுபக்கம்
ஏற்றுத்தாழ்வுகள் இங்கு ஏராளம்
பசிப்பட்டினியோ தாராளம்
கண்டும்காணாமல் சரிசெய்யாது
சிரிப்பாய் சிரிக்கிது சமுதாயம்...   

சமுதாயம் என்பது நாம் தான் தோழர்களே, அடுத்தவர் மாற்றம் ஏற்படுத்துவார் என்று காத்துநிற்பதை விட நாமே மாற்றத்தை தொடக்குவோம். சமுதாயம் மாற்றம் நம்மோட தான் தொடங்க வேண்டும் தோழர்களே!!!

அன்புடன்  
ஆயிஷா பாரூக்  

June 11, 2012

திருநங்கை - தொடர் ஒன்று

திருநங்கை - விழிப்புணர்வு தொடர்  (ஒன்று)

அன்புடையீர், வணக்கம்.....        
                    என்னுடைய "திருநங்கை - விழிப்புணர்வு தொடர்" என்கிற விழிப்புணர்வு தொடரை படிக்க வந்தமைக்கு மிக்க நன்றி. இந்த கட்டுரையை படிக்க என் வலைபதிவிற்கு நீங்கள் வருகை புரிந்ததே என்னுடைய முதல் வெற்றியாக கருதி மகிழ்ச்சியடைகிறேன். 


"மங்கையானவள் திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"
என்ற என் வரிகளில் திருநங்கைகளை புகழ் பாடி தொடங்குகிறேன்.
   
    மனிதன் உருவானது முதல் பலவித மாற்றங்கள் இவ்வுலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் மட்டும் மாறவில்லை, அத்தகைய காட்சிகளில் ஒன்று தான் திருநங்கையை சமூதாயம் ஒதுக்குவது. உங்கள் வாழ்கையில் திருநங்கைகளை பற்றி அறிமுகப்படாமல் இருந்திருக்க முடியாது. ஒரு சிலருக்கே திருநங்கைகளை ஏற்கும் மனோபாவம் இருக்கிறது. பலருக்கு திருநங்கைகளை பற்றி புரிதலோ உணர்தலோ இல்லை. அவர்களின் மனதில் திருநங்கைகளை பற்றி அறியபடாமல் தவறான கண்ணோட்டமே மேலோங்கி நிற்கிறது. திருநங்கைகள் பற்றி போதிய விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இல்லை. திருநங்கைகளை பற்றி படமோ, காட்சியோ, புத்தகமோ ஊடகத்தில் வெளிவந்தால் கூட ஒரு சில மக்களுக்கு மட்டுமே திருநங்கைகளை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் இருக்கிறது, வரவேற்கிறார்கள். அப்படி ஏன் ஒரு பாலினத்தை பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளாமல் ஒதுக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும். என்னுடைய இந்த தொடர் கட்டுரையை தயவு செய்து முழுவதும் படியுங்கள், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின், பாலினத்தின் அறைகூவல் தான் என் எழுத்துகளாக உங்கள் கண்முன்னே காட்சியளிகிறது. 

பழைய வரலாறு:-
இடைப்பட்ட கற்காலத்தில் திருநங்கைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன, 9660 - 5000 கி.மு வில் வரையப்பட திருநங்கை கற்சிற்பம்  சிசிலி நாட்டில் கண்டு பிடித்துள்ளனர். வெண்கல காலத்தில் 7000 - 1700 கி.மு வில் வரையப்பட திருநங்கை ஓவியங்கள்
கண்டறியப்பட்டுள்ளது.  

திருநங்கைகள் பாலினம் எப்படி உருவாகிறது ?
            ஒரு கரு ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பது இல்லை, கற்பபையில் கரு உருவாகும் போது நிறமூர்த்தங்கள் (Chromosomes) தீர்மானிக்கிறது. 
XY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், XX நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழந்தையாகவும், XXY அல்லது XYY கருவில் சேர பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியான உண்மை.ஒரு சில சமயங்களில்  குழந்தை பிறந்த பின்னும் ஹோர்மோன்ஸ் ஏற்ற தாழ்வுகள் உடம்பில் ஏற்பட்டால் சில நேரம் XY நிறமூர்த்தங்கள் கூட மூன்றாம் பாலினமாக மாறலாம்.மூன்றாம் பாலினத்தில் நாம் தற்போது திருநங்கையை பற்றிய கட்டுரையை தான் படித்துகொண்டு இருக்கிறோம்.


திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.

                பலருக்கு உள்ள பொதுவான சந்தேகம் திருநங்கைகள் பிறக்கும் போது ஆண்குறியுடன் பிறப்பார்களா இல்லை பெண் குறியுடன் பிறப்பார்களா என்பது. திருநங்கை என்பவள் ஆண் குறிகொண்ட குழந்தையாகத்தான் பிறக்கிறாள். ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது தன் உடலில் பெண்ணிற்கான குணாதிசியங்கள், நிறமூர்த்தங்கள் இருக்கிறது என்று, அந்த குழந்தை வளர வளர அந்த ஹோர்மோன்ஸ், நிறமூர்த்தங்களின் செயல்பாடு வெளிப்பட ஆரம்பிக்கும்.
            திருநங்கையான அந்த சிறுவனுக்கு 13 வயது அல்லது  பருவ வயது (ஹோர்மோன்கள் சுரக்கும் தருணம்) ஆரம்பிக்கும் பொழுது உடலில் தன்னையே அறியாமல் பெண்மைக்கான குணாதிசயங்களை உணர முடியும். பெண்களை போல பேசுவது, பெண்களை போல நடப்பது, பெண்களை போல செயல்கள் புரிவது போன்றவை மனதளவிலே அரும்புவிட ஆரம்பிக்கிறது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு பாலியல் தடுமாற்றம் ஆரம்பிக்கும் தருணம். அந்த சிறுவன் தான் ஆண்மகனா இல்லை பெண்மகளா என்று தனுக்குள் சந்தேகம் ஏற்படும். அந்த சிறுவன் தன்னுடன் உள்ள சக சிறுவர்களை போல தன்னை ஆணாக உணராமல் பெண் குழந்தையாக உணரும். அந்த குழந்தை படும்பாட்டை, குழப்பத்தை உணராத சுற்றும் அந்த குழந்தையை கேலியும் கிண்டலும் புரிந்து மனதை காயபடுத்துவர். அந்த சுழலில் தனுக்கு உண்டான பாலியல் மனமாற்றம் பற்றி என்ன செய்வது யாரிடும் போய் இதை கூறுவது என்பது கூட புரியாது, தெரியாது. சொன்னால் யாரும் தன்னை தவறாக நினைத்துவிடுவார்களோ என்று மனதிற்குள் பயந்து அழுது அந்த குழந்தை வாழும் அத்தருணம் மிக கொடுமையானது.

163 நாடுகளில் திருநங்கைகளை அங்கிகாரம் செய்துள்ளனர், இவை பெரும்பாலும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஆகும்.  
            உடல் ஊனம் என்றால் குழந்தை பிறந்த பின் தெரிந்து கொள்ளலாம், பாலியல் ஊனத்தை வெளிப்படையாக பெரியவர்களே தயங்கி பேசும் போது அந்த சிறுவனால் தான் ஆண் இல்லை  என்றும் பெண்மை உணர்வுகள் கொண்ட திருநங்கை என்பதை எப்படி கூற முடியும், அப்படி கூறினால் வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தை விளையாட்டாக கூறுகிறது என்று சும்மா விடுவர் இல்லையேல் அந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி மாறச்சொல்லுவார்கள், எப்படி மாற்ற முடியும் தன் உள்ளே இயற்கையாக உருவான குணாதிசயங்களை சற்று சிந்தியுங்கள்... அத்தகைய தருணத்தில் செய்ய வேண்டியது என்ன...
           
இத்தகைய தருணத்தில் பெற்றோர் என்ன செய்யலாம்
உடலூனம் உள்ள குழந்தை பிறந்தால் பெற்றோர்கள் எப்படி  ஏற்றுக்கொள்வார்களோ அதை போல இந்த பாலின அடையாளம் கோளாறு அல்லது பாலின அடையாள குழப்பம், பாலினம் பதட்டநிலை என்று பல்வேறு பெயர்களால் அறியப்படும் மாற்று பாலின குழந்தைகளை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 30,000 ஆண்களில் ஒருவருக்கு இந்த பாலின கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 


  • பொதுவாக பெற்றோர்களுக்கு திருநங்கை குழந்தை பற்றி போதிய அறிவின்மை மற்றும் தெளிவின்மையே இதற்கு முக்கிய காரணம். 
  • தங்கள் குழந்தை எத்தகைய மனநிலைமை கொண்டு இருக்கிறது என்பதை பெற்றோர் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும். தங்கள் குழந்தையை பற்றி  நன்கு புரிதல் வேண்டும்.
  • 13 அல்லது பருவ வயது சிறுவன் பெண்களை போல செயல்கள், நடவடிக்கை கொண்டு இருந்தால் அந்த குழந்தையை துன்புறுத்தாமல் பயமுறுத்தாமல் அவனுடைய நடவடிக்கைகளை சற்று கூர்ந்து கண்காணிக்க வேண்டும். அக்குழந்தையின் செயல்கள் இயற்கையாக உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கவும்.
  • அந்த குழந்தையிடம் மனம்விட்டு பேசவும்.
  • தோழமையுடன் பழகவும்.
  • பெற்றோர்கள் ஆதரவாக இருப்பதை அந்த குழந்தைக்கு உறுதிபடுத்தவும்.
  • மனநல மருத்துவர், பாலியல் மருத்துவரிடம் தங்கள் குழந்தையை பற்றி கலந்து ஆலோசித்து அந்த குழந்தை பாலின குறைபாடுடன் பிறந்து இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • மருத்துவர் குழந்தைக்கு பாலியல் குறைபாடு உள்ள மூன்றாம் பாலினம் என்று உறுதிப்படுத்தினால் பெற்றோர்கள் முதலில் அதை நன்கு புரிந்துக்கொண்டு தங்கள் குழந்தையை மனதார   ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். இதுவும் ஒரு வகை குறைபாடு தான், ஊனம் போல.
  • உங்களின் குழந்தை திருநங்கை என்று நீங்கள் அறிந்தால் தயவு செய்து மனதார ஏற்றுக்கொள்ளுங்கள், புறக்கணிக்க வேண்டும். அவமானப்படும் விஷயம் இல்லை திருநங்கை. சராசரி ஆண் பெண் குழந்தைகளைவிட திருநங்கை குழந்தைகள் பல்வேறு திறமைகளை, சிறப்பு இயல்புகள்  பெற்றவர்கள்.  
  • பெற்றோர்களே ஒன்றும் அறியாத அக்குழந்தையை துன்புறுத்தாமல், அக்குழந்தையை அவமானமாக கருதாமல் மனிதநேயத்தோடு அக்குழந்தைக்கு உறுதுணையாக இருக்க பழகுங்கள்.
  • மருத்தவரின் ஆலோசனைப்படி பெற்றோர்,(திருநங்கை)சிறுவனின் விருப்படி 18 வயதிற்கு மேல் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.அந்த பாலியல் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அச்சிறுவன் திருநங்கையாக மாறுவாள். வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தையின் மனநிலையை நன்கு புரிந்துகொண்ட பின் முடிவுஎடுக்கவேண்டும். 
சமிபத்திய திருநங்கைகள் கணக்குஎடுப்பில் தமிழகத்தில் மட்டும் 30,000 திருநங்கைகள் அரசு பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். திருநங்கைகள் கணக்குஎடுப்பில் இதுவே முதல் முறையாகும்.
பெற்றோர்க்கு கேள்வி ?

பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள்:
  • பிறப்பால் பாலின கோளாறுடன் பிறந்த குழந்தை செய்த தவறு தான் என்ன?
  • ஏன் அந்த குழந்தையை நீங்கள் புறக்கணிக்க வேண்டும், உங்களை விட்டால் அந்த குழந்தைக்கு ஏது போக்கிடம் என்று சிந்தித்து இருக்கிறிர்களா? 
  • சொந்த பெற்றோரே அந்த குழந்தையை புறக்கணித்தால் அதன் வாழ்வியல் வழி தான் என்ன?
  • ஏன் அந்த குழந்தையை ஏற்க மனம் வரவில்லை?
  • அந்த குழந்தையை ஏன் அவமானமாக நினைக்கவேண்டும்?
அது இயற்கையின் பிழை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். 

பெரும்பாலும் திருநங்கைகள் பெற்றோர்களால் ஒதுக்கப்படுகின்றனர். அப்படி ஒதுக்கப்பட்ட திருநங்கைகளுக்கு திருநங்கை சமூதாயம் மட்டுமே ஆதரவு தருகிறது.
1991 இல் வந்த Bombay digest மற்றும் 2009 இல் வந்த PINK PAGES மூன்றாம் பாலினத்திற்காக வந்த இதழ்கள் ஆகும்.
 தன்னை பெண்ணாக உணரும்  (திருநங்கை) குழந்தைகள் என்ன செய்யலாம்?
  • பருவவயதை அடைந்தவுடன் ஆணாக இருந்தால், உங்களுக்கு பெண்கள் மேல் ஈர்ப்பு வரும். அதே (திருநங்கை) குழந்தையாக இருந்தால் பெண்ணின் மேலே ஈர்ப்பு இல்லாமல் சக ஆண்கள் மேலே ஈர்ப்பு வரும். உங்களுக்கு அத்தகைய சக பாலினர் மீது ஈர்ப்பு இருந்தால், இது இயற்கையின் நிகழ்வு.
  • உங்களுக்கு பெண்களை போல ஒப்பனை செய்ய ஆர்வம் இருக்கும். பெண்களின் செயல்கள் அனைத்தும் செய்ய தானாகவே விருப்பம் மனதில் தோன்றும். நீங்கள் உங்களை பெண்ணாக உணருவீர்கள். உங்களுக்கு ஆணுடலும் மனது பெண்மையும் கொண்டது.
  • இது ஒரு உடலியல் குறைபாடே, அவமான செயல் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்களின் மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள், தைரியிமாக இருக்கவும்.
  • உங்களின் வாழ்கையை நினைத்து கவலை கொள்ளவேண்டாம். பிறந்து விட்டோம் வாழ்ந்து விடுவோம் என்று நினைக்கவும். தன்னம்பிக்கையை வளர்க்கவும். வாழ வழியுண்டு மனமுடைய வேண்டாம்.
  • உங்கள் வீட்டில் யார் அதிகமான அன்புடன் இருப்பார்களோ, அவர்களிடம் தயங்காமல் உங்களின் மனதில் உள்ள விஷயங்களை கூறவும்.
  • மனம் விட்டு உங்களின் உணர்வுகளை வெளிப்படையாக கூறவும். கூச்சமோ தயக்கமோ பயமோ வேண்டாம்.
  • வீட்டில் உள்ள பெரியவர்களிடம் முறைப்படி கலந்து ஆலோசித்து, அவர்களின் சம்மதம் பெற்று மருத்துவரிடம் தகுந்த அறிவுரையின் பெயரில் தனக்கு விருப்பம் இருந்தால் பாலின மாற்று சிகிச்சை செய்துக்கொள்ளலாம். 
வரும் சனிக்கிழமை...
சமூக விழிப்புணர்வு தொடரும்....

உங்களின் விமர்சனமும் கருத்துக்களும் கேள்வியும் சந்தேகங்களையும் வரவேற்கிறேன்..
 
அன்புடன் 
ஆயிஷா பாரூக்